PUBLISHED ON : டிச 11, 2017

டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்
உலகின் மொத்த நிலப்பரப்பில் 27 சதவீதம் மலைகளே இருக்கின்றன. அவை எங்கோ இருக்கின்றன என்று நினைத்துவிடாதீர்கள். அதனால் தான் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. உலகெங்கிலும் சுமார் 100 கோடி பேர் மலைகளில் வாழ்கின்றனர். உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர், தண்ணீர், உணவு மற்றும் சுத்தமான ஆற்றலுக்கு மலைகளையே நம்பியுள்ளனர்.
உயரமான மலைகளில் இருந்துதான் நன்னீர் பெருக்கெடுக்கிறது. எண்ணற்ற உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. பல்வேறு அரிய பயிர்கள் மலைகளில் தான் வளரும். மலைகளை ஒட்டியுள்ள நிலப்பரப்புக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கு மலைகளே காரணம். மலைகளில் விளையும் அற்புத மூலிகைகளும் அது காத்து வைத்துள்ள எண்ணற்ற உயிரினங்களுமே உலக உணவுச் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தகைய மலைகள் இன்று கிடுகிடுவென காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. கிரானைட்டுக்காக மலைகள் வெட்டப்படுகின்றன. மலைகளில் உள்ள மரங்கள் வெட்டிச் சூறையாடப்படுகின்றன. அதனால், மலைகளில் உள்ள இயற்கையான சூழலே மாறிப் போய்விட்டது. பல மலைப்பிரதேசங்களில் இயல்பான குளிர் காணாமல் போய்விட்டது.
இன்னொரு புறம், இத்தகைய பாதிப்புகளால், மலைகளில் வாழும் பழங்குடியினர் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு மலைவாழ் பழங்குடியினர் உணவுப் பற்றாக்குறையால பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது 32.9 கோடி பேர், இத்தகைய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், 2017இல், சர்வதேச மலைகள் தினத்துக்கான கருப்பொருளாக ஐ.நா. நிர்ணயித்து இருப்பது, 'பாதிப்புக்குள்ளாகும் மலைகள் : சீதோஷ்ணம், பசி, இடப்பெயர்ச்சி.' மலைவாழ் மக்களைப் பாதிப்புகளில் இருந்து காப்பது ஒன்றே, மலைகளுக்கு நாம் செய்யும் சிறந்த சேவையாக அமையும் என்று ஐ.நா. கருதுகிறது.
மலைகளை அழிக்காமல், அதனைப் பாதுகாப்பதன் மூலமாகவே, அதன் அருகே உள்ள அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக, வளத்தோடு வாழ முடியும்.
