தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/"உன்னைப் போல் யாருமில்லை!”

"உன்னைப் போல் யாருமில்லை!”

"உன்னைப் போல் யாருமில்லை!”


PUBLISHED ON : மார் 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற 'தி வேர்ல்ட்'ஸ் பெஸ்ட்' போட்டியில் டைட்டில் மற்றும் ரூ.7 கோடி பரிசு வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் 13 வயதான லிடியன் நாதஸ்வரம்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் ஆரம்பித்த நிகழ்ச்சி 'தி வேர்ல்ட்'ஸ் பெஸ்ட்' ரியாலிட்டி ஷோ. இதில், 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், குழுவாகவும், தனி நபராகவும் கலந்துகொண்டனர்.

சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதலே, தனது அசாத்திய பியானோ மற்றும் டிரம்ஸ் இசைக்கும் திறமையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார்.

இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில், இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் அசத்தல் வேகத்தில் வாசித்து சாம்பியன் பட்டம் வென்றார் லிடியன் நாதஸ்வரம். இவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோரின் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், லிடியனுடன் பேசியதிலிருந்து....

டிரம்மராக ஆரம்பித்து, பியானிஸ்டாக பரிணமித்தது எப்படி?

2 வயதிலிருந்தே டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எட்டு வயதுவரை, அதிலேயே முழுதாக ஈடுபட்டிருந்தேன். தாள வாத்தியத்துடன் மட்டும் நின்றுவிடாமல், பியோனா போன்ற இசைக்கருவிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியவர் என்னுடைய அப்பா சதிஷ் வர்ஷன். அவர் ஒரு இசையமைப்பாளர். என் வயதை ஒத்த சீனக்குழந்தை ஒன்று, அபாரமாக பியானோ வாசிக்கும் வீடியோவை என்னிடம் காட்டினார். அது தந்த ஆர்வத்தில், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, 'பம்பிள் பீ' போன்ற சங்கீதத்தை வாசிக்கும் அளவுக்கு, 2 மாதத்திலேயே நன்கு தேர்ச்சி அடைந்துவிட்டேன்.

வேர்ல்டு பெஸ்ட் அங்கீகாரத்துக்கு பின்னால் உள்ள முயற்சி என்ன?

பியானோவில் பல மணிநேர பயிற்சி மேற்கொண்டேன். இதில், இசை என்று மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தேவைப்படும் சிறுசிறு விஷயங்களிலும் பயிற்சி எடுத்தேன். நான் பள்ளிக்கூடத்துக்குப் போகாததால், எங்கே இங்கிலீஷ் பேச முடியாமல் போய்விடுமோ என்று பெற்றோர் கவலைப்பட்டார்கள். அதனால், சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் சிரமங்கள் ஏற்படும். எனவே, ஆன்லைன் வீடியோக்கள் மூலம் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பைக் கற்றுக்கொண்டேன். ஆங்கில அனிமேஷன் படங்களைப் பார்த்தேன். வீடியோ கேம்ஸ், டி.வி. என்று எதுவுமில்லாமல் இசையைப் பற்றி மட்டுமே சிந்தித்தேன்.

நீங்கள் நெகிழ்ந்த பாராட்டு சம்பவம் ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில், நான் டிரம்ஸ் வாசித்தேன். அப்போது, ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் என்னை அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான், “டிரம்ஸ் வாசிக்க இந்தியாவிலேயே உன்னைப்போல் யாருமில்லை” என்று பாராட்டினார். அதை மறக்கவே முடியாது.

பியானோ என்பது மெதுவான இசைக்கருவி... அதை வேகமாக வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளீர்களே?

உண்மைதான். ரசித்து வாசிப்பது ஒருபுறமிருக்க, சிறியவர்களால் வேகமாகவும் வாசிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் முயற்சியே இது. கண்களைக் கட்டிக்கொண்டு வேகமாக வாசிப்பது, இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசிப்பது ஆகியவற்றுக்கு நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டேன்.

உங்கள் பெயரே வித்யாசமாக இருக்கிறேதே. யார் பெயர் வைத்தார்கள்?

ஆம், நான் பிறந்தேன் என்று கேள்விப்பட்டபோது, என் அப்பா ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தாராம். அதில், 'லிடியன்' என்ற இசை அளவையை குறித்த வார்த்தை வரவே, அதையே என் பெயராக வைத்தாராம். வெள்ளைக்கார பெயராக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, அசுர வாத்தியக்கருவியான நாதஸ்வரத்தையும் சேர்த்து வைத்ததாக அப்பா சொல்வார். இது Never before, Never after பெயர். இதற்கு முன்னாலும் இல்லை. இனியும் வைக்கப்படுவதற்கு சாத்தியம் குறைவே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us