PUBLISHED ON : ஜூலை 01, 2019

பெங்களூரு என்றாலே மரங்கள்தான் பலருக்கு நினைவு வரும். ஆனால், இப்போது அங்கும் வெப்பம் தாங்கமுடியாமல் தகிக்கிறது. கடந்தாண்டு பெங்களூரு குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், நகரில் அதிகரித்த கட்டடங்கள்தான் என்கிறார் ஹரிணி நாகேந்திரா.
பெங்களுரூவைச் சேர்ந்த ஹரிணி, நகர்ப்புற சுற்றுச்சூழலியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அசிம் பிரேம்ஜீ பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகப் பணியாற்றும் இவர், மரங்கள் குறித்த பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்.
”வெப்பம் என்றாலே என்னவென்று தெரியாத ஊர் பெங்களூரு. எல்லா தெருக்களிலும் மரங்களைப் பார்க்க முடியும். ஆனால், இப்போது ஐ.டி. துறையின் தலைமை இடமாக உள்ளதால், பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. நகரமயமாக்கலில் முதலில் பலி ஆனது மரங்கள்தான்.
மரங்கள் தானே, அது ஒரு விஷயமா என்று நாம் நினைக்கிறோம். நமக்கு ஆக்சிஜன் தருவது மட்டுமே மரங்களில் வேலை அல்ல. மழை கொடுப்பதும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதும் மரங்கள்தான்.
இதை நிரூபிக்க ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். நகரின் பிரபலமான தெருக்களில் மரங்கள் உள்ள பகுதி, மரங்கள் இல்லாத பகுதி என இரண்டாகப் பிரித்துக் கொண்டோம்.
மரங்கள் உள்ள பகுதியின் வெப்பநிலை எவ்வளவு? மரங்கள் இல்லாத பகுதியின் வெப்பநிலை எவ்வளவு என்பதை அளந்தோம்.
நாங்கள் எதிர்பார்த்த முடிவுதான் கிடைத்தது. மரங்கள் இல்லாத பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது; மரங்கள் உள்ள பகுதியில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மரங்கள் வெப்பநிலையை குறைக்கும் என்பதை ஆய்வுரீதியாக நிரூபித்தோம்.
சரி, மரங்களால் வெப்பநிலை குறையும், தண்ணீர் கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி. எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
மரங்கள் இருக்கும்போது, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். பூமியின் மீது நேரடியாக சூரிய ஒளி விழுவது இல்லை. மரங்கள் சூரிய ஒளியைத் தடுத்து, ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்கின்றன; தண்ணீர் ஆவியாவது குறைகிறது.
மரங்கள் இருக்கும் இடங்களில் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும். அதேபோல், மரங்கள் மழையை ஈர்க்கும் தன்மை பெற்றவை.
மழை பெய்யும்போது, மரத்தின் வேர்கள் நீரை உறிஞ்சிக்கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் கீழ் அடுக்குக்கு அனுப்பும். அங்கே படிப்படியாக சேமிப்பு நடைபெறும்.
இதுவே, மரங்கள் இல்லாத இடங்களில் மழை பெய்தால், அங்கே நிலத்தடி நீர்மட்டம் உயராது. அதற்குக் காரணம், எப்படி ஒரே சமயத்தில் நம்மால் 50 லிட்டர் நீரைக் குடிக்க முடியாதோ, அதேபோல் தான் பூமியும்.
ஒரே சமயத்தில் அதிக கொள்ளளவு நீரை ஏற்றுக்கொள்ளாது. மரங்கள்தான் நிலத்தடிக்கு தண்ணீரைச் சேமித்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து உதவும்.” என்றார் ஹரிணி நாகேந்திரா.
