PUBLISHED ON : மார் 04, 2019

“என்ன கதிர், எக்ஸாம் மோடுக்குப் போயிட்டியா?” உமா மிஸ் கேட்டபோது, நான் அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தேன். கடந்த ஒரு வாரமாகத் தேர்வு பயம் ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது. நடுநடுவே விடுமுறை விட்டு, ஒவ்வொரு தேர்வு நடந்துகொண்டு இருந்தது.
“எப்பவோ எக்ஸாம் மோடுக்குப் போயிட்டேன் மிஸ். ஆனால், வழக்கம்போல், எல்லாத்தையும் ஞாபகம் வெச்சுக்கறதுதான் சிரமமாக இருக்கு மிஸ்.” என்றேன். உமா மிஸ் என் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். என்னுடைய பாடப் புத்தகத்தையும், நோட்டுப் புத்தகத்தையும் பக்கம் பக்கமாக விரித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.
பாடப் புத்தகத்தில், ஏராளமான இடங்களில் அடிக்கோடிட்டு இருந்தேன். ஒரு சில முக்கியமான பத்திகளை ஒட்டி, முக்கியம் என்பதைக் குறிக்கும் இரண்டு கோடுகளைப் போட்டு வைத்திருந்தேன். என் அறிவியல் பாடநூல் பார்க்கவே வண்ணமயமாக இருந்தது.
“எக்ஸாம் நேரத்துல இந்த அடிக்கோடிட்ட பகுதிகளை மட்டும் பார்த்துப்பியா? எப்படி படிப்பே?” உமா மிஸ் கேட்டார்.
“இல்ல மிஸ். எல்லாத்தையும் படிப்பேன். எங்கேருந்து வேணும்னாலும் கேள்வி வரலாம்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க!”
“எப்படி இந்த மொத்த டெக்ஸ்புக்கையும் படிச்சுடுவியா?”
“முடியாது மிஸ். கொஞ்சம் வேகவேகமா ஓடுவேன்.”
“அப்பவும் படிச்சு முடிக்க முடியாதே!”
நான் ஆமாம் என்பது போல் தலையாட்டினேன். உமா மிஸ் மிச்சமுள்ள பக்கங்களையும் நோட்டுப் புத்தகத்தையும் முழுமையாகப் பார்த்தார். என்ன தோன்றியதோ!
“கடுமையா உழைக்கிறதைவிட, புத்திசாலித்தனமான உழைக்கணும்ப்பா. இது ஒரு பாடம் மட்டுமில்ல, எல்லா பாடங்களையும் படிக்கறதுக்கு ரெண்டு உத்தி சொல்லித்தரேன். புரிஞ்சுக்கோ. ஈஸியா இருக்கும்.”
மிஸ் சொல்லும்போதே, உற்சாகமாக இருந்தது. படித்ததை மனசில் நிறுத்தி வைத்துக்கொள்ள எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும்.
“ஒவ்வொரு சப்ஜெக்டுலேயும் நிறைய பாடங்கள் இருக்கும். பாடங்களைப் படிக்கும்போது, பக்கத்துல ஒரு சின்ன புத்தகத்தையோ, பேப்பரையோ வெச்சுக்கணும். படிக்கப் படிக்க, அதில இருக்கிற முக்கிய பாயிண்டுகள், டெஃபனிஷன்கள், சூத்திரங்கள், உதாரணங்களை குறிப்பு புத்தகத்துல எழுதி வெச்சுக்கணும். தெளிவா, திருப்பிப் படிச்சா, அந்த அத்தியாயம் மொத்தமும் ஞாபகம் வர்ற மாதிரி சுருக்கமா உங்களோட மொழியில எழுதிக்கணும். புத்தகம் எழுதறவங்க நோக்கம், மொத்த விஷயத்தையும் உங்களுக்குக் கொடுக்கணுங்கறது. அவங்க மிக விரிவாத்தான் எழுதுவாங்க. ஆனால், அதைப் படிச்சுட்டு, நீங்க சம்மரைஸ் செஞ்சுக்கணும். ரெண்டு ரெண்டு வரிகளா, புல்லட் பாயிண்டுகளாக குறிச்சுக்கணும்.
இதனால ரெண்டு, மூணு பயன்கள் உண்டு. மிகத் தெளிவாக எல்லாத்தையும் குறிச்சுக்க முடியும். எழுதி வைக்கும்போதே, அவையெல்லாம் மனசுல ஆழமாகப் பதிஞ்சுடும். மனசு ஒரு மேப் போட்டுடும். ஒண்ணோடு மற்றொன்றைத் தொடர்புபடுத்தி வெச்சுக்கும்.
நாளைக்கு பாடப் புத்தகத்தைத் திருப்பிப் பார்க்க வேண்டாம். குறிப்புப் புத்தகமே எல்லாத்தையும் சொல்லிடும். ரிவைஸ் செய்யறதுக்கும், ஞாபகம் வெச்சுக்கறதுக்கும் குறிப்புப் புத்தகம் பயன்படும்.
தேர்வில் பதில் எழுதும்போது, எந்தப் பாயிண்டு, எதுக்கு அப்புறம் வரும், உதாரணங்கள் என்ன, எப்படி அதை விரிவுபடுத்தி விளக்கணும்னு ஞாபகம் வரும். அதை அப்படியே எழுதிக்கிட்டுப் போகவேண்டியதுதான்.
இதனால், எல்லா பாடங்களையும் கவர் பண்ணிடலாம். ஒன்றிரண்டு பாடங்கள் விட்டுப் போச்சு, படிக்காமல் போயிட்டோமேங்கற கவலையே வேண்டாம்.”
எளிமையான உத்தியாகத் தோன்றியது.
“அடுத்தது என்ன மிஸ்?”
“இதனோட தொடர்புடையதுதான். பாடங்களுக்கும் படங்களுக்கும் தொடர்பு உண்டு. எப்படி எழுத்தால் குறிப்புகளை எழுதி வெச்சுக்கறீங்களோ, அதையே படங்களாக வரைஞ்சு குறிச்சுவெச்சுக்கலாம். அறிவியல் பாடங்களில் பல வரைபடங்கள், ஓவியங்கள் வரும். அதையெல்லாம் நீங்க எப்படியும் வரைஞ்சுதான் பார்ப்பீங்க. அதேபோல், பாடங்களையும் படங்களாக வரையலாம்.
இங்கே படங்கள்கறது ஓவியங்கள் அல்ல. வரைபடங்கள். கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதறதுக்கு முன்னால், ஒவ்வொரு ஸ்டெப்பையும் விவரிக்கற லாஜிக்கை வரைபடமாக போடுவாங்க. அது மாதிரி, ஒரு பாடத்தை எடுத்துக்கிட்டு, அதை பல்வேறு வடிவத்துல சின்னச்சின்ன பகுதிகளாகப் பிரிச்சுக்கிட்டு, சதுரம், செவ்வகம், வட்டம்னு வகைப்படுத்தி, தொடர்புபடுத்தணும்.
அடிப்படையில ஒரே ஒரு விஷயத்தைத்தான் நாம செய்யறோம். பெரிசா இருக்கிற பாடங்கள், மலைப்பை ஏற்படுத்தலாம். அதை சின்னச் சின்ன துணுக்குகளாக மாத்தறதும் ஞாபகத்துல வெச்சுக்கறதுக்கும் வழி கண்டுபிடிக்கறோம், அவ்வளவுதான். அதுவும் தேர்வு நேரத்துல சுலமாக இருக்கணும். அப்போ, பெரிய பாடங்களைப் பார்த்து பிரமிச்சுடக் கூடாது. அதை நாம முழுசா மனசுல வாங்கிக்கிட்டோம். எல்லாத்தையும் படிச்சுட்டோங்கற நம்பிக்கை வரணும். அப்பத்தான், தேர்வைத் துணிச்சலோட அணுக முடியும்.” என்றார் உமா மிஸ்.
இவ்வளவு பெரிய புத்தகங்களை வைத்துக்கொண்டு திண்டாடுவதற்கு, இது எவ்வளவோ தேவலையே! முயற்சி செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒடிசாவின் புதுமைப் பள்ளி
ஒடிசாவில் உள்ள சிற்றூர் பாரல். இதில் 'இண்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் ஃபார் ரூரல் இன்னவோஷன்' என்ற புதுமையான பள்ளி செயற்பட்டு வருகிறது. வழக்கமான பாடங்களோடு, மாணவர்களின் படைப்பாளுமையை மேம்படுத்தும் பல வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 'பிரித்துப் போடு, உடை, மீண்டும் சேர்' என்றொரு வகுப்பு இங்கு உள்ளது. பழைய கணினி, பிரிட்ஜ் போன்றவற்றைப் பிரித்துப் போட்டு, மீண்டும் சேர்த்துப் பழகுகிறார்கள். அதேபோல், வீணான பொருட்களைத் திரட்டி வந்து, அதில் இருந்து பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கிறார்கள். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பும் இங்குள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அனில் என்ற இளைஞரின் முயற்சியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளியில், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வசதி இலவசம். டில்லி ஐ.ஐ.டி.யோடு இணைந்து இப்பள்ளி பணியாற்றுகிறது என்பதுதான் இதன் சிறப்பே.