PUBLISHED ON : நவ 11, 2019

“கற்றுக் கொடுப்பதன் மூலம் தான் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். அதனால் தான் நாங்கள் 'கியான் பிரவாஹ்' என்ற திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறோம்,” என்று பேசத் தொடங்கினார் டி.ஏ.வி. பள்ளிக் குழுமத்தின் செயலரான விகாஸ் ஆர்யா. அவர் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்,
“'கியான்' என்றால் அறிவு. 'பிரவாஹ்' என்றால் பரப்புதல், பொழிதல். இது எங்கள் மாணவர்கள் தாம் கற்ற அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதே ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தை ஆரம்பித்தோம். புதுச்சேரி ஆளுநரான கிரண் பேடி கொடுத்த ஐடியா இது. அதை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.
எங்கள் குழுமத்தில் உள்ள 5 பள்ளிகளின் மாணவர்கள், அருகிலேயே உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அறிவு ரீதியாக உதவுவதுதான் திட்டம். அதுவும் ஆங்கில மொழித்திறனிலும் கணிதத்தைப் புரிந்துகொள்வதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள், எங்கள் பள்ளிகளைச் சேர்ந்த 9, 10, பிளஸ் 1 மாணவர்கள், பள்ளி முடிந்த பிறகு முக்கால் மணிநேரம், பக்கத்தில் உள்ள பள்ளிக்குச் செல்வார்கள். அங்கே 4, 5, 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இவர்கள் பாடம் எடுப்பார்கள். இது ஆண்டு முழுவதும் தொடரும்.
இத்திட்டத்தில் பங்கேற்க மாணவர்களிடையே அவ்வளவு ஆர்வம். நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வகுப்பெடுக்க கிளம்பிவிடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தையும் கணிதத்தையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புரிய வைக்கும்போது, பல்வேறு உத்திகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் கற்பிக்கவில்லை, தாங்களே கற்றுக்கொள்கிறார்கள்.
அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, 'கியான் பிரவாஹ்' திட்டத்தினால் பெரும்பயன் அடைந்துள்ளதை எங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
இதே திட்டத்தை, இந்த ஆண்டு முதல், எங்கள் பள்ளிகளுக்குள்ளேயே அறிமுகப்படுத்தியுள்ளோம். மேல் வகுப்பு மாணவர்கள், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து போதிக்க வேண்டும்.
நாங்கள் கண்கூடாக ஒரு கல்விப் புரட்சியைப் பார்க்கிறோம். இப்படிச் சொல்லிக்கொடுக்கும் மாணவர்களின் அறிவுத் திறன் பன்மடங்கு மேம்படுகிறது.
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, பிளஸ் 1 வந்து சேருவதற்கு இடையே ஒன்றரை அல்லது இரண்டு மாதங்கள் விடுமுறை கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில், மாணவர்கள் குறைந்தபட்சம் 40 மணிநேரம், பொதுச்சேவை செய்யவேண்டும் என்று நாங்கள் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறோம்.
இதற்காக பல்வேறு பொதுநல அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, அவர்களிடையே சென்று, எங்கள் மாணவர்கள் சேவை செய்யத் தொடங்குவார்கள். உண்மையில், சமூகத்தோடும், மனிதர்களோடும், அவர்களுடைய தேவைகளோடும் ஒருங்கிணைந்து வாழ்வதும் கற்றுக்கொள்வதும்தானே கல்வி? அதைத்தான் நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம்,” என்று கண்களில் வெளிச்சம் மின்ன சொல்லி முடித்தார் விகாஸ் ஆர்யா.
