PUBLISHED ON : டிச 24, 2018

“பள்ளியில் படிக்கும்போது, கோடை விடுமுறை சமயத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் செல்வது வழக்கம். காட்டுயிர்கள் மேல் ஆர்வம் வருவதற்கு அந்தச் சூழல்தான் முக்கிய காரணம்” என்று பேசுபவர் ரஞ்சனி கிருஷ்ணன். இந்தியாவைச் சேர்ந்த இவர், ஸ்காட்லாந்திலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து வருகிறார். சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் இளம் ஆய்வாளர் இவர்.
“பெங்களூருவில் உயிரிநுண்ணியியல், வேதியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றேன். கல்லூரியில் படிக்கும்போதே பல்வேறு காட்டுயிர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் போவேன். அங்கு பல புதிய விஷயங்கள் தென்படும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த இடங்கள், உயிரினங்கள் அழிந்து வருவதைத் தொடர்ச்சியாகக் குறிப்பெடுத்து, ஆய்வுக்கான முன் தயாரிப்புப் பணிகளைச் செய்யத் தொடங்கினேன். இந்தத் துறையில் ஆய்வு செய்யவேண்டும் என்பதுதான் ஆசை. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆரம்பித்த தேடல், ஐஸ்லாந்து வரை என்னை அழைத்துச் சென்றது. ஐஸ்லாந்தில் வாழும் திமிங்கிலத்தின் ஒலி எழுப்பும் விதங்களை ஆய்வு செய்தேன். அதையடுத்து, அமேசான் மழைக்காடுகளிலுள்ள நீர் நில வாழ்விகளை ஆய்வு செய்தேன்.
ஏற்கெனவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள ஆனைமலையில் இருக்கும் நீர் நில வாழ்விகளைப் பற்றி ஆய்வு செய்துள்ளேன். அப்போதிலிருந்தே, இமயமலையிலுள்ள சூழலியியல் குறித்து ஆர்வம் உண்டு. அதன் சுற்றுச்சூழல் பற்றியும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அங்கு வசிக்கும் மக்களோடு இணைந்து இமயமலை பாதுகாப்பது குறித்த முயற்சி செய்து வருகிறேன். ஆய்வுகள் மூலம் பல உண்மைகள் புரிகின்றன. பூவுலகைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதும் தெரிகிறது” என்றார் ரஞ்சனி.
