PUBLISHED ON : ஜூலை 30, 2018

அன்று ஏதோ ஒரு வேலையாக, பிளஸ் 2 வகுப்பறையைக் கடந்து போக வேண்டியிருந்தது. கணித ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டே போகும்போதுதான் அந்த ஆச்சரியம் என் கண்ணில் பட்டது. கடைசி வரிசையில் மாணவர்களோடு மாணவராக உமா மிஸ். ஒரு கணம் நின்றுவிட்டேன்.
பாடம் படிக்கிறார்களா? அல்லது மாணவர்கள் பாடத்தைக் கவனிக்கிறார்களா என்று கண்காணிப்பதற்காக உட்கார்ந்திருக்கிறார்களா? ஓவியாவிடமும் ஜாடையில், உமா மிஸ் உட்கார்ந்திருப்பதைக் காண்பித்தேன். ஓவியாவின் புருவங்களும் சட்டென உயர்ந்தன.
உமா மிஸ் கவனமாக வகுப்பு ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் ஆர்வம் என்னை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. உடனே கேட்க முடியாது என்பதால், அடுத்து வந்த இடைவேளை வரை காத்திருந்தேன்.
ஆசிரியர்களின் அறையில் உமா மிஸ் இருந்தபோது, அருகே போய் விசாரிக்கத் தொடங்கினேன்.
“ஓ, அதுவா! எனக்கும் ஒரு பயிற்சி வேணுமில்ல! அதுக்குத்தான் போய் உட்கார்ந்தேன். நீங்க என்னவெல்லாம் சிரமப்படுவீங்கன்னு எனக்கும் தெரியணுமில்ல.”
இது வித்தியாசமான பதிலாக இருந்தது. ஆசிரியர்கள் எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் என்ற எண்ணத்தை உமா மிஸ் ஆட்டிப் பார்ப்பது போல் தோன்றியது. அப்படித்தானா என்று கேட்டபோது, உமா மிஸ் விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.
“பொதுவாகவே கணிதம் சொல்லிக் கொடுக்கறதுல ஒரு சில கெட்டி தட்டிப்போன எண்ணங்கள் உண்டு. ஒருசிலரால தான் கணிதம் படிக்க முடியும், புரிஞ்சுக்க முடியும்ன்னு நினைக்கற நிறைய ஆசிரியர்கள் இருக்காங்க. கணிதத்துக்கு அடிப்படை தர்க்கம். தர்க்க ரீதியான புரிதல் முறை இருந்தாத்தான், கணிதம் வரும்ன்னு நினைக்கறவங்களும் இருக்காங்க.
அதனால தான் பல பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முதல்ல ஆசிரியர்கள் தங்களோட மனநிலையை மாத்திக்கணும். இதுக்காக, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துல ஓர் ஆய்வு நடந்திருக்கு.
நாற்பது பள்ளி ஆசிரியர்களை அழைச்சு, அவங்களையே மாணவர்களாக மாத்தி, வகுப்பறையில உட்கார வெச்சிருக்காங்க. இது ஆன்லைன் வகுப்பறை. நேரடி கிளாஸ் இல்ல. ஆனால், இங்கேதான் வித்தியாசம் ஏற்பட்டுச்சு. மாணவர்களாக இருந்தால் என்னென்ன சந்தேகங்கள் வரும், குழப்பங்கள் வரும், புரிந்துகொள்வதில் சிரமங்கள் ஏற்படும்ன்னு புரிஞ்சுக்கிட்டாங்க.
ஆசிரியராக இருந்து சொல்லிக்கொடுக்கும்போது, ரொம்ப தெளிவாகச் சொல்லிக்கொடுக்கறதா நினைச்சுக்குறோம். ஆனால், அதே மாணவரோட இடத்துல இருந்து அதையே அனுபவிச்சுப் பார்த்தா, ஆயிரம் கேள்வி எழும்.
அப்போ எப்படிச் சொல்லிக்கொடுக்கறது? எப்படிப் புரிய வைக்கறது? அதுக்கு இருக்கக்கூடிய புதிய புதிய உத்திகள் என்னன்னு தெரிஞ்சுக்கத் தொடங்குவோம். முதல்ல மாணவர்களைக் குறை சொல்லக்கூடிய, அவர்களுடைய திறனை மட்டம் தட்டுற எண்ணம் மாறும். இரண்டு, புதிய உத்திகளை முயற்சி செய்து பார்க்கறதுக்கான உத்வேகம் கிடைக்கும்.
பலன் என்ன தெரியுமா? இந்தப் பயிற்சியில் கலந்துக்கிட்டு வெளியே போன ஆசிரியர்கள், தங்கள் வகுப்பறையையே மாற்றி அமைச்சு இருக்காங்க. விளைவு, அவங்ககிட்ட படிச்ச மாணவர்களோட கணித மதிப்பெண் கணிசமாக உயர்ந்துடுச்சு. கணிதம் புரியாதவங்கன்னு ஒருத்தரும் இல்ல.
ஆனால், ஒவ்வொருவரும் கத்துக்கற, புரிஞ்சுக்கற விதங்கள் வேறவேற. அதற்கு ஏற்ப, புதிய முறைகளில் சொல்லிக் கொடுத்தா, அவங்களும் புரிஞ்சுக்கிட்டு கூடுதல் மதிப்பெண் பெறுவாங்க என்பது நிரூபணமாச்சு.
இது கணிதப் பாடத்துல மட்டுமில்ல, ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கு. குறிப்பாக ஏழை எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கு.
நிறைய விஷயங்கள் ரொம்ப சிரமமானவை. அவை மாணவர்களுக்கு எளிமையா புரிஞ்சுடும்ன்னு நினைச்சுக்கிட்டோ, பாடங்களைக் குறித்த நாட்களுக்குள்ள முடிக்கணுமேங்கற அவசரத்தாலோ, ஆசிரியர்கள் வேகமாக ஓடறாங்க. அங்கே கொஞ்சம் நிறுத்தி, ஒவ்வொண்ணும் மனசுல போய் பதிஞ்சுதான்னு சோதனை செய்து பார்த்துட்டு மேலே நகர்ந்தால், கணிதம் இல்ல எந்தப் பாடத்துலேயேயும் எந்த மாணவனும் பின்தங்கவே மாட்டாங்க.
இது ஒருவிதமான சுய பரிசோதனை. மாணவனாக இருந்து பார்க்குற முயற்சி. முடிஞ்சபோதெல்லாம் நான் இதைச் செய்து பார்க்கறேன். கிளாஸ்ல உட்காரும்போதுதான் புதுசா ஐடியா கிடைக்கும். அதை என்னோட வகுப்பறையில் முயற்சி செஞ்சு பார்ப்பேன்.” என்ற உமா மிஸ் கொஞ்சநேரம் யோசித்துவிட்டுச் சொன்னார்,
“தர்க்கம் முதற்கொண்டு எல்லாத்தையுமே சொல்லிக் கொடுக்க முடியும். யாரையும் நான் குழந்தை மேதைகள்ன்னு சொல்ல மாட்டேன். முறையான பயிற்சியும் ஈடுபாடும் தொடர்ச்சியான ஊக்கமும் மதிப்பீடும் இருந்தால், கணிதம், தத்துவம் போன்ற பாடங்களைக்கூட சுலபமாகப் புரியவெச்சுடலாம். அதற்கப்புறம், மாணவர்களுக்கே ஆர்வம் பிறந்துடும். அவங்க பதினாறு அடி, முப்பத்திரெண்டு அடி கூட பாய்வாங்க.”
வகுப்பறை எவ்வளவு அழகான இடம் என்பதை என்னால் மீண்டும் உணர்ந்துகொள்ள முடிந்தது. உமா மிஸ் போன்ற ஆசிரியர்களால் அது இன்னும் பொலிவு பெறுகிறது என்பதும் உண்மைதான்.
எட்டாத உயரத்தில் பள்ளி!
பொதுவாக பள்ளிக்கு நடந்து போவதே சிரமம். இதில் மலையேறிப் போகவேண்டும் என்றால் எப்படி இருக்கும்? அதுவும் 800 மீட்டர் செங்குத்து மலையில் கட்டைகளைப் பிடித்து ஏறிச் செல்ல வேண்டுமென்றால்? பயங்கர கஷ்டம் தான். ஆனால், அப்படி ஒரு பள்ளி தென் மேற்கு சீனாவில் இருக்கிறது. சிச்சுவன் மாகாணத்தில் உள்ள அடுலெர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு, மாணவர்கள் இப்படி மலையேறி வருகின்றனர். ஒருவழிப் பயணத்தை மேற்கொள்ள 1.30 மணிநேரம் ஆகிறது. ஆறு முதல் 15 வயது வரையான சுமார் 15 சிறுவர்கள் இந்தப் பள்ளிக்கு இப்படி மலையேறி வந்து படிக்கின்றனர்.
தொடர்ச்சியாகப் போர் நடந்துகொண்டிருந்ததால், அதில் இருந்து முற்றிலும் விலகி, வேறு இடத்தில் பள்ளியை அமைக்க வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு உயரத்தில் பள்ளி அமைக்கப்பட்டதாக, அந்த ஊர் பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்போது மர ஏணிகளுக்குப் பதில் இரும்பு ஏணி போட்டுக் கொடுத்திருக்கிறது சீன அரசு.
