PUBLISHED ON : நவ 11, 2019

வரவிருக்கும் நவம்பர் 14, 'குழந்தைகள் தின'த்திலாவது இரவு 7.30 முதல் 8.30 வரை ஒரு மணி நேரம், அலைபேசிக்கு லீவு கொடுத்து, உங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்களேன் என்ற, பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுரை பலதரப்பிலும் பாராட்டைப் பெற்றுவருகிறது.
கேட்ஜெட் ப்ரீ ஹவர் (www. gadgetfreehour.com)- எனும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்திருக்கும் நளினா ராமலட்சுமியிடம் பேசினோம்.
“குழந்தை வளர்ப்பு ஆலோசனைகளுக்காக பேரன்ட் சர்கிள்னு ஒரு பத்திரிகை நடத்திக்கிட்டு இருக்கோம். அதுக்காக பலவிதமான நிபுணர்களைச் சந்திச்சுப் பேசுவேன். இன்றைய பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதே இல்லைன்னு பல நிபுணர்கள் சொன்னார்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்துச்சு. கேட்ஜெட்டுகள் இல்லாட்டி, பெற்றோர் நிச்சயம் குழந்தைகளோடு பேசவும், விளையாடவும் செய்வாங்கன்னு தோணியதால, இதையே விழிப்புணர்வு பிரசாரமாகக் கொண்டு போகலாம்னு நினைச்சோம்.
ஒரு நாளைக்கு ஃபோனோ, இன்டர்நெட்டோ, தொலைக்காட்சியோ இல்லாம இருக்கமுடியுமான்னு கேட்டா, உறுதியா யாரும் 'முடியும்'னு சொல்லமாட்டாங்க. ஆனா, ஒரு மணி நேரம் அதையெல்லாம் ஒதுக்கி வைக்க முடியுமான்னு கேட்டால்... நிச்சயம் முடியும்.
அதனால தான் நாங்க, ஒரு மணி நேரத்தை ஃபோன், டிவி மாதிரி கேட்ஜெட்களைப் பயன்படுத்தாமல், அந்த நேரத்தை குடும்பத்துடன் செலவழிங்கன்னு பிரசாரத்தைத் தொடங்கினோம்.
குழந்தைகளுடன் கலந்துபேசும் பெற்றோர் குறைஞ்சு போயிட்டாங்க. எல்லோருக்குமே வேலை இருக்கு. குழந்தைகளுக்கு அதைவிட, வேலைகள் இருக்கு. யாரும் யாரையும் சந்திக்கறதில்ல. விளைவு, பெற்றோருக்கும் பிள்ளைகளும் இடையே பேசக்கூட நேரமில்லை.
இதை மாத்தணுங்கறதுக்காகத் தான் நாங்க முயற்சி எடுத்திருக்கோம். இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலுமே முதல் முயற்சினு சொல்லலாம்.
ஏன்னா வெறும் கேட்ஜெட்டை தள்ளி வைக்கிறது அல்ல விஷயம். அந்த நேரத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுடன் செலவழிக்கணும் என்பதுதான் எங்க ஆசை.
இதற்காகவே வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். மொபைல் பயன்படுத்தாத அந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்யலாம்? சிறுவயசு தொடங்கி பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகள் வரை, பொழுதைப் பயனுள்ளதாக எப்படிக் கழிக்கலாம் என்பதற்கு பல்வேறு ஆலோசனைகளையும் நாங்கள் தருகிறோம்.
அல்லது 72300 19118 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்துக்கூட, ஆலோசனைகளைப் பெறலாம்.
முதலில் ஒரு மணி நேரம் இப்படி இருந்து பழகியவர்கள், பிடித்துப்போனால் தினமும் கேட்ஜெட் இல்லாமல் இருக்கத் தொடங்குவார்கள் அல்லவா?
குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக எல்லா பெற்றோரும் எங்களுடன் இணையவேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்று நம்பிக்கையுடன் கூறினார் நளினிராமலட்சுமி.
