PUBLISHED ON : டிச 12, 2016

புவியின் உள் அமைப்பு (Earth Internal Structure - எர்த் இன்டர்னல் ஸ்ட்ரக்சர்) பற்றிய கோட்பாட்டை, முதன் முதலில் உருவாக்கியவர் 'ஐசக் நியூட்டன்' (Issac Newton). பூமியின் உட்பகுதி, வேதிப் பொருட்களின் கட்டமைப்பு மற்றும் அதன் பண்புகளால் பிரிக்கப்படுகிறது. புவியின் உள் அமைப்பு மூன்று அடுக்குகளாக உள்ளது.
1. மேல் ஓடு (Crust - கிரஸ்ட்)
இது புவியின் மேற்பரப்பு. 'நிலக்கோளம்' (Lithosphere - லித்தோஸ்பியர்) என்று அழைக்கப்படுகிறது. புவியின் கீழ்நோக்கி, 70 கி.மீ. தொலைவு வரை அமைந்துள்ளது. கண்ட ஓடு, சமுத்திர ஓடு என, இரண்டாக இது பிரிக்கப்படுகிறது.
* கண்ட ஓடு (Continental Crust - கான்டினென்டல் கிரஸ்ட்): நிலப்பகுதிகளைக் கொண்டுள்ள பகுதி. இது அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம் போன்றவற்றால் அமைந்த, 'ஃபெல்சிக்' (Felsic) எனப்படும் பாறை வகையைச் சார்ந்தது. அதிக அளவில் சிலிக்கா (Silica), அலுமினியம் (Aluminium) ஆகியவற்றைக் கொண்டது. இது 'சியால்' (SIAL) என்று அழைக்கப்படுகிறது. இது 30 கி.மீ. தடிமனை உடையது.
* சமுத்திர ஓடு (Oceanic Crust - ஓஷானிக் கிரஸ்ட்): சமுத்திர நீர்ப் பரப்புகளைக் கொண்டு அமைந்தது. சிலிக்கா, மக்னீஷியம் (Magnesium) போன்றவற்றால் உருவான பாறை வகையைச் சார்ந்தது. இது 'சிமா' (SIMA) என்று அழைக்கப்படுகிறது. இது, 15 கி.மீ. தடிமனை உடையது.
2. கவசம் (Mantle - மேன்டில்)
புவியின் மேலோட்டில் இருந்து, 2,900 கிலோ மீட்டர் ஆழம் வரையிலான பகுதி. பூமியின் மேலோட்டிற்கும், கருவத்திற்கும் இடையில் உள்ளது. இது பூமியின் எடையில், 83 சதவீதத்தைக் கொண்டுள்ளது. பல தட்டுகளால் உருவாக்கப்பட்டது. இவை, கண்ட நகர்வுகளை உருவாக்குகின்றன. இதன் மேல்பகுதி 'அஸ்தினோஸ்பியர்' (Asthenosphere) எனப்படுகிறது. இந்தப் பகுதி, சிலிக்கா பாறைகளால் உருவானது. இந்தப் பகுதியில் காணப்படும் உயர் வெப்பநிலை காரணமாக, பாறை குழம்பு நிலையில் காணப்படுகிறது. புவித்தட்டு அசைவுகளுக்கு இது காரணமாகிறது.
வெளிக்கவசம், உட்கவசம் என, இரண்டு பிரிவாக இது பிரிக்கப்படுகிறது. புவி ஓட்டின் பகுதியில் இருந்து, 650 கி.மீ. வரை உள்ள பகுதி வெளிக்கவசம். இந்தப் பகுதியில், 1,400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ளது. உட்கவசப் பகுதி, 650 கி.மீ.க்கு மேல் 2,900 கி.மீ. வரை உள்ளது. இந்தப் பகுதியின் வெப்பநிலை, 3,000 டிகிரி செல்சியஸ். புவியின் மேலோடு, கவசம் இரண்டையும் பிரிக்கும் பகுதி 'மோேஹா பிரிக்கும் பகுதி' (Moho Discontinuity - மோஹோ டிஸ்கன்டினியுட்டி) எனப்படும்.
3. கருவம் (Core - கோர்)
கவசப் பகுதிக்குக்கீழே, 2,900 கி.மீ. முதல் 6,378 கி.மீ. வரை உள்ள பகுதி. பூமியின் உள் மைய அடுக்கான இது, சுமார் 350 கி.மீ. ஆரம் உடையது. இது 'பேரிஸ்பையர்' (Barysphere) எனப்படுகிறது. இந்தப் பகுதியில், 80 சதவீதம் நிக்கல் (Nikel), ஃபெரஸ் (Ferrous) (இரும்பு) போன்றவை உள்ளன. இதனால் இது, 'நைஃப்' (NIFE) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் வெப்பநிலை, 6,000 டிகிரி செல்சியஸ். புவியின் கவசம், கருவம் இரண்டையும் பிரிக்கும் பகுதி 'கட்டன்பெர்க் பிரிக்கும் பகுதி' (Gutenberg Discontinuity - கட்டன்பெர்க் டிஸ்கன்டினியுட்டி) எனப்படும்.
வெளிக்கருவம் (Outer Core - அவுட்டர் கோர்), உட்கருவம் (Inner Core - இன்னர் கோர்) என, இது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து,
5,150 கி.மீ. வரை உள்ள பகுதி வெளிக்கருவம். இப்பகுதி திரவ நிலையில் உள்ளது. இதற்குக் கீழாக, 5,150 கி.மீ. முதல் 6,378 கி.மீ. வரை உள்ள பகுதி, உட்கருவம் எனப்படும். உட்கருவம், வெளிக்கருவம் இரண்டையும் பிரிக்கும் பகுதி, 'லெக்மன் இடைவெளி' (Lehmann Discontinuity - லெக்மன் டிஸ்கன்டினியுட்டி) எனப்படுகிறது.
- ப.கோபாலகிருஷ்ணன்
ஆஸ்திரிய புவியியலாளர் சூயஸ் (suess), மேல் ஓடு, கவசம், கருவம் ஆகியவற்றுக்கு, சிமா, சியால், நைஃப் என்று பெயரிட்டார்.