தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எவரெஸ்ட் வசித்த ஊர்!

எவரெஸ்ட் வசித்த ஊர்!

எவரெஸ்ட் வசித்த ஊர்!


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இமயமலைத் தொடர் அடிவாரத்தில் உள்ள மலைவாழிடம் முசோரி. இது உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் இருக்கிறது. சென்ற ஏப்ரல் கடைசி வாரம் 9 இரவுகள் 10 பகல்கள் அங்கு தங்கினேன். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,500 அடி உயரத்தில் இந்த இடம் உள்ளதால், நல்ல குளிர். வெயில் பிரதேசத்தில் இருந்து சென்றதால் எனக்கு சொர்க்க பூமி.

ரயில் வழி, ஆகாய வழி எதுவாக இருந்தாலும், முசோரிக்கு டேராடூன் போய்த்தான் செல்ல வேண்டும்.

டேராடூனில் இருந்து நிறைய பேருந்துகள் முசோரிக்குச் செல்கின்றன. ஓட்டல்களில் நாளொன்றுக்கு 2,000 ரூபாயில் இருந்து அறைகள் கிடைக்கின்றன.

காரில் ஊர் சுற்றிப்பார்க்க, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட எவரும் அதிகம் கேட்பதில்லை. தனியார் வாடகைக் கார்கள் எல்லாமே ஒரு கூட்டமைப்பின் நிர்வாகத்தில் செயல்படுவதால் இந்த ஒழுங்கு. ஓட்டல்களில் 'டிராவல் டெஸ்க்' கிடையாது. இந்த அமைப்பின் மூலம்தான் வாடகைக் கார் முன்பதிவு செய்ய வேண்டும். பார்க்க வேண்டிய இடங்கள்

'கேமல் பேக்' ரோடு

முசோரியின் மிக நீண்ட சாலை இது. 'மால் ரோடு' என்ற இடத்தில் தொடங்கி, முசோரியின் இரண்டாவது உயர இடமான 'கன் ஹில்' என்ற இடம் வரை வியாபித்திருக்கிறது. ஒட்டகத்தின் முதுகு போன்ற மலை முகட்டை ஒட்டி அமைந்துள்ளதால் இந்தப் பெயர். நடந்தோ, மிதி வண்டியிலோ அல்லது சொந்தக் காரிலோதான் செல்ல வேண்டும். இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நடக்கலாம். சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்த்து ரசித்தோம்.

அருவிகள்

கெம்ப்டி அருவி, முசோரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 4,500 அடி உயர மலையிலிருந்து பால் நிறத்தில் தண்ணீர் அடித்துக் கொட்டுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஏப்ரல் மாதத்தில்கூட 5 டிகிரி அளவிற்குத் தண்ணீர் குளிர்ந்திருந்தது.

அருவிக்குச் செல்ல கேபிள் கார் வசதி உள்ளது. இயற்கை அழகை ரசித்தபடியே செல்லலாம்.

'பட்டா' அருவி, முசோரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இன்னொரு அருவி. கெம்ப்டி அருவி போல பிரபலம் அடையாவிட்டாலும், நெரிசல் குறைவு. போதிய வசதிகள் இல்லை. ஆனாலும், செல்லும் வழி இயற்கை அழகு நிறைந்த இடம் என்பதால் ரசிக்கலாம்.

லால் டிப்பா

முசோரியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மிக உயரமான மலை (7,500 அடி). முசோரி நகரின் சிறிய சந்துகள் வழியே புகுந்து புகுந்து இந்த மலைக்குச் சென்றோம். மலை உச்சியில் தொலைநோக்கி உள்ளது. கட்டணம் செலுத்திப் பார்க்கலாம். இமயமலைத் தொடரின் முக்கிய மலைகளான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, நில்கந்தா மலைகளைப் பார்த்தோம். சூரியன் உதயமாகும் நேரத்தில் போனால் இமயமலைத் தொடர் பொன்னிறமாகத் தெரியும்.

கன் ஹில் (Gun hill)

முசோரியின் இரண்டாவது உயரமான சிகரம். ஆங்கிலேயர் காலத்தில் மலை உச்சியில் ஒரு பீரங்கியைப் பொருத்தி தினமும் நண்பகல் வெடித்து நேரத்தை அறிவித்ததாகச் சொல்கிறார்கள். இந்த இடத்தை அடைய முசோரி மால் ரோடு அருகே கேபிள் கார் வசதி உள்ளது.

தனோல்ட்டி (Dhanolti)

முசோரியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள இடம். இங்குள்ள 'எக்கோ பார்க்' மிக அழகானது. மிக உயரமான ஓக் மரங்களும், தேவதாரு மரங்களும் கொண்ட அடர்த்தியான காடு இங்குள்ளது. இமயமலையின் விதவிதமான பறவைகளைப் பார்க்க 'பேர்ட் வாட்சர்ஸ்' இங்கு வருகிறார்கள்.

ஜார்ஜ் எவரெஸ்ட்

முசோரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மலைச் சிகரம் இது. இந்த இடத்தில் இருந்தும் இமயமலை உச்சிகளைப் பார்க்கலாம்; கீழே 'அஃலர்' என்ற மிகப் பெரிய நதி ஓடுவதையும், டூன் சமவெளியையும் பார்த்து மகிழ்ந்தோம்.

ஒரு சிதிலமடைந்த கட்டடத்தைக் காட்டி, இங்குதான், ஜார்ஜ் எவெரெஸ்ட் வசித்து, ஆய்வு மேற்கொண்டார் என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, சர்வேயர் ஜெனரல் பதவி வகித்து, நேபால், வடக்கு மலைப் பிரதேசங்களை அளந்தவர். அவர் பெயரால்தான் உலகின் உயரமான இமயமலைச் சிகரம் (சிகரம் XV) 'எவெரெஸ்ட்' என அழைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us