PUBLISHED ON : பிப் 04, 2019

பங்குச் சந்தை முதலீடுகளைப் பற்றிப் பேசுபவர்கள், 'சீன மூங்கில் உத்தி' என்று குறிப்பிடுவார்கள். சீன மூங்கில் எந்த வகையில் உசத்தி?
புல் (grass) இனத்தைச் சேர்ந்த தாவரம் மூங்கில். சீனாவுக்கும் மூங்கிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மூங்கில் மரங்கள் அங்கு வளர்கின்றன. அதனால்தான் “மூங்கில்களின் உலகம்” என்ற புகழ்ப் பட்டத்தை சீனா பெற்றது. மூங்கில்களில் பல வகைகள் உண்டு. அதிலும் குறிப்பாக 'சைனீஸ் பாம்பூ' (Chinese bamboo) ரக மூங்கில் சீனாவின் ஸ்பெஷல் அடையாளங்களில் ஒன்று. Dendrocalamus giganteus என்பது இதன் தாவரவியல் பெயர்.
முளைக்காத மூங்கில்
சீன மூங்கில் வளர்வதற்கு செழிப்பான மண்ணும், தண்ணீரும், சூரிய வெளிச்சமும் தேவை. இவை அனைத்துமே சரியாய் அமையப் பெற்றது சீனா. மூங்கிலின் விதைகள் மண்ணில் விதைக்கப்படுகின்றன. தண்ணீர் ஊற்றி உரமிட்டாலும் மூங்கில் முளைப்பதற்கான அறிகுறியே வெளியே தெரியாது. மாதங்கள் அல்ல; ஐந்து ஆண்டுகள் ஆனாலும் இந்த விதை முளைக்காது.
வலிமையான வேர்
சீனா மூங்கில் மரம், மண்ணில் வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டுதான் மேலே முளைவிடும். நீங்கள் ஊற்றிய தண்ணீர், சிறப்பு பராமரிப்பு எல்லாமே வலிமையான வேர்ப் பகுதியை உருவாக்கத்தான்.
ஐந்தாவது ஆண்டில் மூங்கில், கொடுக்கும் பலனுக்கு வேர்தான் பலம். அடுத்தடுத்த ஆச்சரியங்கள் ஐந்தாவது ஆண்டில்தான் நமக்குக் கிடைக்கும்.
அதுவும் எப்படி? நாம் சற்றும் எதிர்பாராத வேகத்தில் தினசரி இரண்டு அடி என்கிற கணக்கில் மூங்கில் கிடுகிடு வளர்ச்சி காட்டும். அதுவும் தொடர்ச்சியாக 45 நாட்கள் முதல் 55 நாட்கள் வரை வளரும்.
அதிவேகத்தில் வளரும் சீன மூங்கில்கள் 90 - 135 அடி உயரம் வரை வளர்ந்து நிற்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவகை மூங்கில்களைவிட சீனா மூங்கில் வணிகரீதியாக ஏராளமான பலன்களைக் கொடுக்கின்றன. இந்தியாவில் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சீன மூங்கில்கள் பெருமளவு வளர்க்கப்படுகின்றன.