PUBLISHED ON : மார் 27, 2017

பெண்கள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறார்கள். அதே அளவுக்கு, அவர்கள் பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, பாதுகாப்பு பிரச்னைகள் நிலவுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்குத் தீர்வுகாணும் வகையில், பெண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய, பெண்கள் மட்டுமே ஓட்டுநர்களாக உள்ள டாக்சிகள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில், ஷீ டாக்சி, பிங்க் டாக்சி என்ற பெயர்களில் இவ்வகை டாக்சிகள், சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், பாகிஸ்தானிலும் பிங்க் டாக்சி அறிமுகமாகியுள்ளது. தலைநகர் கராச்சியில் முதல்கட்டமாக, பிங்க் டாக்சி அறிமுகமாகியுள்ளது. இதுதொடர்பாக, இதன் நிறுவனர் அம்ரீன் ஷேக் கூறியதாவது, 'பெண்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக, சமூகத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
பிங்க் டாக்சிகள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதோடு, வேலைக்கு செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும். விரைவில் மற்ற நகரங்களுக்கும், இதை அறிமுகம் செய்வோம்' என்று தெரிவித்துள்ளார்.

