PUBLISHED ON : மே 09, 2016

உலக குடும்ப தினம் மே 15
கோடை விடுமுறை… இந்த நாட்களைக் கழிக்க தூரத்தில் இருக்கும் ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். அது தாத்தா அல்லது மாமாவின் வீடு. சித்தப்பா, பெரியப்பாவின் வீடாகவும் இருக்கலாம். அங்கே தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, அத்தை, அத்தை பையன், சித்தப்பா பெரியப்பாவின் பிள்ளைகளான அண்ணன் தம்பிகள், அக்கா தங்கச்சிகள் என நமக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களுடன் கூடி விளையாடி மகிழ்வோம். அங்கே ஒரு குளத்தில் ஒன்றாகக் குளிப்போம். அருகிலுள்ள சுற்றுலாத் தலத்துக்குச் செல்வோம். உறவும் உரிமையும் உள்ள அவர்களிடம் செல்லச் சண்டைகள் போடுவோம். பெரிய பாத்திரங்களில் உணவு சமைத்து ஒன்றாகக் கூடிச் சாப்பிடுவோம். அடடா, நினைக்கவே எவ்வளவு சுகமாக இருக்கிறது! குடும்பத்துடன் இருப்பதே அக மகிழ்ச்சி. உலகின் எந்த மூலைக்கு நாம் சென்றாலும் மறுபடி வீட்டுக்குத் திரும்புவதே நம் விருப்பமாக இருக்கும்.
இப்போதைய வாழ்க்கைச் சூழலில் கூட்டுக் குடும்ப அமைப்பும் குறைவு. குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் பிரிந்து வெளிநாடுகள், வெளியூர்களில் வாழ்கிற நிலைமை உள்ளது. இத்தகைய நிலையில்தான், மேம்பட்ட சமூக அமைப்பு, தலைமுறையினரிடையே ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி 'குடும்ப தினம்' கொண்டாடப்படுகிறது.
ஒருவர் எந்த வயதிலும், எந்தச் சூழ்நிலையிலும், எவருக்காகவும் குடும்பத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக 'உலக குடும்ப தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா நாட்களையும் குடும்ப தினமாகவே வாழ்ந்து ரசிப்போம் நாம்.
