PUBLISHED ON : ஜூலை 25, 2016

மழை பெய்தால் மண்ணில் நிறைய அதிசயங்கள் நடக்கும். அந்த அதிசயங்களை நதி, அருவி, ஊற்று, தாவரங்கள் செழித்தல் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் ஒன்று காளான் (Mushrum). மழை பொழியும் நாட்களில் மண்ணில் இருந்து கிளம்பும். டோட்ஸ்டூல் (Toadstool) என்றும் காளானுக்கு மற்றொரு பெயர் உண்டு. காளான் ஒரு வகைப் பூஞ்சை. இது வளர சூரிய ஒளி தேவையில்லை. நல்ல சத்து மிக்க உணவு. தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் அடங்கி உள்ளன. சீனா பல நூற்றாண்டுகளாக தன் பாரம்பரிய மருத்துவத்தில் காளானைப் பயன்படுத்திவருகிறது.
சர்க்கரை, கொழுப்பு, மன அழுத்தம் போன்றவற்றை காளான் குறைப்பதாய் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'காய்கறிகளில் இறைச்சி' என்று காளான் சொல்லப்படுகிறது. எல்லா வகைக் காளானும் சாப்பிடத் தகுந்தவை அல்ல. விஷத் தன்மை உள்ள காளான்களும் உண்டு.
சில இயற்கைக் காளான்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும். அவற்றில் வழுவழுப்புத் தன்மை அதிகம் இருக்கும். சில நேரங்களில் கெட்டித்தன்மையும் இருக்கும். இதனை சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.
வெள்ளைக் காளான் நமக்குத் தெரியும். சிவப்பு, அரக்கு போன்ற வண்ணங்களிலும் காளான் உண்டு.
இயற்கையாக வளரும் காளான்களுக்கு, அம்புக் காளான், குடைக்காளான் என்று, வடிவத்தைப் பொறுத்துப் பெயர்!
செயற்கைச் சாயங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், காளானில் இருந்து பெறப்பட்ட சாயம், கம்பளி மற்றும் பிற இயற்கை இழைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது.
