PUBLISHED ON : பிப் 17, 2020

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் வழங்கப்படும் 'ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை' இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் (27 வயது) தட்டிச் சென்றுள்ளார். இந்த விருது, 1999ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கௌரவமிக்க இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை இவர் பெறுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியைத் தகுதிபெற வைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். நடுகள வீரரான இவர், இதுவரை 260 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
2012 மற்றும் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார். இதற்காக நடத்தப்பட்ட தேர்வில், தேசிய விளையாட்டு சங்கத்தினர், ஊடகத்தினர், ரசிகர்கள், வீரர்கள் ஆகியோர் வாக்களித்தனர். அதன் அடிப்படையில் 35.2 சதவீத வாக்குகள் பெற்று, விருதுப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்குப் போட்டியாக இருந்த ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) 19.7 சதவீத வாக்குகளும், லுகாஸ் வில்லா (அர்ஜென்டினா) 16.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
“சர்வதேச விருது வென்றது மகிழ்ச்சி. இதைச் சக வீரர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் இவ்விருதைப் பெற்றிருக்க முடியாது.” என்று மன்பிரீத் சிங் கூறினார்.

