
'பைக்நோநோடிடே' குடும்பத்தைச் சேர்ந்த பாடும் பறவை. உடலின் அடிப்பகுதி வெண்மை நிறத்திலும், மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். கொண்டை, சிவப்பு நிற மீசையை உடையது. மரக்கிளைகளில் அமர்ந்தபடி, சத்தமாகப் பாடுவது போல ஒலி எழுப்பும். பழங்களையும், சிறு பூச்சிகளையும், மலர்களில் உள்ள தேனையும் முதன்மை உணவாகக் கொள்கிறது. விஷத்தன்மை உடைய விதைகளையும் உண்கிறது. பெரும்பாலும் ஜோடியாகவே இவை தென்படும். புதர், சிறு மரம், உயரமான சுவர் போன்ற பகுதிகளில் கூடு அமைக்கும். கூடு, கோப்பை வடிவில் இருக்கும். சிறு சுள்ளிகள், வேர்கள், புற்கள், மரப்பட்டைகள், காகிதம், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றால் கூடு கட்டும்.
இந்தியாவில், வட மாநிலங்களில் டிசம்பர் முதல் மே வரையிலும், தென் மாநிலங்களில் மார்ச் முதல் அக்டோபர் வரையிலும், இவற்றின் இனப்பெருக்கக் காலம். ஆண் பறவை, கொண்டையை அசைத்தும், தலை குனிந்தும், வாலை விரித்தும், சிறகுகளை காலருகே வைத்தும், பெண் பறவையைக் கவர்கிறது. இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடும். முட்டை பழுப்பு நிறத்திலும், புள்ளிகளுடனும் காணப்படும். முட்டை 21 மி.மீ. வரை இருக்கும். அடைகாக்கும் காலம் 12 நாட்கள். குஞ்சுகள் இறகு இல்லாமல் பிறக்கின்றன. அவற்றுக்கு புழு பூச்சிகளை உணவாக அளிக்கின்றன. இரு பாலினமும் குஞ்சுகளைப் பராமரிக்கின்றன. காகம், செண்பகப் பறவை போன்றவை இவற்றின் முட்டைகளை வேட்டையாடுகின்றன. மலைக் காடுகளிலும், நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. மித வெப்பமான பகுதிகளை வாழிடமாகக் கொண்டது. செல்லப் பறவையாகக் கூண்டில் அடைத்து வளர்க்கப்படுகிறது. ஆசியா முழுக்க பரவலாகக் காணப்படுகின்றன.
செம்மீசை சின்னான்
ஆங்கிலப் பெயர்: 'ரெட் விஸ்க்கர்டு புல்புல்' (Red-whiskered Bulbul)
உயிரியல் பெயர்: 'பைகோநோடஸ் ஜோகோசஸ்' (Pycnonotus Jocosus)
வேறு பெயர்கள்: சிவப்பு மீசை சின்னான், புல்புல் குருவி, கொண்டைக் குருவி
நீளம்: 20 செ.மீ.
ஆயுட்காலம்: 11 ஆண்டுகள்