PUBLISHED ON : ஜூன் 27, 2016

வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள் பேசும் போது கவனித்திருக்கிறீர்களா? அவர்களின் பேச்சில் அடிக்கடி பழமொழிகள் பயன்படுத்துகிறார்களா?
பழமொழிகள் முன்னோர்களின் அனுபவ மொழிகள். மனிதர்களை நல்வழிப்படுத்த உருவானவை. உலகம் முழுக்க எல்லா மொழிகளிலும் நாடுகளிலும் பழமொழிகள் பயன்பாட்டில் உள்ளன. எழுத்தில் எழுதி வைக்காமல் வாய்மொழியாக வளர்ந்த இலக்கிய வகை என்றே பழமொழிகளைக் குறிப்பிடலாம்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். அவர் பழமொழியை 'முதுமொழி' என்று குறிப்பிடுகிறார். 'நுட்பம் உடையதாக இருக்க வேண்டும். சுருங்கச் சொல்ல வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றி கூற வேண்டும்'. இதுதான் பழமொழிக்கு அவர் கூறும் இலக்கணம்.
'மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் அளவிற்கு குறைந்த சொற்களால் இருக்க வேண்டும். நல்ல உணர்வுடன், நுட்பம் உடையதாய் இருக்க வேண்டும்' என்ற அயர்லாந்து எழுத்தாளர் ஆர்.சி.டிரெஞ்ச் (R.C.Trench) என்பவரும் ஏறக்குறைய தொல்காப்பியரின் கருத்தைத்தான் கூறியிருக்கிறார்.
பழமொழி நானூறு, பழமொழி விளக்கம் என்னும் இரு நூல்கள் தமிழில் வந்துள்ள பழமொழி பற்றிய நூல்கள்.
