
வரலாற்று வகுப்பு. ஆசிரியர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அப்போது, ஒரு மாணவன் எழுந்து நின்று, 'ஐயா, இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?' என்று கேட்டான்.
ஆசிரியர் பதில் சொல்லவில்லை. அவனையே திருப்பிக்கேட்டார். 'நீ சொல், இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?'
இங்கே மாணவன், ஆசிரியர் இருவருமே ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்விகள் இரண்டும் ஒன்றல்ல. ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது:
மாணவன் பதில் தெரியாமல் கேள்வி கேட்கிறான். அவனுடைய நோக்கம், பதில் தெரிந்துகொள்வது.
ஆசிரியருக்கு அந்தக் கேள்விக்கு ஏற்கெனவே பதில் தெரியும். ஆகவே, அவர் பதில் தெரிந்துகொள்வதற்காகக் கேள்வி கேட்கவில்லை. அந்த மாணவனின் திறமையைப் பரிசோதிப்பதற்காகக் கேட்கிறார்.
தமிழ் இலக்கணத்தில் இந்த இருவகை வினாக்களுக்கும் வெவ்வேறு பெயருண்டு.
பதில் தெரியாமல் கேட்கும் கேள்விகள், 'அறியா வினா' எனப்படும். அதாவது, பதில் அறியா வினா.
பதில் தெரிந்தே கேட்கும் கேள்விகள், 'அறிவினா' எனப்படும். அதாவது, பதில் அறிந்து கேட்கப்படும் வினா.
இங்கே மாணவன் கேட்டது அறியா வினா. ஆசிரியர் கேட்டது அறிவினா.
இப்போது, இதேபோல் இன்னும் சில வினாக்களைப் பார்ப்போம். இவற்றில் எவையெல்லாம் அறிவினாக்கள், எவையெல்லாம் அறியா வினாக்கள் என்று யோசியுங்கள்:
கடைக்காரரிடம் நீங்கள் கேட்கிறீர்கள், 'இந்தத் தேங்காய் என்ன விலை?'
தேர்வுக்குமுன் உங்கள் நண்பர் உங்களைக் கேட்கிறார், 'நல்லாப் படிச்சிருக்கியா?'
வெளியிலிருந்து நீங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, உங்கள் தாய் கேட்கிறார், 'எங்கே சுத்திட்டு வர்றே?'
வகுப்பில் குறும்பு செய்யும் மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்கிறார், 'டேய், நீ என்ன மனுஷனா? குரங்கா?'
அறியா வினா, அறிவினா ஆகியவற்றோடு, இன்னும் நான்கு வகை வினாக்கள் உள்ளன:
ஐய வினா: இதுவா அதுவா என்கிற குழப்பத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகக் கேட்கும் கேள்வி. எடுத்துக்காட்டாக: அங்கே வருவது மானா அல்லது கன்றுக்குட்டியா?
கொளல் வினா: ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்கும் கேள்வி. எடுத்துக்காட்டாக: உங்களிடம் இந்தப் புத்தகம் உள்ளதா? (இதன் பொருள்: உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் எனக்குத் தாருங்கள்.)
கொடை வினா: ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி. எடுத்துக்காட்டாக: சாப்பிட்டாயா? (இதன் பொருள்: நீ சாப்பிடவில்லை எனில், நான் சாப்பாடு போடுகிறேன்.)
ஏவல் வினா: ஒன்றைச் செய்யவேண்டும் என்று தூண்டுவதற்காகக் கேட்கும் கேள்வி. எடுத்துக்காட்டாக: வீட்டுப்பாடம் செய்தாயா? (இதன் பொருள்: வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால், இப்போது செய்.)
இந்தக் கட்டுரை உங்களுக்குப் புரிந்ததா? இது எந்தவகை வினா என்று சொல்லுங்கள், பார்ப்போம்!
- என். சொக்கன்