sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வசுதெய்வ குடும்பகம்

/

வசுதெய்வ குடும்பகம்

வசுதெய்வ குடும்பகம்

வசுதெய்வ குடும்பகம்


PUBLISHED ON : டிச 25, 2017

Google News

PUBLISHED ON : டிச 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“வால் நட்சத்திரத்துக்கு நிஜமாகவே வால் இருக்குமா?” என்று கேட்டான் பாலு. உடனே வாலு சிரித்தது. “வாலுவுக்கு நிஜமாகவே வால் இருக்கிறதா என்ன? கனெக்டிங் ஒயரைத்தானே நாம் வாலாக நினைக்கிறோம். அந்த மாதிரிதான் வால் நட்சத்திர விஷயமும்” என்றார் ஞாநி மாமா.

வால் நட்சத்திரத்துக்கு ஆங்கிலத்தில் காமெட் என்று பெயர். காமெட் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பொருள். பாறைத் துகள்கள், தூசி, ஐஸ், உறைந்த வாயுக்கள் எல்லாம் அடங்கிய ஒரு பந்து. சூரியனுக்கு அருகில் செல்லும்போது வெப்பத்தால், காமெட்டில் இருக்கும் ஐஸ், வாயுக்கள் எல்லாம் கொஞ்சம் உருகி வெளிப்படுவது, பந்தின் வால் மாதிரி தெரியும்.

“புகழ்பெற்ற காமெட் ஹெய்லி'ஸ் காமெட்.” என்றார் மாமா. எட்மண்ட் ஹெய்லி 1656 முதல் 1742 வரை வாழ்ந்த ஓர் ஆங்கிலேய விண்வெளி ஆய்வாளர். அவர் ஒரு காமெட்டை ஆராய்ந்து, அதே காமெட்டைத்தான் 1456,1531,1607,1682 ஆகிய ஆண்டுகளில் திரும்பத்திரும்ப ஆராய்ச்சியாளர்கள் பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார். அது திரும்பவும் பூமிக்கு அருகே 1758இல் வரும் என்று அவர் சொன்னார். அப்படியே அது வந்தது. ஆனால், ஹெய்லி அப்போது உயிரோடு இல்லை. அவர் பெயரை அந்த காமெட்டுக்கு வைத்துவிட்டார்கள்.

ஹெய்லி காமெட் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் பார்க்கிற மாதிரி வருகிறது. சூரியனைச் சுற்ற அது எடுத்துக் கொள்ளும் கால அளவு இது. கடைசியாக 1986இல் நம்மை எட்டிப் பார்த்தது. அடுத்து 2062இல் தான் வருமாம். எல்லா காமெட்டுகளும் சூரியனைச் சுற்ற, இதே கால அளவை எடுத்துக் கொள்வதில்லை. ஐந்து முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள் சுற்றும் காமெட்டுகளும் நிறைய உண்டாம்.

“கடைசியாக, மக்கள் வெறும் கண்ணால் பார்த்து ரசித்த வால் நட்சத்திரம் ஹேல்-பாப். 1997இல் வந்தது. அடுத்து 2018இல் மூன்று வால் நட்சத்திரங்கள் நம் பக்கம் வருகின்றன” என்றார் மாமா.

சூரியக் குடும்பத்தில் வால்நட்சத்திரங்களும் அடக்கம்.

“ஏன் சூரியக் குடும்பம் என்று சொல்கிறோம்?” என்றான் பாலு.

“சூரிய மண்டலத்தில் இருக்கும் எல்லாம் சூரியக் குடும்ப உறுப்பினர்கள். அந்த அர்த்தத்தில்தான் சொல்கிறோம். இதில் அப்பா யார், அம்மா யார், பிள்ளைகள் யார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. ஆனால், சூரியக் குடும்பம் என்ற கருத்தின் தந்தை என்று விஞ்ஞானி கோப்பர்நிக்கஸை சொல்கிறார்கள்.” என்றார் மாமா.

“இந்த அப்பா, அம்மா, குழந்தைகள் என்று ஒரு குடும்பத்தைக் குறிப்பிடுகிறோமே, இந்தக் குடும்ப அமைப்பு முறை எப்போது எப்படி ஆரம்பித்தது?” என்று கேட்டேன். ''பிரடெரிக் ஏங்கல்ஸ் என்ற ஜெர்மன் அறிஞர், இதைப் பற்றி ஓர் ஆய்வு நூல் எழுதியிருக்கிறார்'' என்றார் மாமா.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மனிதர்கள் ஆதிவாசிகளாக இருந்தபோது குடும்பம் இருக்கவில்லை. வேட்டையாடி மிருகங்களைக் கொன்று தின்று, காய் கனிகளைப் பறித்துப் புசித்து வாழ்ந்தவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முறையும் கணவன் - மனைவி முறையும் இருக்கவில்லை. குழுத் திருமண முறையே பின்பற்றப்பட்டது. யாரும் யாரோடும் சேர்ந்து வாழ்ந்தார்கள். குழந்தைகள் பிறந்தபோது, அப்பாவுக்கு முக்கியத்துவம் இருக்கவில்லை. அம்மாதான் எல்லாம். அம்மாவைச் சுற்றியே சமூக அமைப்பு அப்போது இருந்தது. விலங்குகளைப் பழக்க ஆரம்பித்ததும், எல்லாம் மாற ஆரம்பித்தது. அவரவர் பழக்கும் விலங்கு அவருடைய சொத்து என்று ஆயிற்று. அடுத்து, உழுது பயிரிடக் கற்றுக் கொண்டபோதும், முதலில் யாருடைய தனிப்பட்ட சொத்தாகவும் நிலம் இருக்கவில்லை. அனைத்துமே ஆதிவாசிக் குழுவுக்குச் சொந்தம். நிலமும் விலங்குகளும் தனித்தனியே ஒருவருக்குச் சொந்தம், உரிமை என்று மாற ஆரம்பித்தபோது, அம்மாவைச் சுற்றியிருந்த அமைப்பும் மாறத் தொடங்கியது. அப்பா, அம்மா, பிள்ளைகள் சேர்ந்தது தனிக் குடும்பம் என்ற அமைப்பு உருவாயிற்று.

“ஜனவரி முதல் தேதியை பலரும் ஆண்டு ஆரம்பம் என்று கொண்டாடுகிறோம். அதே நாள்தான் உலகக் குடும்ப தினமும்கூட. குடும்பத்தைக் கொண்டாடுவதற்கான நாள்.” என்றார் மாமா. “யார் கொண்டாடுகிறார்கள்? அப்பா, அவருடைய நண்பர்களுடன் சினிமாவுக்கு போய்விடுகிறார். அம்மா அவரின் சிநேகிதிகளுடன் கோவிலுக்குப் போகிறார். நாங்கள் போரடித்துப் போய் உங்களுடன் அரட்டை அடிக்க வந்துவிடுகிறோம். குடும்பம் ஒன்றாக இருப்பது இல்லையே.” என்றேன்.

“குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள, கருத்துப் பரிமாற, சந்தோஷங்களைப் பகிர, துக்கங்களைச் சொல்லித் தீர்த்துக் கொள்ள விடுமுறை நாட்களைப் பயன்படுத்தவேண்டும். 'டிவி' முன்னால் எலலோரும் உட்கார்ந்திருப்பது எலலோரும் ஒன்றாக இருப்பதாகாது.” என்றார் மாமா.

“உண்மையில் மேலை நாடுகளைவிட நாம் தான் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தானே பொதுவாகச் சொல்கிறார்கள்?” என்று கேட்டேன். “அது ஓரளவுதான் உண்மை. மேலை நாடுகளில் ஒவ்வொரு தனி மனிதரும் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அதனால் தான், தனி நபரின் உரிமை, கடமை இரண்டும் முக்கியமாக அங்கே கருதப்படுகிறது. ஒரு குழந்தைக்குக்கூட, அதன் உரிமைகளை குடும்பம் மதிக்க வேண்டும் என்கிறார்கள். தனி நபரைவிட குடும்பம் முக்கியம் என்று கருதுவது ஆசிய நாடுகள் முழுவதும் இருக்கிறது. இதனால் நமக்கு பல லாபங்களும் இருக்கின்றன. நஷ்டங்களும் இருக்கின்றன. குடும்பம் உனக்கு எத்தனை வயசானாலும் ஒரு பாதுகாப்புக் கவசம் மாதிரி இருக்கிறது. 40 வயதானவர்கூட 60 வயது அம்மாவுக்கு குழந்தைதான். அதே சமயம் பலருக்கு குடும்பமே ஒரு சுமையாகவும் ஆகிவிடுகிறது. அக்கா, தங்கை திருமணச் செலவுக்காகத் தன்னை வருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயம் பல இளைஞர்களுக்கு இருக்கிறது. அப்படி சுமை இல்லாவிட்டால் அவர்களெல்லாம் சொந்த வாழ்க்கையில் பிரகாசிப்பார்கள். நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான வடிவம் குடும்பம். ஆனால், அதை சுகமானதாக ஆக்கப் போகிறோமா சுமையாக ஆக்கப் போகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது. குடும்பத்துக்குள் எல்லா உறுப்பினர்களையும் மதிக்கும் ஜனநாயகம் இருந்தால், அது நிச்சயம் சுமையாக மாறாது.” என்றார் மாமா.

“இப்போதெல்லாம் பெரிய குடும்பங்களே இல்லையே. பழைய குரூப் போட்டோ மாதிரி எடுக்கவே முடியாது. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை எல்லாம் காணாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தாத்தா பாட்டி, ஒரு அப்பா அம்மா, அப்புறம் ஒரே ஒரு குழந்தை என்று ஆகிவிட்டதே.” என்றான் பாலு.

“எத்தனை பேர் இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. இருக்கிறவர்கள் ஒருவரோடொருவர் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்” என்றார் மாமா. “தவிர இன்றைக்கு உலகமே தொழில்நுட்பத்தால் சுருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் எல்லோரும் நம் குடும்ப உறுப்பினர்கள்தான் என்று கருதிக் கொண்டால், இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். ”

உடனே வாலு “நம்மைப் போல வசுதெய்வ குடும்பகம் (பூமி ஒற்றைக் குடும்பம்) ” என்றது. எல்லாரும் ஆமென்றோம்.

வாலுபீடியா 1

இதுவரை மொத்தம் 5,253 வால்நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வால் நட்சத்திரத்தில், விண்வெளி ஆய்வுக்கலத்தை இறக்கி ஆய்வு செய்யும் முயற்சியை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசெட்டா வெற்றிகரமாகச் செய்தது. வால்நட்சத்திரம் திரும்பத் திரும்ப வரும் என்ற கருத்தை, ஆறாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானி வராகமிஹிரர் சொல்லியிருக்கிறார்.

வாலுபீடியா 2

ஒருவர் உறவினர்; மற்றவர் அந்நியர் என்பவர் குறுகிய மனத்தினர். முழு உலகமும் ஒரு குடும்பம் என்பவர் பெருமனம் உடையோர். - மகா உபநிஷதம்.






      Dinamalar
      Follow us