PUBLISHED ON : ஜன 16, 2017

உங்களுக்கு ஒரு போட்டியில் பரிசு கிடைக்கிறது. என்ன செய்வீர்கள்?
நண்பர்களிடம் சொல்வீர்கள். பெற்றோரிடம் சொல்வீர்கள். அதன்பிறகு, உங்கள் நாட்குறிப்பில் எழுதிவைப்பீர்கள். பரிசு பெறும் புகைப்படத்தையும் பக்கத்திலேயே ஒட்டிவைப்பீர்கள்.
இவையெல்லாம் எதற்காக?
பரிசுபெறும் மகிழ்ச்சி, ஒருசில நாட்களில் மறந்துவிடலாம். அப்போது எழுதிவைத்த பதிவுகளைப் பார்க்கும்போது, 'அட, நாம் இப்படியொரு பரிசைப் பெற்றோமா!' என்றெண்ணி மகிழலாம்.
தனி நபர்கள் மட்டுமல்ல; பெரிய அரசர்கள், தலைவர்களெல்லாம்கூட இப்படி எண்ணியிருக்கிறார்கள். தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். அவற்றைப் பயன்படுத்தித்தான், நாம் இப்போது அன்றைய வரலாற்றை அறிகிறோம்.
நம்முடைய நாட்குறிப்பு, காகிதத்தால் ஆனது. அதிலே மை கொண்டு எழுதினால், சில ஆண்டுகளுக்குத்தான் தாங்கும். அதன்பிறகு, மங்கிப்போய்விடும்.
ஆகவே, அன்றைய அரசர்கள் இவற்றைக் கல்லிலே பதிக்கச்செய்தார்கள். தொல்லியலாளர்கள் இவற்றைக் 'கல்வெட்டுகள்' என அழைக்கிறார்கள்.
கல்லிலே வெட்டப்படுபவை என்பதால், இவை 'கல்வெட்டுகள்' என்று பெயர்பெற்றன. பல நூற்றாண்டுகளைத் தாண்டியும் இந்தப் பதிவுகள், இன்றைக்கு நமக்கு அரிய விவரங்களைத் தெரிவிக்கின்றன.
உங்கள் ஊரருகே தொல்பொருள் ஆய்வு நிகழ்ந்த இடமோ, அருங்காட்சியகமோ இருந்தால், அங்கே சென்று நீங்கள் இந்தக் கல்வெட்டுகளைப் பார்வையிடலாம். பல கோவில்களிலும்கூட கல்வெட்டுகளைப் பார்க்கலாம்.
ஆனால், கல்வெட்டுகளை எளிதில் வாசித்துவிட இயலாது. காரணம், அவற்றில் இருக்கும் தமிழ் எழுத்துகளும், இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளும் ஒன்றல்ல.
அந்தக் கல்வெட்டு உருவாக்கப்பட்டபோது, தமிழில் எழுத்துகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. ஆகவே, இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் அவற்றைப் படித்து, இன்றைய தமிழ் எழுத்துகளில் நமக்குத் தருகிறார்கள்.
தமிழ்மட்டுமல்ல; பல மொழிகளில் கல்வெட்டுகள் இருக்கின்றன.
கல்வெட்டுகளில் அரசர்களின் போர்கள், வெற்றிகள், அவர்கள் கொடுத்த நன்கொடைகள், அவர்கள் இட்ட ஆணைகள் போன்றவற்றை பதிவு செய்தார்கள்.
பெரும்பாலான கல்வெட்டுகள், கவித்துவமான நடையில் எழுதப்பட்டிருக்கும். எனினும், சற்றே முயன்றால் அவற்றைப் புரிந்துகொண்டு விடலாம்.
கல்வெட்டுகளை வாசிக்கக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகள்கூட, இப்போது உண்டு. ஆர்வமுள்ளவர்கள் இவற்றில் சேர்ந்து பயிலலாம்.
யார் கண்டது, நமது சரித்திரத்தின் அறியப்படாத ஒரு பகுதியை, நீங்கள் கண்டறிந்து புகழ்பெறக்கூடும்!
- என். சொக்கன்

