PUBLISHED ON : டிச 16, 2019

சங்க இலக்கியங்ககளை எல்லாம் இன்று நாம் அச்சு வடிவில் படிக்கிறோம். நினைத்த நேரத்தில் வாங்கலாம், வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் இவற்றை இலவசமாக அணுகவும் வாய்ப்புண்டு.
இந்த இலக்கியங்கள் எழுத்தாளர்களால் அல்லது பதிப்பாளர்களால், தனித்தனியாக எழுதப்பட்டு, பின்னர் தொகுக்கப்பட்டன. அந்தத் தொகுப்புப்பணிக்கு முக்கிய பங்காற்றியவை, சுவடிக் காப்பகங்கள்.
'சுவடு' என்ற சொல்லிலிருந்துதான் 'சுவடி' என்ற சொல் வந்ததாக எழுதுகிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ம.சா. அறிவுடைநம்பி. கடற்கரையில் நாம் நடந்துசெல்லும்போது, தரையில் சுவடுகள் பதிவதுபோல, காகிதத்தில், ஓலையில், செப்பேட்டில் சுவடு பதித்து (அடையாளம் உண்டாக்கி) எழுதப்படுவதால், இவற்றைச் சுவடி என்றார்கள்.
சுவடிகளில் இலக்கியம் மட்டும்தான் படைக்கப்பட்டது என்று எண்ணி விடக்கூடாது. நாட்குறிப்புகள், பயணக்குறிப்புகள், வரவு-செலவுக் கணக்குகள், நில அளவையியல் ஆவணங்கள், கடிதங்கள், இன்னும் பலவும் எழுதப்பட்டன.
எந்தவொரு விஷயத்தையும் மனத்திலேயே வைத்துக்கொள்ளாமல் காகிதத்திலோ வேறுவிதத்திலோ அதைப் பதிவு செய்துவைக்கும்போது, மற்றவர்கள் அதைக் கற்பது எளிதாகிறது. அந்த விதத்தில், சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் மக்கள் இவற்றைக் கற்றல் கருவிகளாகப் பயன்படுத்தினார்கள். ஏராளமான சுவடிகள் எழுதப்பட்டன, படியெடுக்கப்பட்டன.
இந்தச் சுவடிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிலர் அல்லது சில அமைப்புகள், இவற்றைத் தொகுத்து பாதுகாத்து வைக்கவேண்டும் என்று உணர்ந்தார்கள். நாம் இன்று வாசிக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் இப்படிச் சேர்க்கப்பட்டவைதான்.
இன்றைய நூல்நிலையங்களைவிட, அன்றைய சுவடிக் காப்பகங்களை இயக்குவது கடினமாக இருந்திருக்கும். ஏனெனில், நூல்கள் இப்போது ஒழுங்குபடுத்தப்பட்டு எளிதில் கிடைப்பதுபோல், அன்றைக்குச் சுவடிகள் கிடைக்கவில்லை.
எங்கெங்கோ தேடிச் சுவடிகளைத் திரட்டி, வாசித்துப் பார்த்து, பொருள் அடிப்படையில் தொகுத்து வைக்கும் அரிய பணியைச் சுவடிக் காப்பகங்கள் செய்தன.
அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சமய நிறுவனங்கள், மற்ற அமைப்புகளெல்லாம் சுவடிகளைக் காத்து வந்தார்கள். இவைதவிர, ஆர்வம் காரணமாக, ஏராளமான சுவடிகளைத் திரட்டிச் சேர்த்த தனிநபர்களும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக, காலின் மெக்கன்சி லெய்டன்,
அ.முத்துசாமிப்பிள்ளை, இரண்டாம் சரபோஜி, பாண்டித்துரைத் தேவர், வி. கனகசபை பிள்ளை, உ.வே.சா. உள்ளிட்டவர்களைக் குறிப்பிடுகிறார் ம.சா. அறிவுடைநம்பி.
இப்படிச் சேகரிக்கப்பட்ட சுவடிகளில் பலவும் நூல்களாக அச்சிடப்பட்டுள்ளன. இணையத்திலும் தொகுக்கப்பட்டுள்ளன. அறிஞர்கள் பலர் இவற்றுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளார்கள். இதன்மூலம், இன்னும் பலர் அவற்றை அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இன்னும் சுவடிகளில் மட்டுமே இருக்கிற, பொது வெளிச்சத்துக்கு வராத விஷயங்களும் ஏராளம். அவற்றில் என்னென்ன உண்மைகள், நன்னெறிகள், வரலாற்று, சமூகவியல் செய்திகள் உள்ளனவோ!
நம்முடைய வரலாற்றைப் பதிவுசெய்ததிலும் இலக்கியச் செழுமையை உணர்த்தியதிலும் சுவடிக் காப்பகங்களுடைய பங்கு முக்கியமானது. அந்த நிறுவனங்கள், தனிநபர்களுடைய சேவை வணக்கத்துக்குரியது!
- என். சொக்கன்
