ஸ்பூனைத் தூக்கிப் போட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!
ஸ்பூனைத் தூக்கிப் போட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்!
PUBLISHED ON : டிச 24, 2018

அதெப்படி சாப்பிட முடியும்? முதலில் எதற்கு ஸ்பூனைச் சாப்பிட வேண்டும்? ஸ்பூனால் உணவுப் பொருட்களைத்தானே சாப்பிட வேண்டும்? இது என்ன புதுக்கதை என்று மேலேயுள்ள வாக்கியத்துக்குச் சொந்தக்காரரான ஐதராபாத்தைச் சேர்ந்த நாராயண பீசாபதியைக் கேட்டோம்:
ஸ்பூனைச் சாப்பிடுவதா?
எப்படிச் சாப்பிடுவது?
இந்தாருங்க. சாப்பிட்டுச் சொல்லுங்கள். இது கார ஸ்பூன். இனிப்பு ஸ்பூனும் உண்டு. இதுக்கு எடிபிள் கட்லரி என்று பெயர்.
எடிபிள் கட்லரி கேட்கவே புதுசாக இருக்கிறதே?
ஆமாம். பிளாஸ்டிக் ஸ்பூன்களைப் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது; பயணங்களின்போது வசதியாக இருக்கும். நாம் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் ஸ்பூன்கள் குப்பைகளுக்குப் போவதில்லை. அவை திரும்பி நம் தட்டிற்கே வருகின்றன என்பதைத் தெரிந்துகொண்டபோது, அதிர்ச்சியடைந்தேன். பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என, தீர்மானித்து, இதைத் தொடங்கினோம்.
பிளாஸ்டிக் ஸ்பூன்கள் மீண்டும் எப்படி நமக்கே திரும்ப வருகின்றன?
ஆமாம். குப்பைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக்கை சுடுநீரில் சுத்தம் செய்யமாட்டார்கள். சுடுதண்ணீரில் பிளாஸ்டிக் உடைந்து போய்விடும். அதனால், அதைக் குளிர் நீரில்தான் சுத்தம் செய்வார்கள். சுடு தண்ணீரில் சுத்தம் செய்யாவிட்டால், அதில் பாக்டீரியா இருக்கும். அவை தான் மீண்டும் பயன்பாட்டுக்குத் திரும்ப வருகின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் எடிபிள் ஸ்பூன்.
எப்படித் தயாரிக்கிறீர்கள்?
ஜோஹர் அரிசி, கோதுமை, மிளகு, சீரகம், சர்க்கரை, சிறுதானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள்தான் இதற்கான மூலப்பொருள். இவை ஒன்பது மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். மாவு தயாரித்து, மோல்டில் போட்டு, பின்னர் பேக் செய்து, விற்பனைக்கு அனுப்புகிறோம்.
எல்லோராலும் இதை வாங்க முடியுமா?
எல்லோரும் வாங்குவதற்கு ஏற்றமாதிரியான விலைதான். ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனின் விலை ஒரு ரூபாய் என்றால், இது ஒரு ஸ்பூன் நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. யோசிக்காமல் நாம் இதை வாங்க முன்வந்தால், நமக்கும் நல்லது, நம்முடைய சுற்றுப்புறத்திற்கும் நல்லது.
- சாரதா பாலசுப்பிரமணியன்
