
ஜனவரி 17, 1917 எம். ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள்
ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடித்து, பின்னர் புகழ்பெற்ற திரைப்பட நடிகரானார். அரசியலில் செல்வாக்குப் பெற்று 1977, 1980, 1984 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் சத்துணவுத் திட்டம் இவர் கொண்டுவந்ததுதான்.
ஜனவரி 17, 1942 முகமது அலி பிறந்த நாள்
அமெரிக்காவின் 'ஹெவி வெயிட்' குத்துச்சண்டை வீரர். 1960 - 1981 வரை குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தார். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56 வெற்றிகள்; 37 நாக் அவுட். இதனால் 'நாக் அவுட் நாயகன்' என்று அழைக்கப்பட்டார். 3 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜனவரி 19, 1736 ஜேம்ஸ் வாட் பிறந்த நாள்
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இயந்திரப் பொறியாளர். துணி காய வைக்கும் இயந்திரம், சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். நீராவி இயந்திரத்தில் மாற்றங்கள் செய்து தொழிற்புரட்சிக்கு வித்திட்டார். குதிரைத் திறன் என்ற அளவு முறையைக் கொண்டு வந்தார். மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு 'வாட்' என இவர் பெயரே சூட்டப்பட்டது.
ஜனவரி 20, 1937 அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர் ஜனவரி 20 அன்றே பதவியேற்பார். இந்த நடைமுறை 1937ல் இருந்து பின்பற்றப்படுகிறது. பதவியேற்கும் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், மறுநாள் ஜனவரி 21 திங்கட்கிழமையில் பதவியேற்பார்கள்.
ஜனவரி 21, 1953 பால் ஆலன் பிறந்த நாள்
பில்கேட்ஸ் உடன் இணைந்து 1975ல் மைக்ரோசாஃப்ட் எனும் நிறுவனத்தைத் தொடங்கியவர். இந்த நிறுவனத்தின் 'ஐடியா மேன்', 'மேன் ஆஃப் ஆக்ஷன்' என்று அழைக்கப்பட்டார். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்தார். இவர் தன்னுடைய ஃபவுண்டேஷன் மூலம் பல நற்பணிகளைச் செய்துவருகிறார்.

