PUBLISHED ON : டிச 24, 2018

பல பேரின் கனவுகளுக்கு வானம் தான் எல்லை. அந்த வானத்தையே அடிப்படையாக வைத்து, 'அக்னிக்குல்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர் ஸ்ரீநாத் ரவிசந்தர் மற்றும் மொய்ன் சையத். இவர்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். விண்வெளி என்பது எல்லோருக்குமானது என்கிற சாத்தியத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது லட்சியம். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள ஸ்ரீநாத்திடம் பேசியதிலிருந்து...
உங்கள் நிறுவனத்தைப் பற்றி சொல்லுங்கள்...
சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துக்கொண்டு போகும் ராக்கெட் தயாரிக்கும் நிறுவனமே 'அக்னிக்குல்'. அக்னியை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லித்தரும் இடம் என்ற பொருள்படவே 'அக்னிக்குல்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலக அளவில் பல தனியார் ராக்கெட் தயாரிப்பு முயற்சிகள் நடந்து வந்தாலும், இந்தியாவில் நாங்கள் தான் முதன்முதலாக அதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.
இதற்குத் தான் இஸ்ரோ இருக்கிறதே?
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பவேண்டும் என்றால், அதற்கு இஸ்ரோவைத் தான் அணுகுவோம். ஆனால், அதற்கு 3 அல்லது 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு பேருந்து நிரம்பும்வரை அதைக் கிளப்ப மாட்டார்கள். அதுபோலவே ராக்கெட்டின் செயற்கைக்கோள் கொள்ளளவு திறன் நிரம்பும்வரை அது விண்வெளியில் செலுத்தப்பட மாட்டாது. பொதுவாக, 2 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகள் இஸ்ரோவால் அனுப்பப்படுகின்றன. நாங்கள், 100 கிலோ கொள்ளளவு திறனுடைய ராக்கெட்டை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
இதனால் என்ன பயன்?
தனியார் கார், பைக் பயன்பாடு வரும்போது, எப்படி எல்லோரும் பேருந்தையே சார்ந்திருக்கும் நிலை மாறுகிறதோ, அதுபோலத்ததான் தனியார் ராக்கெட் லாஞ்ச் சேவை வருவதும்... புதிய தொழில்நுட்ப தளங்கள், புதிய சாத்தியங்களுக்கான வாய்ப்பைத் திறக்கும். அதுமட்டுமல்லாமல், ஏரோஸ்பேஸ் படித்தவர்களுக்கு வெளிநாட்டில்தான் வேலை என்ற நிலை மாறும். விண்வெளி எல்லோருக்குமானதாகும்.
செயற்கைக்கோள் தயாரிப்புகள் எப்படி அதிகமாகும்?
செயற்கைக்கோளை விண்வெளிக்கு கொண்டுபோக, ஒரு கிலோ எடைக்கு, 10 லட்சம் ரூபாய் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போதைய விலையில் பாதிதான் இது. குறைவான கட்டணத்தில், விரைவான காலத்தில் செலுத்த முடிகிறபோது, அதுவே செயற்கைக்கோள் தயாரிப்புகளுக்கு ஊக்கமாக அமையும்.
தனியார் ராக்கெட் சேவையை ஆரம்பிக்கும் தைரியம் எப்படி வந்தது?
அமெரிக்காவில், யுனிவர்சிட்டி ஆஃப் இல்லினாய்சில் ஏரோஸ்பேஸ் முதுகலைப் படிப்பை முடித்தேன். அங்கு நிறைய தனியார் ராக்கெட் தொழில்நுட்ப முயற்சிகள் நடப்பதைப் பார்த்து, என் நண்பர் மொய்ன் சையதுடன் பேசி, தனியார் ராக்கெட் லாஞ்சிங் நிறுவனம் தொடங்க முடிவெடுத்தோம்.
எப்படிச் செயல்படுத்தினீர்கள்?
ஐ.ஐ.டி. சென்னை எங்கள் திட்டத்தை அங்கீகரித்தனர். விண்வெளித் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்குக் காரணமான இஸ்ரோவில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பல விஞ்ஞானிகள் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். இவ்வளவு சாதகமான அம்சங்களுடன், தற்போது ராக்கெட் வடிவமைப்பின் இரண்டாம் நிலையில் உள்ளோம். இன்னும் மூன்று ஆண்டுகளில், ராக்கெட் லாஞ்ச்சை எதிர்பார்க்கலாம்.
