
இயந்திரத்தைக் காட்டிலும் மனித கரங்களால் உருவாக்கப்படும் பொருட்களில் கலைநயம் மிளிரும். கலைநயத்துடன், பக்குவமாய் வடிவமைக்கப்படும் பொருள்தான் மண்பானை.
பழந்தமிழர்கள், களிமண்ணால் செய்து, சூளையில் சுட்டு பயன்படுத்திய தொழில்நுட்பமே, பானை. உலோகங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், சமைக்கவும், தண்ணீர் பிடித்து வைக்கவும் பானைகள் பயன்படுத்தப்பட்டன; பண்டங்கள் நிரப்பி வைக்கவும் பயன்பட்டன. பிள்ளைகள் விளையாடும் சின்ன சொப்பில் இருந்து, பெரிய, பெரிய பானைகள் வரை விதவிதமான வடிவில் தயாரிக்கப்பட்டன.
பானைகளை செய்வதற்கு, அதற்கென்று உரிய களிமண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அதை பதமாகக் குழைத்து சக்கரத்தில் ஏற்றி, தேவையான வடிவில் பானைகளைச் செய்வார்கள்.
உலக நாகரிகத்தின் முன்னோடியாக மண்பானைகள் கருதப்படுகின்றன. மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஓட்டுத்துகள்களைக்கொண்டு காலத்தையும், நாகரிகத்தையும் கண்டறிகின்றனர் தொல்லியல் அறிஞர்கள். பானைகளிலும் பாறைகளிலும் சித்திரங்கள் எழுதித் தகவல் பரிமாற்றம் செய்துகொண்ட மனிதன், எழுத்துருவைப் பிற்காலத்தில் கண்டுபிடித்தான். தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களை பானைக்குள் வைத்து புதைக்கும் பழக்கம் ஆதிக்காலத்தில் இருந்துள்ளது. இதை ஈமத்தாழி என்று அழைத்தனர்.
மண் சட்டியை பானை, கலம், குடம், தாழி, குழிசி, தசும்பு என பல்வேறு பெயர்களில் அழைத்தனர். பல்வேறு வடிவங்களில் அமைத்தனர்.
'மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறை' என்பது புறநானூற்று(33) வரி. காட்டில் வேட்டையாடிய வேடுவன், மான் கறியை வட்டியிலே கொண்டு வந்து கொடுக்கிறான். அதற்கு பண்டமாற்றாக ஆயர்குல பெண், தயிரை பானையில்(தசும்பு) கொண்டுவந்து தருவாள் என்கிறது இந்தப் பாடல்.
'ஆங்கண் இருஞ்சுனை நீரோடு முகவாக் களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி'
இது, அகநானூற்று(393)பாடல். பானைகளில் (குழிசி) சுனை நீர் கொண்டு வந்து சோறு சமைத்து உண்டதை தெரிவிக்கிறது, இந்தப் பாடல்.
பானை, குடங்களைச் செய்து பழகிய தமிழர்கள், அக்குடங்களில் அழகியலை புகுத்தினர். பல்வேறு பூ வேலைப்பாடுகளையும், வண்ணங்களையும் தீட்டி அழகு பார்த்தனர். 'நுண் செயல் அம்குடம் இரீஇப் பண்பின்'(அகம் 336) என்ற வரிதான், நம் மூதாதையர் பானைகளில் வண்ணங்களையும், ஓவியங்களையும் தீட்டி மகிழ்ந்தனர் என்பதற்கு சாட்சி.
பண்டை தமிழ் மக்கள் இறந்து விட்டால், ஈமத்தாழி எனப்படும் பெரிய பானைகளில் வைத்து புதைத்தனர். அரசன் மீது அன்பு வைத்திருக்கிறாள் ஒரு பெண். அரசனோ இறந்து விடுகிறான். அந்தப் பெண்ணோ அரசனுடன் சேர்ந்து தானும் இறந்து போக ஆசைப்படுகிறாள். அதற்காக குயவனிடம் தனக்கும் சேர்த்து, பெரிய பானையாக செய்யுமாறு கூறுகிறாள்.
'கலம்செய்கோவே கலம் செய் கோவே
...
...
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி'(256)
என்று துயரத்துடன் வேண்டுகோள் வைக்கிறாள்.
மண்பானையில் சமைக்கும் உணவு சுமை மிகுந்தது. ஆரோக்கியம் மிக்கது. ஆனால், மண் பானைகள் வெறும் சமையல் பாத்திரங்களாக மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவை சரித்திர பானைகளாகவும், காலத்தை அறியும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
மண்ணின் இயல்பு
மண்ணுக்கென்று ஓர் இயல்பு உண்டு. வெப்பமற்று இருக்கையில் தனித்தனித் துகள்களாய் இருக்கும். ஒன்றோடொன்று பிணைபடாமல் அதன் மூலக்கூறுகள் அமைந்திருக்கும். ஆனால், ஈரமானதும் அவற்றுக்கிடையே நீரேறுவதால் சற்றே நெகிழ்வடைந்துவிடும். வண்டல் அதிகமுள்ள களிமண், தான் ஏற்றுக்கொண்ட நீரை, எளிதில் இழக்காது. முடிந்தவரை தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கும். அந்த மண் தான் பானைகள் செய்வதற்கு ஏற்றது. நெகிழ்வும் நுண்மையும் களிமண்ணுக்கு அதிகம். அவ்வாறு ஈரத்தில் குழைத்து குழைத்துப் பிசைந்த களிமண்ணை தேவையான வடிவங்களில் வார்த்து எடுக்கலாம். வார்க்கப்பட்ட பொருள்கள்தாம் மட்பாண்டங்கள். பின்பு அவற்றைக் காயவைத்தாலோ, தீயிலிட்டுச் சுட்டாலோ பிரிக்கமுடியாதவாறு இறுகிவிடும். அதனால்தான் சுட்ட பாண்டங்கள் உறுதியாக இருக்கின்றன.

