PUBLISHED ON : ஜூன் 19, 2017

கையில் செய்தித்தாளுடன் ஓடிவந்தான் பாலு. “மாலு! நீ 75 வாரமா தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ்ல உன் டயரியை எழுதிக்கிட்டு வரே இல்ல, நமக்கு தமிழக அரசு ஒரு பரிசு அறிவிச்சிருக்கு” என்றான் பாலு.
“என்ன பரிசுடா?” என்றேன். “அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, ரூ.4.83 கோடி செலவில் நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கப்படுமென்று தமிழக அரசு கல்வித்துறை அறிவித்திருக்கிறது.” என்றான் பாலு. “நல்ல பரிசுதான். இனி லட்சக்கணக்கான அரசுப் பள்ளி சிறுவர்களுக்கு, பட்டம் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.” என்றார் ஞாநி மாமா. “நூலகம் தொடர்பாகவும் நிறைய நல்ல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. நான் உடனே முதலமைச்சர், கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலாளர் எல்லாருக்கும் பாராட்டுக் கடிதம் எழுதப் போகிறேன்” என்றான் பாலு.
ஆறுமுகம், தனசேகரன், கயல்விழி, தமிழ்ச்செல்வி, இந்திரா எல்லாரும், இனி பள்ளியிலேயே சிறுவர் இதழ் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த ஐந்து பேரும், அரசுப் பள்ளியில் படிக்கும் என் சிநேகிதர்கள். ஒரு முறை எங்கள் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு, வந்திருந்த ஐந்து பேரும் என்னிடம் விதவிதமான கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அப்படித்தான் சிநேகிதர்கள் ஆனோம்.
கண்காட்சியில் என்னுடைய அறிவியல் அரங்கின் பெயர் 'விண்ணிலிருந்து மண்ணுக்கு'. எதெல்லாம் வானத்திலிருந்து பூமிக்கு வரும் என்று முதல் கேள்வி வைத்திருப்போம். எல்லாரும் 'மழை' என்று சொல்லிவிடுவார்கள். மழை மட்டுமல்ல; எரிகற்கள், விண்கற்கள், உடுக்கோள் எனப்படும் ஆஸ்டிராய்டுகளும் முக்கியமானவை.
சுமார் 13 லட்சம் கற்கள் நமது சூரிய மண்டலத்தின் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாமே ஏதோ ஒரு காலத்தில் சூரியனிலிருந்து சிதறியவை. எல்லா கற்களிலும் கொஞ்சம் பாறை கொஞ்சம் ஏதாவது தாதுக்கள் இருக்கும். சிறிய கல்லே 15 அடி விட்டமுடையது. ஆயிரம் கிலோமீட்டர் விட்டம் உடைய கற்களும் உண்டு. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுவது போலவே இவையும் சுற்றுகின்றன.
செவ்வாய் கிரகத்துக்கும், வியாழன் கிரகத்துக்கும் இடையே அஸ்டிராய்ட் வளையம் என்று ஒன்று இருக்கிறது. பெரும்பாலான அஸ்டிராய்டுகள், அந்த வட்டத்திலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. காரணம், வியாழனின் ஈர்ப்பு விசை. கொஞ்சம் விண்கற்கள்தான் பூமிக்கு அருகில் சுற்றுகின்றன.
ஒரு விண்கல் வந்து பூமி மீது விழுந்தால், விழுந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்படும். கடலாக இருந்தால் சுனாமியை கிளப்பிவிடும். ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு விண்கல் பூமியில் மோதி விழுந்ததன் தொடர்விளைவாகத்தான், டைனோசர் விலங்கினம் அழிந்தது என்கிறார்கள். விண்கல் பூமியுடன் மோதும்போது வெளிப்படும் சக்தி, பல நூறு அணுகுண்டுகளுக்கு சமமானது.
சுமார் 500 அடி விட்டமுடைய விண்கல் ஒன்று, சைபீரியாவில் உள்ள துங்கஸ்கா என்ற இடத்தில் 1904ம் ஆண்டு விழுந்தது. பூமியைத் தொடுவதற்கு சில கிலோமீட்டர் முன்பாகவே அந்த விண்கல் வெடித்து சிதறிவிட்டதால், மண்ணில் பள்ளம் எதுவும் விழவில்லை. ஆனால், அதிலிருந்து வெளிப்பட்ட 15 மெட்ரிக் டன் டி.என்.டி. அளவுக்கான சக்தி, 2,000 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு காட்டையே அழித்துவிட்டது. எட்டுக் கோடி மரங்கள் அழிந்தன. ஹிரோஷிமாவில், அமெரிக்கா போட்ட அணுகுண்டைப் போல இது ஆயிரம் மடங்கு அதிக சக்தி!
பூமிக்கு அருகில் சுற்றும் விண்கற்கள் அடுத்து பூமியின் மீது விழாமல் (மோதாமல்) தடுக்க வழி உண்டா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆளில்லாத விமானம், ராக்கெட்டை அனுப்பி, விண்கல் மீது மோதச் செய்து, அதன் சுற்றுப்பாதையை திருப்பி விடுவது ஒரு வழி. அணுகுண்டு தாங்கிய ஏவுகணையை விண்கல் மீது தாக்கி, அதைத் தூள் தூளாகச் சிதறடிப்பது இன்னொரு வழி, என பல்வேறு வழிகளை ஆலோசித்து வருகின்றனர்.
அவ்வப்போது சின்னச் சின்ன விண்கற்கள் பூமியில் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலானவை பூமியின் வளி மண்டலத்தை அடையும்போது, எரிந்துபோய் விடுகின்றன. ரஷ்யாவில் டெலியாபின்ஸ்க் என்ற ஊரில், 2013 பிப்ரவரி 15ல் 60 அடி விட்டமுள்ள விண்கல், நெரிசலாக மக்கள் வாழும் பகுதியில் வானத்தில் வெடித்துச் சிதறியது. அதன் தாக்கத்தில் கட்டடங்களின் கண்ணாடிகள் எல்லாம் உடைந்தன. 1,200 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன.
சுமார் 20 ஆயிரம் விண்கற்கள் பூமியின் சுற்றுப்பாதையில் குறுக்கிடலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். 500 அடி விட்டத்துக்கு மேல் இருக்கும் எல்லா விண்கற்களையும் அடையாளம் கண்டு அவற்றின் பயண திசையை கண்காணித்து வருகிறார்கள் விஞ்ஞானிகள்.
இதையெல்லாம் சொன்னதும், பாலு 'விண்கல் விஞ்ஞானி' ஆக முடிவு செய்துவிட்டான். எனக்கோ ராக்கெட்டில் போய் ஒரு பெரிய விண்கல்லில் இறங்கி, அதை ஆராய்ச்சி செய்துவிட்டு வரவேண்டு மென்று தோன்றியது. 'விண்கல்லுக் கெல்லாம் மனிதர்களை அனுப்புவதில்லை. ஆளில்லா விண்கலங்கள்தான் போய்ப் பார்க்கின்றன' என்றார் மாமா.
வாலுபீடியா 1: இந்த ஆண்டு பூமிக்கு மிக நெருக்கமாக விண்கற்கள் இரு முறை வந்து சென்றன. அடுத்து வர இருப்பது டிசம்பர் 10 அன்று. அது நூறடி விட்டமுள்ள கல். நெருக்கமாக வரும் கற்கள் பூமியைத் தாக்காவிட்டாலும், பூமிக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களை பாதிக்கலாம் என்பதால், தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
வாலுபீடியா 2: ஜூன் 30 - உலக விண்கல் தினம். 1908ல் சைபீரியாவில் விண்கல் விழுந்த நாள்