PUBLISHED ON : ஜூலை 01, 2019

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், இப்போது எல்லோரின் கண்களும் கடலை நோக்கித்தான் திரும்பியுள்ளன. ஆம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்தான் நமக்குக் கைக்கொடுக்கப் போகிறது என்கின்றனர் நிபுணர்கள். கடல் நீரின் உப்புத்தன்மையை நீக்கி, அதை நமது பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றுவதே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
அறிவியலில் முன்னேறிய பெரும்பான்மையான நாடுகள் இந்தத் திட்டத்துக்கு மாறிவிட்டன. குறிப்பாக, சிங்கப்பூர், சௌதி அரேபியா, துபாய், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் கடல்நீரே முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்தியாவில் தமிழகமும் இந்தத் திட்டத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் சென்னை அருகே மீஞ்சூர் மற்றும் நெம்மேலி ஆகிய இடங்களில் ஏற்கெனவே கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் செயற்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் தினசரி தலா 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு சென்னை நகரில் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது அடுத்தகட்டமாக, நெம்மேலியில் இரண்டாவது கடல்நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் கூடுதலாக 15 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
சென்னையின் தினசரி தண்ணீர் தேவை 85 கோடி லிட்டர் என்கிற நிலையில், கடல் நீர் மூலம் 50 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். சென்னை மட்டுமன்றி பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். தூத்துக்குடி, இராமநாதபுரம் போன்ற வறட்சிப்பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இன்னபிற தொழிற்சாலை, விவசாயத் தேவைகளுக்கும் தண்ணீர் தரக்கூடிய சாத்தியம் உண்டு. தமிழகத்தில் செயற்பட்டு வரும் மற்றும் அமைக்கப்படவுள்ள கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் பற்றி அறிந்துகொள்வோமா!
தமிழக கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள்
மீஞ்சூரில் உள்ளது இந்தியாவில் செயற்படும் மிகப்பெரிய நன்னீராக்கல் திட்டம். இங்கு தினசரி 10 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது. நெம்மேலி - இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீராக்கல் மையம். 64 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ள குழாய் இணைப்புகளின் மூலமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
சென்னையை அடுத்த பேரூரில் ரூ.6,078 கோடி செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
சிறிய அளவிலான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி. நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையையொட்டி உள்ள 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி பெறுவதும் எளிது.
இதுமட்டுமன்றி, சென்னையைத் தவிர்த்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
எது சரி, எது தவறு?
* தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக பொழியும் 900 மி.மீ. மழையை சேமித்தாலே போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பெருகி வரும் மக்கள் தொகைக்கு, மழையை மட்டும் நம்பியிருக்க முடியாது.
* கடல்நீரை உறிஞ்சுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்கிறார்கள். இதுவும் தவறான கருத்து. தானாக வரும் தண்ணீரைத்தான் கடல்நீராக மாற்றுகிறார்கள். எனவே, சுற்றுச்சூழல் அல்லது கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கும் என்பதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை.
* இத்திட்டம் அதிகச் செலவு பிடித்தாலும், குடிநீர் அவசியத்தேவைதானே! தமிழகம் மின்மிகை மாநிலம் என்கிற நிலையில், அவசியத் தேவைக்காக அதிகம் செலவு செய்தாலும் தவறில்லை.
* தற்போதுள்ள நீர்நிலைகளைப் பராமரிப்பதோடு, அறிவியல் துணைகொண்டு மனிதத் தேவைகளை நிறைவேற்றுவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.
இன்னும் குறுகிய காலத்தில், நம் உணவு மற்றும் தண்ணீர்த் தேவை இருமடங்காகப் போகிறது. அதை நிறைவு செய்ய அணுஉலையும், அதன் ஆற்றலில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பும்தான் சரியான தீர்வு.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்
