
காலம்: 17.1.1706 - 17.4.1790
பிறந்த ஊர்: பாஸ்டன், அமெரிக்கா
சாதனை: எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்.
தங்களின் தேசத் தந்தைகளாக ஏழு பேரை அமெரிக்கா கொண்டாடுகிறது. அவர்களில் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். குடிசைத் தொழிலாக சோப், மெழுகுவர்த்திகள் தயாரித்து விற்கும் குடும்பத்தில், பதினைந்தாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டினாலும், அவருடைய தந்தை அவரைப் பள்ளிக்கு அனுப்பாமல் தன் தொழிலில் உதவியாளராக வைத்துக்கொண்டார்.
பன்னிரெண்டு வயதானபோது தன் அண்ணன் நடத்திய அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கிருக்கும்போதே கட்டுரைகள் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் பெஞ்சமினுடைய அண்ணன் உள்ளூர்ச் செய்திகளை வெளியிடும் செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கினார். அந்தச் செய்தித்தாளுக்கு பெஞ்சமின் எழுதி அனுப்பும் படைப்புகளைப் படிக்காமலேயே அண்ணன் நிராகரித்து விடுவார். ஆகவே, Silence DoGood என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கி வாசகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். புனைபெயரில் எழுதுவது அண்ணனுக்குத் தெரிந்து கண்டிக்க, வேறு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
தான் சுயமாக முன்னேற வேண்டும் என்ற உறுதியோடு சொந்த அச்சகம் தொடங்கினார். தொழிலில் புதிதாக ஏதாவது செய்யலாம் என்ற யோசனையில் வருடாந்தர பஞ்சாங்கம் வெளியிட முடிவு செய்தார். அதில், நாட்கள், பருவநிலை இவற்றைத் தாண்டி சுயமுன்னேற்ற அம்சங்கள், பழமொழிகள், கவிதைகள், கணித விடுகதைகள், சமையல் குறிப்புகள், ராசிபலன் எனப் பல புதுமைகளைச் சேர்த்தார்.
அறிவியல் ஆராய்ச்சிகளிலும் மிகுந்த ஈடுபாடு இருந்ததால், எரிபொருள் சிக்கன அடுப்பு, இடிதாங்கி, கருவி, பைஃபோகல் மூக்குக் கண்ணாடி ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். இதற்குக் காப்புரிமை வாங்க மறுத்து, தயாரிக்கும் உரிமையை அனைவரும் இலவச சொத்தாக்கினார்.
1750களில் பிரிட்டிஷ் காலனி நாடாக அமெரிக்கா இருந்தபோது, பல போராட்டங்களில் முன்நின்று சுதந்திர முழக்கமிட்டார். பிரான்ஸ் நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அமெரிக்க விடுதலைக்கு ஆதரவும், நிதியும் வாங்கித் தந்தார். இதற்கு நன்றி சொல்லும் விதமாக, 1914ல் இருந்து இன்று வரை 100 டாலர் நோட்டுகளில் பெஞ்சமின் படத்தை அமெரிக்க அரசு அச்சிட்டு அவரை கவுரவப்படுத்தி வருகிறது.
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருக்கும் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

