தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இடக்கர் அடக்கல் என்றால் என்ன ?

இடக்கர் அடக்கல் என்றால் என்ன ?

இடக்கர் அடக்கல் என்றால் என்ன ?


PUBLISHED ON : அக் 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

இடக்கர் என்றால் என்ன? 'அவன் இடக்கு பண்ணிகிட்டே இருக்கிறான்' என்கிறோம். 'எதைச் சொன்னாலும் இடக்கு மடக்காவே பேசறான்' என்கிறோம். 'இடக்கு பண்ணாம சொன்ன பேச்சைக் கேளு' என்று நம் பெற்றோர் அறிவுறுத்துகின்றனர்.

இங்கே இடக்கு என்பதற்குத் தவறான செயல், பொருத்தமில்லாத செயல் என்பது பொருள். அவ்வளவு கெட்ட செயல் இல்லைதான். ஆனாலும் அச்செயல் ஒவ்வாத தன்மையுடையது. விரும்பத் தகாதது. ஏதோ ஒருவகையில் அது தவறானது. அதைத்தான் இடக்கு என்கிறோம்.

இடக்குகளை அடக்கிக்கொள்வது நல்ல பண்பு. இடது கையை முன்னே நீட்டாமல் அடக்கிக்கொள்வதைப் போன்றதுதான் இடக்கர் அடக்கல்.

இலக்கணத்திலும் இடக்கர் அடக்கல் உண்டு. சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் அடக்கிக்கொள்வது. சொல்ல வேண்டியதைச் சொல்லாவிட்டால் எப்படித் தெரிவிப்பது? அந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல், இனிமையான சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வேண்டும். வேறு நல்ல சொற்களில் சொல்ல வேண்டும்.

நால்வர் கூடியிருக்கும் இடத்தில், தீயவற்றையும் தவறானவற்றையும் கூறவேண்டிய நிலை வரும். அப்போது அவ்விடத்தில் அவ்வாறு சொல்வது சான்றோர்களை மதிப்பதாகாது. அதனால் வேறு நல்ல சொற்களால் சொல்வது.

நால்வர் நடுவில், அவை கூடியிருக்கும் இடத்தில் 'அவன் கெட்ட வார்த்தை பேசுகிறான்' என்று சொல்லமாட்டோம். 'அவன் பச்சை பச்சையாகப் பேசுகிறான்' என்போம். 'அவன் நோய்வாய்ப்பட்டான்' என்று சொல்வதில்லை. 'அவனுக்கு உடம்பு சரியில்லை' என்போம்.

இவ்வாறு அல்லனவற்றைச் சொல்வதற்கு மாற்றாக வேறொன்றைச் சொல்வோம். இடக்கரானவற்றை, தவறானவற்றைச் சொல்லாமல் அடக்கிக்கொண்டு வேறொன்றைச் சொல்வோம். இதுவே இடக்கரடக்கல். ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்( euphemism) என்பர்.

நாம் வேறு எப்படியெல்லாம் இடக்கர் அடக்கல்களாகப் பேசுகிறோம், எழுதுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

- காவிரி மைந்தன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us