PUBLISHED ON : நவ 25, 2019

பகுத்தறிவு
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
26.9.1820 - 29.7.1891
அம்மாவின் சகோதரர்-மாமா-வீட்டுக்கு வந்திருந்தார். பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியில் என் படிப்பு பற்றிய விவாதம் தொடங்கியது. சமீப காலமாக, அம்மாவும் அப்பாவும், இதரர்களும் என் மேற்படிப்பு பற்றியே பேசுகின்றனர். எல்லோருக்கும் சொல்வதற்கு ஓர் ஆலோசனை இருக்கிறது.
மாமா கொஞ்சம் பரந்த சிந்தனையுள்ளவர். வழக்கமான ஆலோசனைகளை அவர் சொல்லவில்லை. “எதிர்காலத்துல எல்லா வேலைகளையும் மெஷின்கள் செஞ்சுடும் கதிர். அதனால், நீ வளர்ந்து வரும்போது, மெஷின்களால செய்யமுடியாத வேலையா பார்த்து எடுத்துக்கோ. இயந்திரங்களால், படைப்பாளுமையை ஒண்ணும் செய்யமுடியாது. ஓவியனாவோ, எழுத்தாளனாவோ வளர டிரை பண்ணு.”
அம்மா பேசும்போது, “நீ யோசிச்சு முடிவு பண்ணு, கதிர்” என்று மட்டும் சொன்னார். சமீபத்தில், இதே வார்த்தைகளை நான் நிறைய கேட்கத் தொடங்கியிருக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. யோசிக்காமல் எப்படி முடிவெடுக்க முடியும்? எதற்காக இதைச் சொல்கிறார்கள்? உமா மிஸ்ஸிடம் இதைப் பற்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னேன்.
வழக்கம்போல், உமா மிஸ் சிரித்தார்.
“எப்படி யோசிக்காமல் முடிவு செய்யமுடியும்னு நல்ல கேள்வி கேட்டிருக்கே, கதிர். இதுல பல விஷயங்கள் இருக்கு. உனக்கு ஈஸ்வர் சந்திர வித்யாசாகரத் தெரியுமா?”
“வித்யாசாகர் சிலையை உடைச்சாங்கன்னு நியூஸ்பேப்பர்ல படிச்சேன், மிஸ். நீங்க சொல்றது அவரா?”
“கரெக்ட். மேற்கு வங்கத்தோட அறிவுச்சுடர். வங்காளிகளிடம் பாதிப்பு ஏற்படுத்திய முதல் பத்து நபர்களில் இவர் முக்கியமானவர். வங்காள மொழிக்கான எழுத்துவடிவத்தை எளிமைப்படுத்தி, ஒழுங்குபடுத்திக் கொடுத்தவர் இவர். பெரிய கல்விமான். சமஸ்கிருதம் இலக்கணம், இலக்கியம், வேதாந்தம், தர்க்கம், வானியல்னு நிறைய படிச்ச அதீத படிப்பாளி. தனிப்பட்ட முறையில ஆங்கிலமும் தத்துவமும் படிச்சார். 31 வயசுல சமஸ்கிருதக் கல்லூரிக்கே பிரின்சிபலாக நியமிக்கப்பட்டார்னா பார்த்துக்கோ.
நீ சொன்னியே, 'யோசிச்சு முடிவெடு'ன்னு, அதற்கு அர்த்தமா இருந்தவர் இவர்தான். ராஜா ராம்மோகன் ராய், உடன் கட்டை ஏறுதல்ங்கற 'சதி'யை ஒழிக்கப் பாடுபட்டார். இவரோ இன்னும் ஒரு படி மேலே. அன்றைய காலகட்டத்துல மிகவும் புரட்சிகரமான மூன்று விஷயங்களுக்கு இவரே காரணகர்த்தாவா இருந்தார்.
பெண் குழந்தைகளை 10 வயசுக்குள்ளே திருமணம் செஞ்சு கொடுத்துடுவாங்க. உடல் ரீதியாவும் மன ரீதியாவும் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்ங்கறதை தெளிவா புரிஞ்சவர் வித்யாசாகர். அந்த வழக்கத்தை ஒழிக்கணும்னு கடுமையாகப் போராடினார்.
இரண்டாவது, விதவைகள் திருமணம். யோசிச்சுப் பாரு. இது இன்னிக்கு மாதிரி இல்ல. 1855ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்குது. நம்முடைய தர்ம சாஸ்திரங்கள் எதுலேயும் விதவைகள் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கக்கூடாதுன்னு சொல்லலைங்கறதைத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வித்யாசாகர். அதனால், கணவனை இழந்த பெண்கள், மீண்டும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கணும்னு போராடினார்.
மூன்றாவது இன்னொரு முக்கியமான மாற்றம். ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செஞ்சுக்கற பழக்கம் அப்போ இருந்தது. இதுக்குப் 'பலதார மணம்'னு பேரு. அது, கூடவே கூடாதுன்னு போராடினார் வித்யாசாகர். நம்முடைய சாஸ்திரங்கள் இந்த மோசமான வழக்கத்தை அங்கீகரிக்கவே இல்லங்கறதை எடுத்துச் சொல்லி, அதை தடைசெய்ய முயற்சி எடுத்தார்.
அப்போ நடந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அவங்களுக்கு இந்த பிரச்னைகளையோட தீவிரத்தன்மை என்ன தெரியப்போகுது? மாற்றங்களைக் கொண்டுவர்றதுக்கான முயற்சியே அவங்ககிட்ட கிடையாது. அதனால், தன் கோரிக்கைகளை மக்கள் கிட்ட சொல்லி, அவங்களோட கையெழுத்துகளை வாங்கி, அரசாங்கத்துக்கு அனுப்பிவெச்சு, இதனால ஏற்படுற பாதிப்புகள அவங்களுக்கும் புரியவெச்சார். அதுக்கான சட்டங்களையும் இயற்ற வெச்சார்.
இதுக்கெல்லாம் அடிப்படை என்ன தெரியுமா?
'யோசிச்சு முடிவு பண்ணு'ன்னு நீ சொன்னியே, அதுதான். அதுக்கு இன்னொரு பேர், 'பகுத்தறிவு.' யாரோ சொல்றதைக் கேட்காம, மத்தவங்க செய்யறதைச் செய்யாம, மரபை அப்படியே ஒத்துக்காம, சுயமா யோசிச்சு செய்யறதுதான் பகுத்தறிவு.
எது நல்லது, எது கெட்டது, அதனால ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னன்னு யோசிக்கணும். யார்மேலயும் விருப்புவெறுப்பு இல்லாமல் யோசிக்கணும். இன்னிக்கு இல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாகவே நாம் எல்லா விஷயங்களையும் பகுத்து அறிஞ்சு, அதற்கு ஏற்ப முடிவுகள் எடுத்துக்கிட்டுவரோம்.
தனிமனித ரீதியாவும், பல தவறுகளைத் திருத்திக்கறதுக்கு பகுத்தறிவு தேவை. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ யாரையும் காயப்படுத்தாம இருக்கிறது நம்மளோட பண்பு.
படிப்பு, எதிர்காலம்னு நீ யோசிக்க ஆரம்பிச்சு இருக்கே. இதில ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்வாங்க. அதெல்லாம் ஆலோசனைகள். வழிகாட்டுதல்கள். தப்பே இல்ல. ஆனால், இறுதி முடிவு உன்னுடையதாக இருக்கணும்.
நீ என்னவாக ஆகணும்னு விரும்புறியோ அதுதான் சரியான பாதை. அதுக்கு யோசிக்கணும். மத்தவங்க சொல்றதையெல்லாம் மனசுல வாங்கிக்கிட்டு, பகுத்து ஆராய்ஞ்சு, நீயா முடிவெடு. ஒவ்வொரு விஷயத்திலும் இதுமாதிரி, பிரிச்சுப் பார்த்து, உன் மனசுக்கு எது சரின்னு படுதோ, அதைச் செய்யணும். அது உன் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல, உன்னோட சுற்றத்தார், மாநிலம், நாடு, ஏன், உலகத்தோட எதிர்காலத்துக்கும் நன்மை அளிப்பதா இருக்கணும்ங்கறதுதான் முக்கியம்” என்று முடித்தார் உமா மிஸ்.
தோள்மீது சுமை மெல்ல மெல்ல ஏறுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
