PUBLISHED ON : ஜன 16, 2017
இந்திய வரலாற்றில், பிற பகுதிகளில் நிகழ்ந்ததைப் போன்ற பெரும் போர்கள், தமிழக நிலத்தில் நடக்கவில்லை. சங்க காலத்தில்கூட தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுக்கிடையே போர்களும் முற்றுகைகளும் நிகழ்ந்திருந்தாலும் அவை பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தவில்லை. பூண்டற்று ஒழிக்கும்படியான நாசங்களை ஏற்படுத்தவில்லை. அதுவுமில்லாமல் மன்னர்களுக்கிடையே நல்ல நட்புறவும் இருந்தது.
போர் ஏற்படக்கூடிய சூழல் இருந்தாலும் புலவர்களும், பாணர்களும் இருதரப்புக்கும் இடையே தூதுவர்களாகச் சென்று போரைத் தடுத்து நிறுத்தினர். இது, பழந்தமிழக வரலாறு. தென்னகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய போரான தலைக்கோட்டைப் போர்கூட கிருஷ்ணா நதிக்கரையில்தான் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்குள் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது.
வணிகத்திற்காக நம் நாட்டுக்குள் வந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் ஆகியோர் இம்மண்ணின் வளத்தால் மிகவும் பேராசையுற்றனர்.
இந்திய நாட்டின் அரசர்களுக்குள் நிலவிய பகையையும் ஒற்றுமையின்மையும் வணிகத்திற்காக வந்த ஐரோப்பியர்களுக்குச் சாதகமாக மாறிற்று. கடல் வணிகத்தைத் தம் கைகளுக்குள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் எளிதில் மன்னர்களோடு வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டனர். அவர்கள், தம்மோடு சிறிய எண்ணிக்கையிலான படைகளையும் வைத்திருப்பர். அப்படையே அவர்களுடைய வணிகப்பொருள்களை வழிக்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றும்.
இந்திய நிலத்தில் காலூன்றிய ஐரோப்பியர்களின் படைகள், சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்த ஏதேனும் ஓர் இந்திய அரசர்க்கு சார்பாகப் போரிடவும் அனுப்பப்பட்டன. இறுதியில் ஐரோப்பியப் படையினர் ஒவ்வொரு அரசரையும் அழித்தும் அடக்கியும் வெற்றிகொண்டும் வந்தனர். அவை ஓரளவு நிறைவேறியவுடன் ஐரோப்பியர்களுக்கிடையே போர்களும் பூசல்களும் மூண்டன. ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் நிலவிய பகை, இங்கும் தொடர்ந்தது. இந்திய நிலத்தை யார் ஆள்வது என்ற போட்டி கடுமையடைந்தது.
அப்போது தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் நிலவிவந்தது. தமிழகத்தில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசிக் கோட்டையைப் பிரெஞ்சுப்படையினர் தக்க வைத்திருந்தனர். அக்கோட்டையைக் கைப்பற்றினால் ஒழிய, இந்தியாவில் முழுமையான ஆங்கிலேய ஆதிக்கம் சாத்தியமில்லை என்பதை ஆங்கிலேயர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் 22.01.1760ல் ஆங்கிலேயத் தளபதி சர் அயர்கூட் (Sir Eyre Coote) என்பவர் தலைமையில், பெரும் வீரர்களையும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் கொண்ட ஆங்கிலேயப் படை வந்தவாசிக் கோட்டையை முற்றுகையிட்டது.
வந்தவாசிக் கோட்டையைக் காக்கும் பொறுப்பில் பிரெஞ்சுத் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி, ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்றார். இருதரப்புக்குமிடையில் கடுமையான போர். எண்ணற்ற படைவீரர்கள் மாண்டனர். இறுதியில் ஆங்கிலேயர் கை ஓங்கியது. வந்தவாசிக் கோட்டையை ஆங்கிலேயப் படை கைப்பற்றியது. அதன்பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி நம்நாட்டில் 1947 ஆகஸ்டு வரை நீடித்தது.
பிரெஞ்சுக்காரர்களுக்குப் பழைய ஐரோப்பிய ஒப்பந்தம் ஒன்றின்படி பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம் போன்ற பகுதிகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டன. வந்தவாசிப் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றிதான், அவர்கள் தென்னகப் பகுதிகளில் வலுவாகக் காலூன்ற வித்திட்டது. இன்றும் வந்தவாசிக் கோட்டையின் சிதிலங்களை அவ்வூரில் காணலாம்.
- மகுடேசுவரன்

