
ஹைதராபாத்திலுள்ள சுதா கார் அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு கால்பந்து, பர்கர், ஹெல்மெட், கைப்பை, கிரிக்கெட் மட்டை என பல வித்தியாசமான வடிவங்களில் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் வடிவமைப்பாளரான சுதாகர், பள்ளிப் பருவத்திலிருந்தே தானியங்கி ஊர்திகளில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது 14வது வயதில் ஒரு மிதிவண்டியையும், 15வது வயதில் ஒரு மோட்டார்சைக்கிளையும் வடிவமைத்தவர். பின்னர் தனது ஆர்வத்தை கார்களின் பக்கம் திருப்பினார்.
இவர் உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகனத்தைத் தயாரித்ததற்காக, கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். 37 அடி நீளமுள்ள அந்த மூன்று சக்கர வண்டியின் சக்கரங்கள் 17 அடி விட்டம் கொண்டவை. அந்த மிகப்பெரிய வண்டியை 10 ஆண்டுக்களுக்கு முன்பே ஹைதராபாத் சாலைகளில் ஓட்டிக் காட்டினார் சுதாகர்.
லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ள இந்த வினோத கார் ஆர்வலர், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களுக்காகவும் வித்தியாசமான கார்களை வடிவமைத்துத் தருகிறார்.
மிகச் சிறிய டபுள் டெக்கர் பஸ் (மாடி பஸ்), அரை அடி உயரமே உள்ள மினியேச்சர் மோட்டார்சைக்கிள்கள் என கொலு பொம்மைகள் போல பல்வேறு தானியங்கி ஊர்திகள் இங்கே உண்டு. ஆனால் அவை எதுவுமே பொம்மைகள் இல்லை, அவற்றை சாலைகளில் ஓட்ட முடியும் என்பதே இந்த மியூசியத்தின் தனிச் சிறப்பு.
ஒவ்வொரு கொண்டாட்டங்களின் போதும் அதன் மையக் கருத்தை வலியுறுத்தும் விதமாக ஊர்திகளை வடிவமைப்பது சுதாகரின் தனிச்சிறப்பு. சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி கைப்பை மற்றும் உயர குதி கொண்ட செருப்பு(ஹை ஹீல்ஸ்) போன்ற வடிவங்களிலும், குழந்தைகள் தினத்தை ஒட்டி பேனா, பென்சில் போன்ற வடிவங்களிலும், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி ஆணுறை வடிவிலும் கூட ஊர்திகளை உருவாக்கி இயக்கி காட்டியுள்ளார் இவர்.
ஒவ்வொரு வாகனத்தின் முன்னாலும் இருக்கக்கூடிய பெயர்ப்பலகையில் அந்த வாகனத்தை தயாரிக்க ஆன காலம், அது ஓடக்கூடிய அதிகபட்ச வேகம் போன்ற விவரங்கள் காணக் கிடைக்கின்றன.