PUBLISHED ON : ஜன 08, 2018
ஸ்மார்ட் போன் என்றழைக்கப்படும் தொடுதிரை கைபேசிகளின் அதிகப்படியான உபயோகம் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதன் விளைவாக தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று, இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இக்குழுவைச் சேர்ந்த தாமஸ் ஜாய்னர் “தொடுதிரை கொண்ட கைபேசிகளில் அதிக நேரத்தைச் செலவழிப்போரிடம் மன அழுத்தமும், அதன் காரணமாக தற்கொலை முயற்சி பற்றிய எண்ணங்களும் அபாயகரமான அளவு அதிகரிக்கின்றன” என்று தெரிவிக்கிறார். எப்போதும் கைபேசியிலேயே மூழ்காமல் விளையாட்டு, நண்பர்களுடன் அளவளாவுவது, புத்தகங்கள் படிப்பது, வீட்டுப் பாடங்களைச் செய்வது போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபடும் பதின்ம வயதினர் மகிழ்வுடன் உள்ளனர் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
