தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூறு வயது வாழ்வது எப்படி?

நூறு வயது வாழ்வது எப்படி?

நூறு வயது வாழ்வது எப்படி?


PUBLISHED ON : டிச 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலு ஓர் ஒற்றை ரோஜாப்பூவை கொடுத்து “வாழ்த்துகள் மாலு” என்றான். ஞாநி மாமா அரை டஜன் சிறுவர் நூல்களைக் கொடுத்து “வாழ்த்துகள் மாலு” என்றார். “எதற்காக வாழ்த்துகிறீர்கள்? இன்றைக்கு என்ன விசேஷம்? என் பிறந்த நாள் கூட இல்லையே!” என்றேன்.

“நீ நூறு வாரமாக டயரி எழுதுகிறாய். அதற்குத்தான் வாழ்த்து.” என்றார் மாமா. “அந்தக் காலத்தில் சினிமாவுக்குத்தான் நூறாவது நாள் கொண்டாடுவார்கள் என்று அப்பா சொல்லுவார்.” என்றேன். “இப்போதெல்லாம் சினிமாவுக்கு மூன்றாவது நாள் விழாதான். ஏழாவது நாள் படம் மாறிவிடும். வேண்டுமானால் நூறாவது காட்சியைக் கொண்டாடலாம்.” என்றார் மாமா.

நூறுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டேன். “நம் நாட்டில் ஒரு காலத்தில் அறுபதே பெரிய விஷயமாக இருந்தது. மனிதர்களின் சராசரி வயது 40, 45ஐ தாண்டவில்லை. அப்போது ஒருவர் 60 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அதைக் கொண்டாடினார்கள். இப்போது எழுபதே சராசரி வயதாகிவிட்டது. ஆனாலும் 100 வயது வாழக்கூடியவர்கள் மிகவும் அபூர்வம். காலம் காலமாக நூறு ஒரு பெரிய முழுமையான எண்ணாக எல்லா ஊர்களிலும் கருதப்படுகிறது. பள்ளிக்கூடத் தேர்வுகளில் கூட நூற்றுக்குத்தானே மதிப்பெண் போடுகிறோம்.” என்றார் மாமா.

மாமா விதவிதமான உடல் பிரச்னைகளை வைத்துக்கொண்டு எனக்கு நூறு வயது வாழ ஆசை என்று சொல்லிக் கொண்டிருப்பார். பாரதியார் கூட பிள்ளையாரிடம் வரம் கேட்கும்போது, 'கனக்குஞ் செல்வம், நூறுவயது' இரண்டையும் கேட்டிருக்கிறார். ஆனால் கடைசி வரை வறுமைதான். 39 வயதில் போய்விட்டார் என்று மாமா அடிக்கடி சொல்வார்.

உலகத்தில் நூறு வயதை எட்டியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? ஐ.நா. சபை கணக்கிட்டபடி 2012இல் மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 600 பேர் 100 வயதுக்காரர்கள் என்றது வாலு. இந்தியாவில் 27 ஆயிரம் பேர்தான். ஜப்பான்தான் முதல் இடம். மொத்தம் 67 ஆயிரத்து 824 சென்டினேரியர்கள். (சென்டினேரியன் என்றுதான் எழுதவேண்டும். மரியாதைக்காக 'ர்' விகுதி சேர்த்திருக்கிறேன்.) இதில் மெஜாரிட்டி பெண்கள்தானாம். 57,525 பேர்.

நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன வழி? “அதை ஜப்பானில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.” என்றார் மாமா. முட்டை, பால் எல்லாம் அதிகம் சாப்பிடாமல், தானியங்கள், காய்கறிகள், மீன் இவற்றை அதிகம் சாப்பிடவேண்டும். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை வேண்டும். வயதானவர்களை ஒதுக்காமல் கவனித்துக்கொள்ளும் சமூகச்சூழல் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதுதான் ஓய்வுக்கான வயது என்றாலும் அதையும் கடந்து வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக உடல் உழைப்பு இருக்கவேண்டும். வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கவேண்டும். மனத்தை அமைதிப்படுத்தும் தியானம் செய்யலாம். இவையெல்லாம்தான் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று ஜப்பான் ஆய்வு சொல்கிறது.

“நூறு வாரம் எழுதியதற்கே வாழ்த்துகிறீர்களே. உலகத்தில் என்னை விட அதிக நாட்கள் டயரி எழுதியவர்கள் நிறையவே இருப்பார்கள் இல்லையா?” என்றேன். பலர் இருக்கிறார்கள் என்றார் மாமா. இங்கிலாந்தில் ஜான் டாட் என்பவர் 66ஆண்டுகள் தொடர்ந்து டயரி எழுதியிருக்கிறார். வெறுமே எழுதுவது மட்டுமல்ல. ஓவியங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் டயரியில் ஒட்டி வைத்திருக்கிறார். சமகால நிகழ்ச்சிகள் பற்றிய கருத்தையெல்லாம் எழுதியிருக்கிறார். ஜான் டாடின் தொழில் பன்றி வளர்ப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது!

அமெரிக்காவில் ஒரு பாதிரியார் ராபர்ட் ஷீல்ட்ஸ். அவர் 25 ஆண்டுகளில் 37 லட்சம் சொற்கள் உடைய டயரிகள் எழுதியிருக்கிறார். இவர் தினசரி பல் தேய்த்தது, கழிப்பறைக்குச் சென்ற அனுபவம், சாப்பிட்டது என்று அன்றாட விஷயங்களாகவே எழுதி நிரப்பியிருக்கிறார். இப்போது இந்த டயரிகள் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுக்காகத் தரப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் புகழ் பெற்ற டயரிஸ்ட் சாமுவேல் பெப்பிஸ் என்ற அரசு அதிகாரி. இவர் 10 ஆண்டுகள்தான் டயரி எழுதினார். ஆனால் 17ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் அரசியல், சமூகம், தனி வாழ்க்கை எல்லாவற்றையும் புரிந்துகொள்ள பெப்பிஸ் டயரிகள் மிகவும் உதவுகின்றன என்றார் மாமா.

“நீ எனக்கு ஒரு பரிசும் தரவில்லையே.” என்று வாலுவைச் சீண்டினேன். “உனக்குப் பிடித்தமான ஒரு பொம்மைக்கு இணையத்தில் ஆர்டர் செய்திருக்கிறது. நாளைக்கு டெலிவரி ஆகும்.” என்றது வாலு.

“என்ன பொம்மை? பாண்டாவா?” என்றேன். “அது உன் சிநேகிதி சீதாவுக்குத்தான் பிடிக்கும். உன் ஃபேவரேட் எது?” என்றார் மாமா. “ஓ, குரங்கா?” என்றேன். “ஆமாம். ஓர் ஆளுயர மங்கி பொம்மை வருகிறது.” என்றான் பாலு.

“நீ நூறாவது வாரம் டயரி எழுதும்போதுதான், 'உலக குரங்கு தினம்' வருகிறது. அதனால்தான் குரங்கு பொம்மை.” என்றது வாலு.

அமெரிக்காவில் ஓவியக் கல்லூரி மாணவர்கள் கேசி சாரோ, எரிக் மில்லிகின் இருவருக்கும் குரங்குப் படம் வரைவது பிடிக்கும். குரங்குக்காக ஒரு தினம் கொண்டாடுவதை இவர்கள்தான் ஆரம்பித்தார்கள். இப்போது இது உலகம் முழுவதும் பரவி இந்தியாவுக்கும் வந்துவிட்டது. விசாகப்பட்டினத்தில் இருக்கும் இந்திரா காந்தி மிருகக் காட்சி சாலை குரங்கு தின நிகழ்ச்சிகள் நடத்துகிறது.

குரங்கு தினத்தைக் கொண்டாடுவது என்றால் இரு விதமாகக் கொண்டாடுவதாகும். அன்றைய தினம் குரங்குகள் பற்றித் தெரிந்துகொள்வது, அவற்றைக் காப்பாற்ற என்ன செய்வது என்று விவாதிப்பது ஒரு கொண்டாட்டம். இன்னொன்று குரங்குச் சேட்டைகள் என்று சொல்லப்படும் குறும்புகளை குழந்தைகள் செய்வதைக் கொண்டாடுவது!

டிசம்பர் 14 அன்று என்னவெல்லாம் குரங்குச் சேட்டைகள் செய்யலாம் என்று மூவரும் யோசிக்க ஆரம்பித்தோம். “என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் குரங்கிடம் போய் சேட்டை செய்யாதீர்கள். குரங்கு கதைகளிலும் படங்களிலும்தான் ஜாலியான சிநேகமான பிராணி. நேரில் ஆக்ரோஷமாக இருக்கும்” என்று எச்சரித்தார் மாமா.



வாலுபீடியா 1 :
இந்தியாவில் 13 வகைப்பட்ட 5 கோடி குரங்குகள் இருக்கின்றன. தினசரி ஆயிரம் பேர் குரங்குகளால் கடிக்கப்படுகிறார்கள். இமாசல பிரதேச மாநிலத்தில் மட்டும் குரங்குகள் நாசம் செய்யும் பயிர்கள், பழங்கள் 30 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. கடந்த பத்து ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் ஒன்றரை லட்சம் குரங்குகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.



வாலுபீடியா 2
: அயர்லாந்தில் நூறு வயது முடிந்தவர்களுக்குப் பரிசாக 2540 யூரோ (சுமார் 1.92 லட்சம் ரூபாய்கள்) அரசாங்கத்தால் தரப்படுகிறது. வேறு பல ஐரோப்பிய நாடுகளில் பிரதமர், குடியரசுத் தலைவர், அரசர் ஆகியோரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் மட்டும் அனுப்பப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us