sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

''இயற்கையோட புதிரை அவிழ்க்கத் தெரியணும்”

/

''இயற்கையோட புதிரை அவிழ்க்கத் தெரியணும்”

''இயற்கையோட புதிரை அவிழ்க்கத் தெரியணும்”

''இயற்கையோட புதிரை அவிழ்க்கத் தெரியணும்”


PUBLISHED ON : பிப் 17, 2020

Google News

PUBLISHED ON : பிப் 17, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெளிவு

“உனக்கு இயற்பியல் வகுப்பு எப்படி நடத்தப்படுது, கதிர்?” உமா மிஸ் வீட்டில் உட்கார்ந்திருந்தபோது கேட்டார்.

ஆண்டுத் தேர்வு தொடங்கவிருக்கிறது. அதனால், நானும் ஓவியாவும், உமா மிஸ் வீட்டில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்தோம்.

“ஏன் மிஸ்? வகுப்புல சந்திரா மிஸ் கிளாஸ் எடுப்பாங்க, கேள்விகள் எழுதிப் போடுவாங்க. பதில்களையும் சொல்வாங்க. நாங்க எழுதிப்போம்.”

“வகுப்புல ஏதேனும் செய்முறைப் பயிற்சிகள் செய்வாங்களா?”

“இல்ல மிஸ். தியரி தான் சொல்லித் தருவாங்க. பிசிக்ஸ் லேபுக்குப் போகும்போது, ஒரு சில பிராக்டிகல்ஸ் செஞ்சு காண்பிப்பாங்க.” என்றாள் ஓவியா.

அதற்குப் பிறகு உமா மிஸ் எதுவும் பேசவில்லை. நாங்கள் படித்துக்கொண்டிருந்த இயற்பியலைப் பார்த்தேன். உண்மையில், அதையெல்லாம் விரைவாகப் படித்து மனனம் செய்துவிட வேண்டும் என்றுதான் எனக்குள் பரபரத்தது. அடுத்தது வேதியியல் படிக்கவேண்டும் என்பது பின்மண்டையில் உறைத்தது.

“நீங்கள் இவ்வளவு சிரமப்படுவதைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு...”

உமா மிஸ் முகத்தில் தெரிந்த கவலை எங்களை ஆச்சரியப்படுத்தியது. என்ன சொல்வது என்று தெரியாமல் அவர் முகத்தையே பார்த்தோம்.

“இதுக்குத்தான் பேராசிரியர்

எச்.சி.வர்மா மாதிரியானவங்கள் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க.”

“இவர் என்ன மிஸ் செய்யறாரு?”

“இயற்பியலைத் தெளிவா புரியவெக்கறதுதான் இவரோட நோக்கம். இன்னிக்கு இல்ல, பல ஆண்டுகளாக விதவிதமாக இதைச் செஞ்சுக்கிட்டு வராரு.”

“ஓ! எல்லாமே செய்முறையா மிஸ்?”

“ஆமாம். இயற்பியல்ல தியரியைவிட, செய்முறை இன்னும் சுலபமானது. எல்லாத்தையும் உடனே புரிஞ்சுக்க முடியும். அதற்கான சின்னச் சின்ன கருவிகள் போதும். அதையெல்லாம் உருவாக்கறதுக்குன்னே பல ஆசிரியர்களைக் கொண்ட குழுக்களை இவர் உருவாக்கியிருக்கார். இதுவரை சுமார் ஆயிரம் டெமோ பரிசோதனைகளை உருவாக்கியிருக்கார். இவர்கிட்ட படிச்ச ஆசிரியர்களும் சொந்தமா பல கருவிகளை உருவாக்கியிருக்காங்க.”

“ஓ!”

“இவருக்கு இதுதான் வேலையே. பிஹார்ல படிச்சவர் எச்.சி. வர்மா. அங்கே கல்லூரியில ஆசிரியரா இருந்தபோதுதான், மாணவர்களோட சிரமங்களை நேரடியாகப் புரிஞ்சுக்கிட்டார். அப்போதெல்லாம் வெளிநாட்டுலேருந்துதான் இயற்பியல் புத்தகங்கள் வரும். உண்மையிலேயே அவையெல்லாம் நல்ல புத்தகங்கள் தான். ஆனால், நம்ம ஊர் மாணவர்கள், அவர்களுடைய புரிதல் சக்தி இதையெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது, அந்தப் புத்தகங்களோட தரம் ரொம்ப ஜாஸ்தியா இருந்தது. அதனால், இவரே இயற்பியல்ல இரண்டு புத்தகங்கள் எழுதினார். இயற்பியலின் கருத்துகள்னு பொருள்படும், 'கான்செப்ட்ஸ் ஆஃப் பிசிக்ஸ்' என்ற அந்தப் புத்தகங்கள் இன்னிக்கும் ரொம்ப பிரபலம். இதனோட நோக்கம் என்ன தெரியுமா? தெளிவுபடுத்தறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இந்தப் புத்தகங்களைத் தான் எல்லா மாணவர்களும் பின்பற்றினாங்க.

அப்புறம் இயற்பியல் ஆசிரியர்களுக்கு எளிமையா பாடம் எடுக்கச் சொல்லிக் கொடுத்தார். இப்போ, இணையம் வழியாக இன்னொரு சிறப்பான விஷயத்தைச் செய்யறார். வெறும் பி.எஸ்சி. படிச்ச மாணவர்கள் கூட இந்த இலவச ஆன்லைன் வகுப்பில் சேரலாம். மூணு மாசத்துல 24 லெக்சர்கள். கிட்டத்தட்ட 18 ஆயிரம் மாணவர்கள் இதுல சேர்ந்து பயிற்சி பெற்றிருக்காங்க. எல்லோருக்கும் அடிப்படை என்ன தெரியுமா? இயற்பியலை எளிமையாக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதுதான்.”

“இயற்பியல்னா ரொம்ப கஷ்டங்கறது, பொய்யா மிஸ்?”

“நிச்சயம் பொய், கதிர். அதை மாதிரியான எளிமையான சப்ஜெக்ட் கிடையாது. எல்லா கருத்துகளும் ஏற்கெனவே நாம் நம்மைச் சுத்தியிருக்கற உலகத்துல பார்க்கறவை, அறிந்தவை தான். ஆனால், அந்த இயற்கையோட புதிரை அவிழ்க்க தெரிஞ்சு இருக்கணும். அதை வகைப்படுத்தத் தெரியணும். கண்ணெதிரே பரிசோதனைகளைப் பார்த்தவுடனே, உங்களுக்கு அதற்குப் பின்னே இருக்கும் அர்த்தம் புரிஞ்சுடும். இயற்பியல், மனசுல போய் உட்கார்ந்திடும். ஆனால், அதுக்கு கொஞ்சம் மெனக்கெடணும். முதலில் தாங்கள் அதை அறிவியல் ரீதியா புரிஞ்சுக்கணும். அறிவியல் கத்துக்கொடுக்கறதுல இன்னிக்கு உலகம் எங்கும் இந்த முறை தான் பின்பற்றப்படுது. கருத்தைச் சொன்னா புரியாது, கருவிகளோட பரிசோதனைகள் செய்து காண்பிச்சா புரிஞ்சுடும். பேராசிரியர் வர்மா அதை இந்தியச் சூழலுக்குப் பொருந்துவது மாதிரி உருவாக்கியிருக்கிறார்.

அவரோட பங்களிப்பை மெச்சித் தான் இந்திய அரசு அவருக்கு இந்த ஆண்டு, 'பத்மஸ்ரீ' விருது கொடுத்தது. அவரோட மாணவர்கள் எல்லோரும் அப்படியே நெகிழ்ந்து போயிட்டாங்க. கண்ணுக்குத் தெரியாத ஹீரோ இவர்னு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார்.”

நான் மீண்டும் புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டேன். அதில் உள்ள இயற்பியல் அம்சங்கள் வரிகளாக கண்ணெதிரே ஓடின. இவையெல்லாம் செய்முறைகளாக, பரிசோதனைகளாக, கருவிகளாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கினேன்.






      Dinamalar
      Follow us