PUBLISHED ON : ஜூன் 27, 2016

புத்தர் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது போதி மரம். போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்ற கதை நமக்குத் தெரியும்.
நமக்குத் தெரிந்த அரச மரம்தான் போதி மரம். இந்த மரத்துக்கு அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை, பணை, திருமரம் என்று வேறு பெயர்களும் தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் சேக்ரட் ஃபிக் (sacred fig) என்கிறார்கள். சமஸ்கிருதத்தில் அஸ்வதா (ashvatha). வட இந்தியர்களும் நேபாளிகளும் இதை பீபால் (peepal) என்று அழைக்கிறார்கள்.
புராணங்களிலும் இலக்கியங்களிலும் அரச மரம் இடம் பெற்றிருக்கிறது. 'மரங்களில் நான் அஸ்வதம்' என்பது பகவத் கீதை வாசகம்.
மருத்துவ குணம் கொண்ட அரச மரத்தை, குளக்கரைக் கோயில்களில் அதிகமாகக் காணலாம். ஆக்ஸிஜனை அதிகம் கொடுக்கக் கூடியது. வெயிலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்து, புத்த, ஜைன மதத்தினர் அரச மரத்தைப் புனிதமாகக் கருதி வழிபடுகிறார்கள்.
மரங்களில் அரச மரம் உயர்ந்து வளரும். அதனால் இதற்கு 'மரவரசு' என்று பெயர் வந்தது. 'அத்தி போல் துளிர்த்து, ஆல்போல் படர்ந்து, அரசுபோல் ஓங்கி...' என்னும் சொற்றொடரில் அரசு ஓங்கி வளரும் என்பதை அறியலாம்.
