இரண்டு சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும். உதாரணத்துக்கு 'பாடல், பொருள் ' என்ற இரண்டு சொற்களை எடுத்துக்கொள்வோம். தனித்தனியாக உள்ள, இந்த இரண்டு சொற்களும் சேர்ந்தால், பாடல் பொருள் என்று ஆகும். இப்போது நாம் பாடல், பொருள் என்று எடுத்துக்கொள்வதா? பாடலின் பொருள் என்று எடுத்துக்கொள்வதா?
பாடல் உணர்த்தும் பொருள் என்ற வகையில் 'பாடலின் பொருள்' என்றுதான் விரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அப்போது பாடல், பொருள் என்னும் இரண்டு சொற்களுக்கிடையே முதற்சொல்லோடு இன் என்ற உருபு சேர்கிறது. அந்த இன் என்பதுதான் பாடலுக்கும் பொருளுக்கும் இடையேயுள்ள தொடர்பை வேறுபடுத்தி உணர்த்துகிறது. இதுதான் வேற்றுமைத் தொகை. இங்கே சொற்களுக்கிடையே பொருளை வேறுபடுத்தி உணர்த்துவதற்காகத் தோன்றிய 'இன்' என்னும் சொல்லுருபுக்கு வேற்றுமை உருபு என்று பெயர்.
மேற்சொன்னவாறு, வேற்றுமைத்தொகைகள் மொத்தம் எட்டு இருக்கின்றன. எட்டு வேற்றுமைத் தொகைகளுக்கும் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப் பெயர்களே வழங்கப்படுகின்றன. முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைத் தொகை, மூன்றாம் வேற்றுமைத் தொகை என எட்டாம் வேற்றுமைத் தொகை வரையிலும் அவற்றைப் பெயரிட்டு வழங்குகின்றனர்.
ஒவ்வொரு வேற்றுமைத் தொகைக்கும் உரிய உருபு இருக்கின்றது. உருபு என்றால், ஓரெழுத்தோ இரண்டு மூன்று எழுத்துகளோ சேர்ந்து ஒரு சொல்லோடு ஒட்டிக்கொண்டு வழங்குபவை. சொல்லின் உறுப்புகளில் ஒன்றாக, இவ்வுருபுகள் மாறிவிடும். வேற்றுமைப் பொருள் உணர்த்துவதற்காக அவை தமக்குரிய சொல்லோடு ஒட்டிக்கொள்கின்றன. பாடல் பொருள் பாடலின் பொருள் என்று ஆனதைப்போல, ஒவ்வொரு சொற்றொடரிலும் வேற்றுமை உருபுகள் சேர்ந்துகொள்ளும்.
ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை அடிப்படையான வேற்றுமை உருபுகள். இவ்வேற்றுமை உருபுகளை நாம் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும். முதலாம் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. ஆனால், இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உள்ளன.
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ,
மூன்றாம் வேற்றுமை உருபு ஆல்,
நான்காம் வேற்றுமை உருபு கு,
ஐந்தாம் வேற்றுமை உருபு இன்/இல்,
ஆறாம் வேற்றுமை உருபு அது,
ஏழாம் வேற்றுமை உருபு கண்.
- மகுடேசுவரன்