PUBLISHED ON : ஜூலை 25, 2016

'பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பேன்' என்று என்னதான் நாம் உறுதியாக இருந்தாலும், அதை முற்றிலும் செயல்படுத்த முடிவது இல்லை. சில உணவுப் பொருட்களை, 'பேக்கேஜ்ட் ஃபுட்' என்ற பெயரில், பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்பனை செய்கிறார்கள். உணவு வேண்டும் என்றால், பிளாஸ்டிக் குப்பையைத் தவிர்க்க முடியாது. பிளாஸ்டிக் குப்பை வேண்டாம் என்றால், உணவைத் தவிர்க்க வேண்டும். இதற்கு என்னதான் தீர்வு?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின், உயிரித்தொழில்நுட்பப் பேராசிரியர் டேவிட் எட்வர்ட்ஸ், இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். கால்சியம், செல்லுலோஸ் போன்ற உணவுப் பொருட்களில் உறைகள் செய்து, உணவை அடைப்பதுதான் அந்தத் தீர்வு. உணவைப் பயன்படுத்திவிட்டு, அதை மூடி இருக்கும் உறையையும் சாப்பிடலாம். கோன் ஐஸ் மாதிரி! இதற்கு 'விக்கிசெல் பேக்கேஜிங்' என்று பெயர் வைத்து இருக்கிறார், எட்வர்ட்ஸ். ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்களைக் கூட இந்த முறையில் அடைத்து விற்கமுடியும் என்று நிரூபித்து இருக்கிறார். விக்கிசெல் உறைகள் உணவைப் போன்றே ருசியாக இருக்குமாம். அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளில் விக்கிசெல் உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. இது நம் ஊருக்கும் வந்தால் நன்றாக இருக்கும். இல்லை, இல்லை...சுவையாக இருக்கும்.
