தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இலக்கணம் எதற்கு?

இலக்கணம் எதற்கு?

இலக்கணம் எதற்கு?


PUBLISHED ON : அக் 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

மொழியும் எழுத்தும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது இலக்கணம். விதிகள் மூலமாக மொழியைச் செம்மையாய் வைத்திருப்பது இலக்கணமே.

சொற்களை எவ்வாறு பேச வேண்டும், எழுத வேண்டும், பொருள் கொள்ள வேண்டும் என்பதை அம்மொழியின் இலக்கணம் கற்பிக்கிறது.

இலக்கணம் இல்லையென்றால் மொழிக்கு வேலையில்லை. எல்லா மொழிக்கும் இலக்கணம் இருக்கும்.

தமிழில் இலக்கண நூல்கள் மிகுதி. நம் தமிழ்மொழி காலத்தால் மூத்தது. தொன்மையானது. அதனால் தமிழ் மொழி இலக்கணமும் தொன்மையானது. தமிழில் உள்ள மூத்த நூல் என்று தொல்காப்பியத்தைச் சொல்வார்கள். அந்தத் தொல்காப்பியம் இலக்கண நூல்தான்.

இலக்கணம் கற்பதற்குக் கசக்குமா? இல்லவே இல்லை. கரும்பு, மேலே பார்ப்பதற்குத்தான் கரடு முரடாக இருக்கும். உள்ளே இருப்பது இனிமையின் சாறு. முதல் கடி கடித்துவிட்டால் தொடர்ந்து தின்ன வேண்டும் என்று தோன்றும்.

நமக்கு இலக்கணம் தெரியாமலா வாழ்கிறோம்? இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் இலக்கணம் தெரியும். நமக்குத் தெரிந்தவற்றுக்கு இலக்கணத்தில் ஒரு பெயர் இருக்கும். அந்தப் பெயரைக் கேட்டு மிரள்கிறோம். அந்தப் பெயரின் பொருளை உணர்ந்துவிட்டால், நம் அறியாமை விலகும். இலக்கணம் விளங்கும்.

அம்மா என்று அழைக்கிறோம். வா, போ, நில், செல் என்று பேசுகிறோம். இவை எல்லாமே இலக்கணப்படி அமைந்த சொற்கள்தாம்.

அம்மா என்பது விளிச்சொல். விளிப்பது என்றால் அழைப்பது. கூப்பிடுவது. இதைத்தான் இலக்கணம் கூறுகிறது.

'அம்மா' என்பது தொலைவில் உள்ளவரை அழைப்பது என்பதால் சேய்மை விளி. 'அம்ம' என்பது அண்மையில் உள்ளவரை அழைக்கப் பயன்படுவது. பக்கத்தில் இருப்பவரைக் குரல் தணிவாய்க் கூப்பிடுவோம்தானே?

அதனால், 'அம்ம' என்பது அண்மை விளி. இதைச் சொல்வதுதான் இலக்கணம்.

அம்மா என்பது நமக்குத் தெரியும். அச்சொல்லைப் பயன்படுத்தி அழைக்கத் தெரியும். அந்தச் சொல்லைக் குறித்து விளக்குவதுதான் இலக்கணம். அதை விளிப்பதற்குப் பயன்படுத்தினால், அந்த விளியில் என்னென்ன வகை என்பதை விவரிப்பது. நமக்குத் தெரிந்த நம் பேச்சை, எழுத்தை, மொழியை நமக்கு விளக்குவதுதான் இலக்கணம்.

- தமிழ்மலை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us