தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வலி மிகுதல் - 30 - உம்மைத் தொகைக்கு வலி மிகாது

வலி மிகுதல் - 30 - உம்மைத் தொகைக்கு வலி மிகாது

வலி மிகுதல் - 30 - உம்மைத் தொகைக்கு வலி மிகாது


PUBLISHED ON : ஜூலை 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டு பெயர்ச்சொற்களுக் கிடையே வலி மிகும் நிலைமைதான் பெரும்பாலும் இருக்கும். இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையே வலி மிகவே கூடாது என்னும் நிலையில், ஒரு தொகை இருக்கிறது. அதற்கு உம்மைத் தொகை என்று பெயர்.

'நஞ்சை புஞ்சை வாங்கினார்

காடு கரையில் விளைகிறது

தாய்சேய் நலம்

சேர சோழ பாண்டியர் வந்தனர் '

மேற்கண்ட தொடர்களில் நஞ்சை புஞ்சை, காடு கரை, பட்டி தொட்டி, தாய் சேய் என்று இரண்டிரண்டு பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. சேர சோழ பாண்டியர் போல மூன்று நான்கு என மேலும் அடுக்கி வரலாம். அவை அனைத்தும் பெயர்ச்சொற்கள்தாம். ஆனால், அவற்றுக்கிடையே வலி மிகவில்லை. ஏனென்றால் அச்சொற்களுக்கு இடையில் 'உம்' என்ற இடைச்சொல் மறைந்திருக்கிறது. மறைந்திருப்பதைத் தொகுபட்டிருக்கிறது என்று இலக்கணத்தில் சொல்வார்கள். ஒவ்வொரு பெயர்ச்சொல்லின் கடைசியிலும் 'உம்' என்ற இடைச்சொல்லைச் சேர்த்து வழங்கலாம்.

நஞ்சையும் புஞ்சையும், காடும் கரையும், தாயும் சேயும், சேரரும் சோழரும் பாண்டியரும் என்று 'உம்' என்ற இடைச்சொல் சேர்த்து விரித்துப் பொருள்கொள்வோம்.

இவ்வாறு 'உம்' என்ற இடைச்சொல் மறைந்து வரும் உம்மைத் தொகைகளில் வலி மிகுவதில்லை. நாம் எண்களாகச் சொல்லும் சொற்கள் பலவும் உம்மைத் தொகைகளே. முப்பத்து மூன்று என்றால் அது 'முப்பத்தும் மூன்றும்' என்று உம்மைத் தொகையாக விரிந்து பொருள் தரக்கூடியது.

உம்மைத் தொகையாகும் பெயர்ச்சொற்களுக்கிடையே ஒற்றுமையான தன்மை இருக்கும். நஞ்சை புஞ்சை என்பவை விளைநிலப் பெயர்கள். சேர சோழ பாண்டியர் என்பவர்கள் மூவேந்தர்கள். இப்படி உம்மைத் தொகைக்குள் வரும் பெயர்ச்சொற்கள் ஒற்றுமைப் பண்புகளோடு இருக்கும். சில இடங்களில் முரண்பட்டும் வரலாம். தாய் சேய், வரவு செலவு, ஏற்ற இறக்கம், பழமை புதுமை என்னுமிடங்களில் எதிர் நிலைகள் இருப்பதைக் காணலாம்.

இரண்டு பெயர்ச்சொற்களுக் கிடையே 'உம்' என்ற இடைச்சொல் மறைந்து, உம்மைத் தொகையாக வருமிடங்களில் வலி மிகாது.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us