தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பறவைகளுக்கு பக்கவாதம்!

பறவைகளுக்கு பக்கவாதம்!

பறவைகளுக்கு பக்கவாதம்!


PUBLISHED ON : நவ 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பர் ஏரி, இந்தியாவில் இருக்கும் முக்கியமான உப்பு ஏரி ஆகும். இதில் வாழ்ந்த சுமார் 18,500 பறவைகள் சமீபத்தில் இறந்து போயிருப்பது சூழலியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தண்ணீரில் ஏற்பட்ட நச்சேற்றம் காரணமாக, பறவைகளின் நரம்புத்தசைகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேர்ந்திருப்பதாக கால்நடை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் சாரை சாரையாக இறந்து போனதை அடுத்து மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் உடல்கூறு செய்ததில், நச்சுக்கலப்பே பறவைகளின் இறப்புக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இராஜஸ்தானில் உள்ள கால்நடைக் கல்லூரியும் பறவைகளின் அழிவிற்கு தண்ணீரில் ஏற்பட்ட நச்சுக் கலப்பே காரணம் என்று சொல்லியிருக்கிறது.

அழுகிப்போன தாவரங்கள் மற்றும் கெட்டுப்போன விலங்குகள் போன்றவற்றின் மீது 'பாக்டீரியம் கிளாஸ்ட்ரீடியம்'( Bacterium clostridium) என்கிற குறிப்பிட்டவகை பாக்டீரியாக்கள் உருவாகின்றன.இதிலிருந்து உருவாகின்ற நச்சுகள் பறவைகளின் நரம்புத்தசைகளைப் பலவீனமாக்கி, அவை இறந்துபோகக் காரணமாகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால்,இந்த பாக்டீரியாக்கள் ஆரம்பத்தில் நச்சுத்தன்மை இல்லாமல்தான் இருக்கின்றன.ஆனால், சுற்றுப்புறக் காரணிகள் மற்றும் காற்று இல்லாமை போன்றவற்றால் இந்த பாக்டீரியாக்கள் நன்கு வளர்ந்து நச்சுத்தன்மை ஏற்படுத்தும் செல்களை உருவாக்குகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

நச்சேற்றம் காரணமாக பறவைகள் பெருமளவில் அழிந்திருப்பதாக ஒருபக்கம் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக உப்புச் சுரங்கம் அமைப்பதால், பறவைகள் ஆயிரக்கணக்கில் அழிந்து போனதாக மற்றொரு வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

சாம்பர் ஏரி, உப்புத்தன்மை கொண்டது. இந்த ஏரியிலிருந்து உப்பு எடுக்கும் பணியை ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் (Hindustan Salts Limited) என்கிற பொதுத்துறை நிறுவனம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முறைப்படி செய்துவருகிறது. ஆனால், இந்த ஏரியைச் சுற்றி சட்டத்திற்குப் புறம்பாக உப்புச் சுரங்கம் உருவாக்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பறவைகள் பெருமளவில் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.

ஜெய்ப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடை மருத்துவராக உள்ள அரவிந்த் மாத்தூர் என்பவர், ஏரி நீரில் சோடியத்தின் அளவு மிக அதிகமானதால் பறவைகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பெருமளவு இறந்து போய்விட்டன என்கிறார்.

குறிப்பாக, சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் உப்புச் சுரங்கங்கள் அமைப்பதால், ஏரியில் உள்ள தண்ணீரின் மட்டம் குறைந்து அதனுடைய உப்புத் தன்மை அதிகமாகிவிட்டது. இதனாலேயே பறவைகள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் இறந்து போயிருக்கின்றன என்பதே மருத்துவர் அரவிந்த் மாத்தூரின் கருத்து.

''த ப்ரிண்ட்'' இணையதளத்தில் சூழலியல் எழுத்தாளர், -பஹர் தத் எழுதிய கட்டுரையிலிருந்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us