தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/"இது உங்க விருது சார்!”

"இது உங்க விருது சார்!”

"இது உங்க விருது சார்!”


PUBLISHED ON : நவ 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசுவாசம்

எங்கள் வீட்டில் பெரியப்பா பெண்ணுக்குத் திருமணம். கல்யாணப் பத்திரிகையை எல்லா உறவினர்களுக்கும் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எங்கப்பாவுக்கு ஒரே பரபரப்பு. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் ஆசிரியராக இருந்த ஒருவருக்குப் பத்திரிகையைக் கொடுக்கவேண்டும் என்று அலைந்துகொண்டு இருந்தார்கள். அந்த ஆசிரியருடைய முகவரியோ வேறு தொடர்புகளோ கிடைக்கவில்லை. அப்பா சளைக்காமல் எல்லா தெரிந்த நண்பர்களிடமும் விவரம் கேட்டுக்கொண்டு இருந்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. எதற்கு இத்தனை ஆர்வம்? பரபரப்பு?

பள்ளிக்கு வரும்போது, எங்கப்பாவின் பரபரப்பு பற்றி உமா மிஸ்ஸிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

“அதுக்குத்தான் விசுவாசம்னு பேரு, கதிர்.”

“அப்படின்னா?”

“பாகிஸ்தான் விஞ்ஞானி டாக்டர் அப்துஸ் சலாம் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?”

“பாகிஸ்தானோட முதல் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிதானே மிஸ்?”

“கரெட். இயற்பியலாளர். 1979இல் இவருக்கு நோபல் பரிசு கிடைச்சுது. இன்னிக்கு 'கடவுள் துகள்'னு சொல்றோமே, அதுக்கான அடிப்படையான ஆய்வைச் செய்த விஞ்ஞானி.

நோபல் பரிசு கிடைச்சவுடனே அவர் செஞ்ச விஷயம் தான் முக்கியமானது.

சுதந்திரத்துக்கு முன்னாடி, லாகூர்ல இருந்த 'சனாதன தர்ம கல்லூரி'யில் அவர் படிச்சிருக்கார். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் அனிலேந்திர கங்குலி.

'அவரை நான் பார்க்கணும். கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க'ன்னு இந்திய அரசுக்கு அப்துஸ் சலாம் கோரிக்கை வெச்சார்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னாடி, பேராசிரியர் கங்குலி, இந்தியாவுக்கு வந்துட்டார். கிட்டத்தட்ட ரெண்டு ஆண்டுகள் தேடி, அவர் கொல்கத்தாவில் இருக்கார்னு கண்டுபிடிச்சாங்க. 1953 வரைக்கும் அவர் ஆசிரியர் பணியில் இருந்தார். கல்யாணமே செஞ்சுக்கலை. மாணவர்களால் பெரிதும் விரும்பப்படும் ஆசிரியராக இருந்திருக்கார்.

1981 ஜனவரி 19ஆம் தேதி, அப்துஸ் சலாம், பேராசிரியர் கங்குலியைச் சந்திச்சார். அப்போதே அவருக்கு தள்ளாமை. படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியலை. அவர்கிட்ட நோபல் பரிசு மெடலைக் காண்பிச்சவர், “திரு. அனிலேந்திர கங்குலி, இது, நீங்கள் சொல்லிக் கொடுத்ததுக்கும், எனக்குள்ளே கணிதத்தின் மீது ஏற்படுத்திய ஆர்வத்துக்கும்

கிடைத்த மெடல்.”னு சொல்லி, அவர் கழுத்துல நோபல் மெடலை அணிவிச்சார். “இது உங்களுக்குக் கிடைச்ச விருது சார். என்னுடையது இல்லை”ன்னு சொன்னார்.

அதுமட்டுமா? கொல்கத்தா பல்கலைக்கழகம், அப்துஸ் சலாமுடைய சாதனைகளை மெச்சி, தேபபிரசாத் சர்பாதிகாரி தங்கப் பதக்கத்தை வழங்க முடிவு செஞ்சுது. அதையும் அவர் ஏத்துக்கலை. 'அதுக்குத் தகுதியானவர் என்னுடைய ஆசிரியர் தான்'னு சொல்லிட்டார்.

1981இல், அனிலேந்திர கங்குலியுடைய வீட்டிலேயே ஒரு சின்ன விழா எடுத்தது கொல்கத்தா பல்கலைக்கழகம். அங்கே அவருக்கு அந்த உயரிய விருதைக் கொடுத்தது. அப்போ, அப்துஸ் சலாம் அங்கே இருந்தார். தன்னோட ஆசிரியர் பெறும் உயரிய கெளரவத்தைப் பார்க்கறதுக்காகவே வந்திருந்தார்.

இதைத்தான் விசுவாசம்னு சொல்றது. தான் பெற்ற ஞானம் தன்னுடையது அல்ல; அது ஆசிரியர் இட்ட பிச்சைங்கறதைப் புரிஞ்சுக்கிட்டவர் டாக்டர் அப்துஸ் சலாம்.

எல்லாம் எனக்குத் தெரியும்னு சில பேர் நினைச்சுக்கறாங்க. ஆனால், அது உண்மை கிடையாது. எல்லா விஷயமும் தன்னாலேயே தெரிஞ்சுடாது. சொல்லிக் கொடுக்க ஒருத்தர் வேணும். அது ஆசிரியரா இருக்கலாம், சக மாணவர்களாக இருக்கலாம். யாரா வேண்டுமானாலும் இருக்கலாம். அடிப்படை, அவர் அமைச்சுத் தர்றதுதான். அதுக்குப் பின்னாடி நீங்க மேன்மேலும் வளர்ந்துடலாம். ஆனால், விதை, அவர் போட்டது.

அதை உணர்ந்து, மதிக்கணும். அவர் இல்லாமல் தான் இல்லைங்கற எண்ணம் வேணும். அதை ஏத்துக்கவும் அங்கீகரிக்கவும் ஒரு பக்குவம் வேணும். அதைத்தான் விசுவாசம்னு சொல்றோம்.

வாழ்க்கை முழுசும் நாம பலபேருடைய தோள் மேல ஏறித்தான் உலகத்தைப் பார்க்கிறோம். அந்தத் தோளுக்குச் செய்யும் மரியாதை தான், விசுவாசம். கண்ணுக்குத் தெரியாத பங்களிப்பு இது. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் செய்யப்பட பங்களிப்பு.

நீயே கொஞ்சம் திரும்பிப் பார். உன்னைத் தூக்கிவிட்டவங்க நிறைய பேர் பின்னாடி நிப்பாங்க.” என்று முடித்தார் உமா மிஸ்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். அப்பாவின் பரபரப்புக்குப் பின்னே இருந்த உணர்வு எனக்குப் பிடிபடத் தொடங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us