PUBLISHED ON : ஜூன் 26, 2017

பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பூங்காக்கள் என்றால் எப்போதுமே ஜாலிதான். அதே சமயம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளும் பங்கேற்க அங்கே போதிய வசதிகள் இருப்பதில்லை. இக்குறையை, அமெரிக்காவின் டெக்சாஸில் அமைந்துள்ள மார்கன்ஸ் தீவு (Morgan's Inspiration Island) எனும் விளையாட்டுப் பூங்கா போக்கி இருக்கிறது.
இங்கு எல்லாவித சிறப்புக் குழந்தைகளும் விளையாடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் குழந்தைகள், அப்படியே உள்ளே வலம் வரலாம். தண்ணீரில் நனைந்து மகிழலாம். இதற்கென பூங்கா நிர்வாகம், தண்ணீரால் பழுதாகாத நவீன சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்துள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் நவீன கண்டுபிடிப்பான, நனைந்தாலும் பழுதாகாத நவீன சக்கர நாற்காலிகள் உதவியுடன் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் தண்ணீரில் விளையாடும் இன்பத்தை அடைய முடிகிறது. சிறப்புக் குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளார் இப்பூங்காவின் உரிமையாளரான கார்டன் (Gordon Hartman).