PUBLISHED ON : மார் 18, 2019

இன்னும் ஒருசில நாட்களில் விடுமுறை வரப் போகிறது. அடுத்த ஆண்டுக்கான நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் கொடுப்பார்கள். இதுநடுவே, வகுப்பில் நாங்கள் செய்து கொடுத்திருந்த மாடல்கள், சார்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டார்கள்.
நான் வரைந்த அறிவியல் சார்டுகள் என்னுடைய வகுப்பறையில் மாட்டப்பட்டு இருந்தன. எங்கள் வகுப்பே ஒரு வித்தியாசமான டிசைனில் இருக்கும். இந்த முனைக்கு அந்த முனை கயிறு கட்டி, சார்டுகளைத் தொங்கவிட்டிருப்பார்கள்.
இதையெல்லாம் செய்து கொண்டுவரும்போது பயங்கர உற்சாகமாக இருந்தது. அதுவும் இரண்டு நாள், மூன்று நாள் விடுமுறையில் சார்டுகளைச் செய்யச் சொல்லிவிடுவார்கள். கிடுகிடுவென சப்ஜெக்டைப் படித்து, புரிந்துகொண்டு, அப்பா அம்மாவைப் பிடுங்கியெடுத்து, தேவைப்படும் பொருட்களை வாங்கி, விதவிதமான படங்களை வரைந்து, குறிப்புகள் எழுதி, ஸ்கூலுக்கு எடுத்துக்கொண்டு போவதற்குள் ஒரே பரபரப்பாக இருக்கும்.
வகுப்பில் ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டு, பாராட்டும் போது வேறு மகிழ்ச்சி.
எல்லோர் முன்னிலையிலும் பாராட்டு. அதை அங்கே சுவரில் மாட்டிவைப்பார்கள். பார்க்கும்போதெல்லாம் நாம் தான் இதை வரைந்தோமா என்று அவ்வப்போது ஆச்சரியமே ஏற்படும்.
அதற்குள் அடுத்த சார்ட் வந்துவிடும். பழையவற்றை ஒருபக்கமாக ஒதுக்கிவிட்டு, அடுத்த சார்டுகளைத் தொங்கவிட வேண்டும். இப்போதும் அதே நடைமுறைதான்.
சொல்லப் போனால், எனக்கு ஓவியம் வரையவே வராது. நோட்டுப் புத்தகத்தில் எழுதுவேனே தவிர, பெரிய சார்ட்டில் அகலமாக எழுத வராது. ஆனால், இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கத்துக்கொண்டு விட்டேன். ஸ்டென்சில் வைத்து எழுதுவது, நேரடியாகவே எழுதுவது, அழகாக படம் போடுவது என்பதெல்லாம் தெரிந்துவிட்டது.
இதையெல்லாம் இனி என்ன செய்வது? வீட்டில் எங்கே போய் மாட்டிவைப்பது? தூக்கித்தான் போடவேண்டும். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது, உமா மிஸ்ஸிடம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம்.
“அதுக்குப் பயன் இல்லாமல் இல்லை கதிர். உன் ஞாபகத்துல இந்தப் படம் எப்போதும் நிலைச்சு நிற்கும். அதைவிட, அந்த சார்டுல நீ எழுதின விஷயங்கள் இருக்கே, அதாவது அறிவியல் பாடங்கள், அது எப்போதும் நிலைச்சு நிற்கும்.”
“எப்படி மிஸ்?”
“பாடத்தோடு கலைகளை ஒருங்கிணைப்பது என்று இதுக்குப் பேர். பல ஸ்கூல்கள்ல இதைச் செய்வாங்க. சார்டு எழுதறது, பாட்டு பாடறது, டான்ஸ் ஆடறது, சின்னதா ஒரு டிராமா போடறது, ரெண்டு மூணு பேரை வெச்சு ரோல்ப்ளே செய்யச் சொல்றது… இதெல்லாம் பாடத்தோட கலைகளை இணைக்கறதுக்கான முயற்சிகள்.”
“நான்கூட ரோல்ப்ளே செஞ்சிருக்கேன் மிஸ். இங்கிலீஷ் பாடத்தை கிளாஸ்லேயே நடிச்சு காண்பிச்சோம்.”
“கரெக்ட். உங்க மனசுல எப்படியாவது பாடங்களைப் பதிய வெக்கணும். அதுதான் ஒரே நோக்கம். நீங்கள் வெறுமனே படிச்சுட்டு, இதையெல்லாம் மறந்துபோயிடக் கூடாது. அடுத்த ஆண்டு, இதனோட தொடர்ச்சி இருக்கும். அப்படின்னா, உங்களுக்கு அடிப்படை விஷயங்கள் தெளிவாக புரியணும். அதை நீங்கள் ஞாபகம் வெச்சுக்கவும் செய்யணும். அதுக்கு ஒரே வழி கலைகளோட பாடத்தை இணைப்பதுதான்.”
“பாட்டு எழுது, டிராமா போடுன்னு எங்களைப் படுத்தி எடுத்ததுக்கு இதுதான் காரணமா மிஸ்?”
“கரெக்டா சொன்னே. நம் வாழ்க்கையில ஏதோ ஒரு கலை நம்மோட ஒட்டிக்கிட்டு இருக்கு. சிலர் மிமிக்ரி செய்வாங்க, பாட்டு பாடுவாங்க, சாக்பீஸ்ல, மரத்துல மினியேச்சர் சிற்பங்கள் செய்வாங்க… நானே பார்த்திருக்கேனே. உங்க பசங்களோட புக்ஸ்ல கடைசி பக்கங்கள்ல ஏதாவது ஒரு டிராயிங் இருக்கும். கிளாஸ்ல போர் அடிக்கும்போது, அதையெல்லாம் வரைஞ்சிருப்பீங்க. யாரும் இதை பெரிசா எடுத்துக்கறது இல்ல.”
நானே நிறைய படங்களைக் கிறுக்கியிருக்கிறேன். நான் வரைந்தது பிடிக்காமல், கிழித்தும் போட்டிருக்கிறேன். கிறுக்கும்போது ஏதோ ஒரு மனநிலை இருக்கும். அமைதியாக, கோபமாக, எரிச்சலாக, ஒரு உணர்வு தூக்கலாக இருக்கும். சொல்ல முடியாத உணர்வுகளை கிறுக்கல்கல் காட்டிக்கொடுத்துவிடும்.
“இதுல பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கு. குறிப்பாக, கலைகளோட இணைச்சு சொல்லித்தரப்படற அறிவியல் பத்தி அமெரிக்காவுல ஒரு ஆராய்ச்சி நடந்தது…”
“இதுக்குக்கூட ஆராய்ச்சியா மிஸ்?”
“பின்னே, கலைக்கும் அறிவியலுக்கும் ஞாபகத்துக்கும் தொடர்பு இருக்குன்னு தெரியும். ஆனால், எவ்வளவுதூரம் இந்தத் தொடர்பு உண்மையானது, நீடிச்சு இருக்கும்னு தெரிய வேணாமா?”
“சரிதான் மிஸ். என்ன கண்டுபிடிச்சாங்க?”
“16 வகுப்புகள்ல கிட்டத்தட்ட பதினைஞ்சு, பதினைஞ்சு வாரங்களாக பிரிச்சுக்கிட்டு இரண்டு முறை ஆய்வு செஞ்சாங்க. அறிவியல் பாடத்தையே இரண்டு விதமா சொல்லிக் கொடுத்தாங்க. ஒண்ணு, வழக்கமாகச் சொல்லிக் கொடுக்கறது. இன்னொரு வகுப்பு, அதே பாடங்களை ஓவியங்கள், அனிமேஷன், பாட்டுன்னு பல்வேறு கலைகளோட சேர்த்துச் சொல்லிக் கொடுத்தாங்க. முடிவுகள் என்ன தெரியுமா?”
“என்ன மிஸ்?”
“வழக்கமான முறையில படிக்கற மாணவர்களைவிட, கலைகளோட சேர்த்துப் படிக்கிற மாணவர்கள்கிட்ட, அந்த அறிவியல் பாடங்கள் நீண்டநாள் ஞாபகத்துல இருந்துச்சாம். அதாவது அது அவங்களோட நினைவுலேர்ந்து அவ்வளவு சீக்கிரமா அழிஞ்சுபோயிடலை. வழக்கமான முறையில் படிச்சவங்க, அதையெல்லாம், பரீட்சை முடிஞ்சவுடனே மறந்துட்டாங்க. ஆனால், சார்ட் செஞ்சவங்க, டான்ஸ் ஆடினவங்க, பாட்டு பாடினவங்க, அந்தப் பாட்டுகளையும் ஞாபகம் வெச்சுக்கிட்டாங்க, அதோட சேர்ந்து பாடங்களையும் ஞாபகம் வெச்சுக்கிட்டாங்க.”
“சூப்பர் மிஸ். அப்படின்னா கிளாஸ் ஃபுல்லாவே இப்படி மாத்திடலாமே மிஸ்?”
“தாராளமா மாத்திடலாம். பாடங்கள் புரியறதுக்குத்தான். மனப்பாடம் செய்யறதுக்கு இல்ல. மகிழ்ச்சியோடு ஜாலியா படிச்சா, எல்லாமே நல்லா புரியும், ஞாபகமும் இருக்கும்.”
நான் சார்டுகளில் எழுதியதை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். பல விஷயங்கள் பசுமையாக நினைவில் இருந்தன.
