தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தாமதங்கள் தவிர்! வெற்றியோடு நிமிர்!

தாமதங்கள் தவிர்! வெற்றியோடு நிமிர்!

தாமதங்கள் தவிர்! வெற்றியோடு நிமிர்!


PUBLISHED ON : டிச 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு, மூன்று நாட்களாக, ஓவியாவை, அவளுடைய அப்பா, பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுவிட்டுப் போனார். வழக்கமாக அவள், பள்ளிக்கூட வேனில் வருவாள். சமீபத்தில் அவள் பெற்றோர் புது வீடு மாறிப் போனதால், அவளுடைய அப்பாவே வந்து விடுகிறாரோ என்று தோன்றியது. ஆனால், ஒன்றிரண்டு நாட்கள் மீண்டும் வேனில் வந்தாள்.

ஆனால், எப்போதும் ஒருவித சோகத்துடன் இருந்தாள். அவ்வப்போது எரிச்சல் அடைந்தாள். கவனித்ததையெல்லாம் உமா மிஸ்ஸிடம் சொன்னேன். 'ஒருநாள் கூப்பிட்டுப் பேசுகிறேன்' என்று சொன்னார்கள்.

ஒருநாள் மதியம் சாப்பிடும்போது, ஓவியாவையும் அழைத்துக்கொண்டார். மெல்ல பேச்சுக்கொடுக்கத் தொடங்கினார்.

“உங்கப்பா தினமும் உன்னை வந்து விட்டுட்டுப் போறார் போல இருக்கே?”

“தினமும் டைம் ஆயிடுது மிஸ். என்னால வேன் வர்ற நேரத்துக்குள்ள கிளம்ப முடியலை. அப்பாதான் தினமும் விட்டுட்டுப் போறார். வீட்டுல ஒரே திட்டு, ரொம்ப கஷ்டமா இருக்கு மிஸ்.”

“திட்டுறது கஷ்டமா இருக்கா, அப்பா அவ்வளவு தூரம் வண்டியோட்டிக்கிட்டு வந்து விட்டுட்டுப் போறது கஷ்டமா இருக்கா?”

“ரெண்டும் தான் மிஸ்.” என்றவள் முகம் கூம்பிப் போனது. “என்னிக்குத்தான் எனக்குப் புத்தி வரப்போவுதோன்னு வீட்டுல ரொம்ப திட்றாங்க. நான் என்ன தப்பு பண்றேன்னே தெரியலை மிஸ்.”

ஓவியாவின் குரல் உடைந்துபோவது போல் இருந்தது. விட்டால் அழுதுவிடுவாள் என்று தோன்றியது. உமா மிஸ் சமாதானம் செய்வது போல், அவள் தோள்களைத் தொட்டு, தட்டிக்கொடுத்தார்.

“என்னால டைம்க்கு கிளாஸ் ஒர்க்கை முடிக்க முடியலை. வீட்டுல போய் எழுதி முடிக்கறதுக்குள்ள ஹோம் ஒர்க் வேற நிக்குது. அதையும் செஞ்சுட்டு படுக்கறதுக்கு லேட்டாயிடுது மிஸ். காலையில் என்ன சீக்கிரமா எழுந்தாலும், வேகமாக குளிச்சுட்டுக் கிளம்ப முடியலை. அப்பாவும் அம்மாவும் ரொம்ப கோச்சுக்கறாங்க… எப்படி சமாளிக்கிறது, இன்னும் எப்படி எல்லாத்தையும் சீக்கிரம் செய்யறதுன்னே தெரியலை மிஸ்?”

ஓவியாவின் பிரச்னைதான் எனக்கும். பல சமயங்களில் அம்மா கடுமை காட்டுகிறார். வேகம் போதவில்லை என்பதுதான் பெரிய குற்றச்சாட்டு. சுவரில் தொங்கும் கடிகாரத்தைப் பார்த்தாலே எரிச்சல் ஏற்படும். திரும்பிப் பார்ப்பதற்குள் அது ஓடிக்கொண்டே இருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் செய்யாததைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறது அது.

“ரொம்ப சிம்பிள். முதல்ல, என்னால டைம்க்கு எதையும் செய்ய முடியலைங்கற கவலையை மூட்டை கட்டி வெச்சுடு. எல்லாத்தையும் திட்டமிட்டு செய்வேன்னு யோசி. அதுதான் ஆரம்பம்.” என்று பேச ஆரம்பித்தார் உமா மிஸ்.

“ஒரு யதார்த்ததைப் புரிஞ்சுக்கணும். எல்லாமே ஏதோ ஒரு நேரத்தை ஒட்டித்தான் நடக்குது. ஆண்டுத் தேர்வுன்னா, அது மூணு மணிநேரம். அந்த 3 மணிநேரத்துக்குள்ள நீ என்ன படிச்சியோ, என்ன புரிஞ்சுக்கிட்டியோ அதையெல்லாம் எழுதிடணும். இதுதான் சிறந்த முறையா, என் புத்திசாலிதனத்தை அளவீடு செய்ய வழியான்னு கேள்வி கேக்கலாம். இப்போதைக்கு இந்த நடைமுறைதான் புழக்கத்துல இருக்கு. வேற தேர்வுமுறை வரும்போது, அதுக்குத் தயாராகிக்கலாம்.

தேர்வு மட்டுமல்ல, வாழ்க்கையில பல விஷயங்கள் நேரத்தோடதான் நடக்குது. டிரெய்ன் கிளம்பறது முதற்கொண்டு, விண்வெளியில ராக்கெட்டுகள் ஏவப்படுவது வரை நேரத்தைச் சார்ந்துதான் இருக்கு. நேரம் தப்பினா என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்தியான்னு கேக்கறப்போ, நேரத்தோட அருமை புரியும். 36 வாரங்கள்ல குழந்தை பிறக்கணும். தள்ளிப் போச்சுன்னா என்ன ஆகும்?

எட்டு மணிநேரம் தூங்கணும். போதுமான நேரம் தூங்கலேன்னா என்ன ஆகும்? குறிப்பிட்ட காலகட்டத்துல மழை பெய்யணும். பெய்யலேன்னா என்ன ஆகும்? அரசாங்கத்துக்கு குறிப்பிட்ட தேதிக்குள்ள வரி கட்டணும். கட்டலேன்னா என்ன ஆகும்?

இதுக்குப் பேருதான் காலக்கெடு. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள செய்ய வேண்டியது. அந்தக் காலக்கெடுவுக்குள்ள நடக்கலேன்னா என்ன ஆகும் தெரியுமா? முதல்ல, உன்னைத் தப்பா நினைப்பாங்க. உன் திறமை கேள்விக்குள்ளாகும். அப்புறம், நாமெல்லோரும் ஒரு பெரிய இயந்திரத்தோட பாகங்கள். ஒரு பாகத்துல தாமதம் ஏற்பட்டா, பிற பாகங்களும் தாமதமாகி, மொத்த இயந்திரமே பழுதாகிப் போகலாம்.

ஆக, நாம் எதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்ள செய்யணுங்கற பழக்கத்தை ஸ்கூல்லேருந்தே ஆரம்பிக்கணும். வீட்டுலேருந்து ஆரம்பிக்கணும். ஒவ்வொண்ணையும் திட்டமிடணும்.”

“நான் திட்டமிட்டுத்தான் செய்யறேன் மிஸ். எத்தனை மணிக்கு எழுந்துக்கணும், எத்தனை மணிநேரம் என்ன பாடங்கள் படிக்கணும்ங்கற அளவுக்குத் திட்டமிட்டு இருக்கேன், மிஸ்.” என்றாள் ஓவியா.

“குட். நல்ல விஷயம். அது மட்டும் போதாது. எங்கே ைடம் வேஸ்டாகுதுன்னு யோசிச்சியா. நான் சொல்லட்டுமா? படிக்க உட்காரும்போது, எத்தனை முறை ரூமுக்கும் ஹாலுக்கும் நடக்கறே?”

“நாலஞ்சு முறை நடக்கறேன்…” என்றாள் ஓவியா. நானும் தான்.

“நடுவுல அரைமணி பிரேக் எடுத்துக்கறேன்னு சொல்லிட்டு, மொபைலையோ, டி.வி.யையோ எவ்வளவு நேரம் பார்க்கறே?”

ஓவியாவும் நானும் பேசவில்லை. நிச்சயம் அதிகம் தான்.

“பிரெண்ட்ஸ் கேட்டாங்கன்னு, அவங்களுக்கு எவ்வளவு நேரம் நோட்ஸோ, லேப் மேனுவலோ, பிராஜக்டோ எழுதிக் கொடுத்திருப்பே? ஐந்து நிமிஷத்துல குளிச்சுட்டு வரவேண்டிய இடத்துல, ஜாலியா பாட்டு பாடிக்கிட்டு, கற்பனையில மிதந்துக்கிட்டு 20 நிமிஷம் குளிச்சிருப்பே…?”

பேச்சற்றுப் போனோம்.

“எல்லாத்துக்கும் மேலே, நாளைக்குத்தான் இருக்கே. பார்த்துப்போம்னு தள்ளிப் போடற எண்ணம் உண்டா இல்லையா?”

“ஆமாம் மிஸ்” என்றேன் நான்.

“நாளைன்னு ஒண்ணு இல்லேன்னு நினைச்சுக்கோ. இன்னிக்கு மட்டும்தான் உண்டு. உங்ககிட்ட கொடுத்திருக்கிற வேலை எல்லாத்தையும் இன்னிக்குள்ள முடிக்கணும்னு சொன்னா, எவ்வளவு விரைவா முடிப்பீங்க? அதுதான் உண்மையில உரிய நேரம். மத்ததெல்லாம் தாமதங்கள். நாமே ஏத்துக்கறது, அடுத்தவங்களால ஏற்படறதுன்னு தாமதங்களுக்கு எல்லையே இல்லை.”

“அப்ப என்ன செய்யணும்னு மிஸ்.”

“திட்டமிடும்போது, தாமதங்களையும் சேர்த்தே திட்டமிடணும். தாமதத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ, அது மிகப்பெரிய நேர மிச்சம். உங்களை சூப்பர் ஹீரோக்களாக நினைச்சுக்கறீங்க. இல்ல. நீங்களும் மனுஷங்கதான். தாமதங்கள் சகஜம். அதையும் உள்ளடக்கி திட்டமிடக் கத்துக்கணும். அதுதான் திட்டமிடலின் சூட்சுமம்.”

நாங்கள் செய்யும் தாமதங்கள் என்னென்ன என்று ஓவியாவும் நானும் யோசிக்கத் தொடங்கினோம். என் தாமதங்கள் எனக்கே ஆச்சரியத்தை அளித்தன. எவ்வளவு நேரத்தைச் சேமிக்க முடியும் என்பது எனக்கே புரியத் தொடங்கியது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us