PUBLISHED ON : டிச 24, 2018

மேற்கு வங்க கிராமங்களில், கைகளில் டேப்லெட்டுகளுடன் வலம் வரும் குழந்தைகள், ஆங்கிலத்தை ஸ்டைலாகப் பேசி அசத்துகின்றனர். தங்கள் பிள்ளைகள் தானா இவர்கள் என்று, ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் பெற்றோர்கள். இதற்குப் பின்னணியில் இருப்பது, கிரிஷ்வொர்க்ஸ் என்ற தொழில்முனைவு நிறுவனம். இது எப்படிச் சாத்தியமானது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார் கிரிஷ்வொர்க்ஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்கி மசூம்தார்:
“நான் உட்பட கிரிஷ்வொர்க்ஸ் நிறுவனர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளில் முழுநேரப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். நாங்கள், ஒரு சர்வதேசப் போட்டியில் கலந்துகொண்டோம். தான்சானியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள், தொழில்நுட்ப உதவியுடன் எப்படிச் சுயமாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று திட்டத்தை, அதில் முன்வைத்தோம். அது பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்திய ஏழைகளுக்காகவும் ஒரு அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலில், என் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக களமிறங்கினேன். கிராமப்புறக் குழந்தைகள் டேப்லெட்டுகள் மூலம் கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களை சுயமாக கற்கும் வழியை உருவாக்கினோம். இது பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கவர்ந்தாலும், அவர்கள் இதில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
அதேசமயம், தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று, பெற்றோர்களுக்கிருந்த பேரார்வத்தைப் பார்த்தோம். காரணம், எங்கும் எதிலும் ஆங்கிலம் பயன்படுவதால், தங்கள் பிள்ளைகள் அம்மொழியில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பெரும்பாலான கிராமப்புற ஆசிரியர்களும், போதிய ஆங்கிலத்திறனுடன் இருப்பதில்லை. எனவே, விளையாட்டு வழியாகக் கற்கும் ஆங்கிலத்துக்கான அப்ளிக்கேஷனை உருவாக்கினோம்.
பிள்ளைகளிடம் நேரடியாகப் போவதைவிட, ஆசிரியர்கள் வழியாகப் போவதே சரி என்பதை உணர்ந்தோம். மேற்கு வங்கத்தில் பல ஆசிரியர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. எனவே, இது அவர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பாகவும் இருக்கும்.
மாணவர்களுக்கு ஃபோனட்டிக் முறையில் ஆங்கில உச்சரிப்பு உரக்கச் சொல்லித் தரப்படுகிறது. 6 மாதங்களிலேயே பேச்சிலும், எழுத்திலும் மாணவர்கள் கைதேர்ந்து விடுவார்கள். மாணவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதைப் பார்த்து, பெற்றோர்கள் பெரிதும் பூரிப்படைகின்றனர். வரும் ஆண்டு, 50 மையங்களைத் திறக்கிறோம்.” என்கிறார் பெருமிதத்துடன்.
