PUBLISHED ON : ஜூலை 25, 2016

விசித்திரமான கற்பனை எல்லாருக்கும் இருக்கும். குறிப்பாகச் சிறு வயதுக்காரர்களுக்கு இருக்கும். நேரில் பார்த்திராத மனிதர்களும் விநோத ஜந்துகளும் அதில் உலாவுவார்கள். அதுபோல ஒருவரின் கற்பனையில் பிறந்து உலக அளவில் மிகவும் பிரபலமான கதைதான் ஹாரி பாட்டர்!
'நான் நேத்துத்தான் படிச்சேன், 'அந்தத் தங்கப் பெட்டிக்குள்ள இருக்குற மோதிரத்துக்கு உயிர் இருக்குமாமே!' நீ படிச்சியா இல்லயா?' என்று அந்தக் கதைகளைப் பேசி நண்பர்களிடம் வியந்திருப்போம். புத்தகமாகப் படிக்கவில்லை என்றாலும், ஹாரி பாட்டர் படங்களைப் பார்த்தாவது அந்த மாய உலகத்திற்குள் ஒருமுறையாவது சென்று வந்திருப்போம்!
“குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்த அப்படி என்ன இருக்கு அதுல? துடைப்பக் கட்டை மேல ஏறி பறப்பாங்க, கம்பி மத்தாப்பு வச்சு மாயாஜாலம் செய்வாங்க, திடீர் திடீர்ன்னு மறைஞ்சு போவாங்க. இவ்ளோதான இருக்கு?” எனறு சிலர் நினைக்கலாம். அதையெல்லாம் தாண்டி, ராட்சத அலைகள் மோதும் கருநீலப் பெருங்கடல், ஜொலிஜொலிக்கும் கட்டடங்கள், மந்திரக் குச்சியை அசைத்தால் மாளிகை முழுவதும் எரியும் மெழுகுவத்திகள் என கற்பனைகளை மீறி ரசிப்பதற்கு நிறைய இருக்கின்றன.
அந்தக் கதை படிக்கிற அல்லது பார்க்கிற நமக்கும், ஹாக்வார்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியில் சேரணும்னு ஆசை வராம இருக்குமா என்ன?!
ஹாரி பாட்டர் நாவல்களை எழுதிப் புகழ் பெற்றவர் ஜே.கே.ரவுலிங். வாழ்வின் ஆரம்ப காலத்தில் வறுமையில் இருந்த இவர் இன்று, இங்கிலாந்து ராணியை விடப் பணக்காரர்! இவருடைய பிறந்தநாள் ஜூலை 30, 1966
முதல் புத்தகம் 1997ஆம் ஆண்டு வெளியானது. மொத்தம் 7 புத்தகங்கள், 8 திரைப்படங்கள். அது மட்டுமில்லாமல், வீடியோ கேம், பொம்மைகள், தீம் பார்க் என ஹாரி பாட்டருக்கு தனி உலகமே உருவாகிவிட்டது!
ஹாரி பாட்டர் நூல் இதுவரை 60க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுக்க 45 கோடி பிரதிகளுக்கு அதிகமாக விற்கப்பட்டு இருக்கின்றன!
தமிழிலும் ஹாரி பாட்டர்!
பி.எஸ்.வி.குமாரசாமி என்பவர் முதல் இரண்டு பாகங்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இவற்றை மஞ்சுள் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது.
தற்போது, Harry Potter and the Cursed Child' என்ற பெயரில், ஒரு நாடகம் வெளியாக இருக்கிறது.
