PUBLISHED ON : ஜூலை 01, 2019

சாதாரணமாக, ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகள் கட்டுகிறார்கள். அந்த அணைக்கட்டுகளின் உயரம் 50 அடியில் இருந்து 200 அடி வரை இருக்கும். அது தேக்கிவைக்கும் நீரின் கொள்ளளவு (Storage Capacity) சுமார் 5 டி.எம்.சி.-யில் இருந்து 100 டி.எம்.சி.- வரை இருக்கும்.
தடுப்பணை என்பதும், பெரிய அணைக்கட்டுகளைப் போல ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதுதான். ஆனால், இதில் வேறுபாடுகள் உண்டு. ஆற்றின் படுகை இருக்குமே (River Bed) அதற்கு மேலே 3 அடியில் இருந்து 6 அடிவரைதான் ஒரு தடுப்பணையின் உயரம் இருக்கும். அது தேக்கிவைக்கக்கூடிய நீரின் கொள்ளளவு, ஒரு டி.எம்.சி., முக்கால் டி.எம்.சி., அரை டி.எம்.சி. போன்ற அளவுகளில்தான் இருக்கும்.
மழைக்காலங்களில் ஓடிவரக்கூடிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீரைச் செறிவூட்ட இந்தத் தடுப்பணைகள் உதவும். கூடுதலாக வரும் தண்ணீர் வழிந்துவிடும். தடுப்பணையில் தனியாகத் திறந்துவிடுவதற்கு எந்த அமைப்பும் கிடையாது. அது வழிந்துவிடக் கூடியதுதான். ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் நிற்கும். எல்லா தண்ணீரும் கடலுக்கு ஓடாது. நிலத்தடி நீர் கூடுவதோடு, கோடைக்காலங்களில் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கும் வசதியாக இருக்கும்.
தடுப்பணை கட்டுவதற்கான செலவும் குறைவு. தோராயமாக இரண்டு கோடி ரூபாயில் கட்டிவிடலாம்.
ஆ.வீரப்பன்
முன்னாள் சிறப்பு தலைமைப் பொறியாளர்,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை.
