sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ஒரு சிலையின் வரலாறு

/

ஒரு சிலையின் வரலாறு

ஒரு சிலையின் வரலாறு

ஒரு சிலையின் வரலாறு


PUBLISHED ON : டிச 12, 2016

Google News

PUBLISHED ON : டிச 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலு இன்று முழுக்க என்னை நிற்கவைத்ததில், கால்வலி வந்துவிட்டது. கட்டுமான நிபுணர் ஈஃபல் பிறந்த நாள் இந்த வாரம் வருகிறது. அதையொட்டி அவர் உருவாக்கிய சிலையைப் போல தானும் ஒன்றைச் செய்யப் போவதாகவும், அதற்கு நான் தான் மாடலாக நிற்க வேண்டுமென்றும் நச்சரித்தான்.

எந்தச் சிலை என்று கேட்டேன். அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலை என்றான். அதை உருவாக்கிய சிற்பி பர்த்தோல்டியாச்சே, ஈஃபல் இல்லையே என்றது வாலு. ஈஃபல்தான் அந்த சிலைக்குள்ளே இருக்கும் வலுவான இரும்பு எலும்புக் கூடு மாதிரியான அமைப்பை உருவாக்கினார். அதன் மீதுதான் தகடுகளை ஒட்டி சிலை செய்திருக்கிறார்கள் என்றார் ஞாநி மாமா.

“சிலையின் போட்டோவை மாதிரியாக வைத்துக் கொண்டு செய்ய வேண்டியதுதானே, ஏன் என்னை நிற்கச் சொல்கிறாய்?” என்று பாலுவிடம் கேட்டேன். யாராவது அசல் நபர் மாடலாக நின்று அதைப்பார்த்து சிலை செய்தால்தான், இன்னும் சிறப்பாக வரும் என்றார் மாமா. மெரீனா கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையில், நான்கு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இருவருக்கு மாடலாக இருந்தது, அப்போது ஓவியக் கல்லூரி மாணவராக இருந்த ஓவியர் ராமு. மீதி இருவருக்கு மாடல், கல்லூரி வாட்ச்மேன் சீனிவாசன். கண்ணகி சிலைக்கு, நடிகை கல்பனா மாடல். கயத்தாறில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு போஸ் கொடுத்தவர், நடிகர் சிவாஜி கணேசன் என்றார் மாமா.

சுதந்திர தேவி சிலைக்கு மாடல் பர்த்தோல்டியின் அம்மாவும் சிநேகிதியும் என்றது வாலு. “அம்மாவைக் கேட்டால், போடா உனக்கு வேற வேலையில்ல. எனக்கு ஏராளமான வேலை இருக்கு, என்பார். அதனால்தான் என் பிரிய சிநேகிதியான உன்னைக் கேட்கிறேன்” என்று ஐஸ் வைத்து, என்னை நிற்கவைத்துவிட்டான் பாலு.

சுதந்திர தேவி சிலைக்கு போஸ் கொடுப்பதே, ஒரு பெருமையான விஷயம்தான். அந்த சிலை, பிரான்ஸ் நாடு அமெரிக்காவுக்கு பரிசாகக் கொடுத்த சிலை. அமெரிக்கா விடுதலையாகி நூறாண்டுகள் ஆனபோது, பிரான்சில் இருந்த சட்டப் பேராசிரியர் லபோலே என்பவர், பிரான்சும் அமெரிக்கா மாதிரி விரைவில் குடியரசாக வேண்டுமென்று போராடிக் கொண்டிருந்தவர். அவர்தான் இப்படி ஒரு சிலையை பரிசாகத் தரவேண்டுமென்ற யோசனையை, தன் நண்பரும் சிற்பியுமான பர்த்தோல்டியிடம் சொன்னார்.

சிலையை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டதால், நிறைய பணம் தேவைப்பட்டது. அதை நன்கொடையாக திரட்டினார்கள். சிலையின் ஒவ்வொரு பாகத்தையும் செய்தபிறகு, அந்த பாகத்தை மட்டும் கண்காட்சியில் வைத்து, பார்ப்பதற்கு டிக்கட் போட்டு வசூல் செய்தார்கள். சிலையில் தீப்பந்தம் பிடித்திருக்கும் கையைத்தான் முதலில் செய்தார்கள். அதை அமெரிக்காவில் ஃபிலடெல்ஃபியாவில் கண்காட்சியில் வைத்து, வசூல் நடத்தினார்கள். அந்தக் கையை, பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பவே, 21 பெட்டிகள் தேவைப்பட்டன. அவ்வளவு பிரம்மாண்டம்.

அடுத்து, சிலையின் தலையை மட்டும், பாரிசில் கண்காட்சியில் வைத்து பணம் வசூலித்தார்கள். சிறப்பு லாட்டரி குலுக்கல் நடத்தினார்கள். சிலையின் களிமண் பொம்மை மாடல்களை விற்று பணம் திரட்டியிருக்கிறார்கள். அப்படியும் போதுமான பணம் சேரவில்லை.

ஏழரை லட்சம் டாலர்தான் கிடைத்தது. பிரான்சில்தான் அதிக வசூல். அமெரிக்காவில் கிடைத்தது, முதலில் ஒண்ணேமுக்கால் லட்சம் டாலர்தான்.

ஒருவழியாக, 1876ல் தொடங்கின சிலை வேலை, எட்டு ஆண்டுகள் கழித்து முடிந்தது. இப்போது அதை நியூயார்க் அருகே இருக்கும் குட்டித்தீவில் கொண்டு வந்து வைக்க, அங்கே பீடம் கட்டவேண்டும். அதற்கு மட்டும் 24 ஆயிரம் டன் கான்கிரீட் தேவைப்பட்டிருக்கிறது. மறுபடியும் பணம் இல்லை.

“ஒரு பத்திரிகையாளர்தான், பண நெருக்கடியை தீர்த்தார்” என்றார் மாமா.

“யார் அவர் அவ்வளவு பணக்கார பத்திரிகையாளர்?” என்று கேட்டேன்.

“அவர் பெரிய பணக்காரர் இல்லை. ஆனால், அவர் நடத்திய பத்திரிகையின் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒரு செண்ட் அனுப்பினால்கூட, அவர் பெயரை வெளியிடுவேன் என்று அறிவித்தார். நிறைய பள்ளிக் குழந்தைகள்கூட அரை டாலர், ஒரு டாலர், 10 செண்ட் என்றெல்லாம் பணம் அனுப்பினார்கள். மொத்தமாக, ஒரு லட்சம் டாலர் குவிந்தது. இதை சாதித்தவர் புலிட்சர். வேர்ல்ட் பத்திரிகையின் ஆசிரியர்.”

“சுதந்திர தேவி சிலைக்கருகேயே அவருக்கு, பர்த்தோல்டி, லபோலே, ஈஃபல், எம்மா ஆகியோருக்கு, சிலைகள் இருக்கின்றன. சுதந்திர தேவி சிலை மொத்தம் 300 அடி உயரம். இவர்களுடைய சிலைகள் ஒவ்வொன்றும், மூன்றடிதான். கம்பியால் செய்தவை. நான் போனபோது, தேடிப் போய் பார்த்தேன்” என்றார் மாமா.

“எம்மா யார்?” என்றேன்.

“எம்மா ஒரு கவிஞர். சுதந்திர தேவி சிலையைப் பற்றி, அவர் ஒரு கவிதை எழுதினார். 'உலகம் முழுக்க வெறுத்து ஒதுக்கப்படும் ஏழைகளே என்னிடம் வாருங்கள். உங்களுக்கு நான் வெளிச்சம் காட்டுகிறேன். தங்கக்கதவை திறந்து வைக்கிறேன்.' என்று அவர் எழுதிய கவிதை, சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது” என்றார் மாமா.

“நேரில் பார்க்க அந்த பிரம்மாண்டமான சிலை எப்படி இருந்தது?” என்று கேட்டேன்.

“பல விஷயங்கள் படிக்க பிரமிப்பாக இருக்கும். நேரில் கொஞ்சம் ஏமாற்றிவிடும். தாஜ்மஹால் என்னை ஏமாற்றவில்லை. சுதந்திர தேவி சிலையை நேரில் பார்த்தபோது, எனக்கு அது கொஞ்சம் குள்ளமாக, இந்தியப் பெண் மாதிரி இருப்பதாகத் தோன்றியது. அமெரிக்க, பிரெஞ்ச் பெண் மாதிரி உயரம் இல்லையோ என்று நினைத்தேன். அது காட்சிப் பிழையாகவும் இருக்கலாம். உண்மையில் எனக்கு அங்கே போனபோது, இந்த சிலையைவிட அதிகம் கவர்ந்த விஷயம் இன்னொன்றுதான்.” என்றார் மாமா.

“என்ன அது?”

“சிலை இருக்கும் தீவுக்கு முன் இருப்பது இன்னொரு தீவு. எல்லிஸ் தீவு. அங்கேதான் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு குடியேற வந்தவர்கள், விசா வாங்கி உள்ளே போக வேண்டும். கப்பல், படகுகளில் பல நாடுகளில் இருந்து வந்த ஒன்றரை கோடி பேர், அந்த விசாரணைக் கூடம் வழியேதான் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த வரலாற்றை ஒரு பெரிய மியூசியமாக அங்கே வைத்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் அமெரிக்கர்கள், அங்கே ஆறு தலைமுறை முந்தைய தங்களின் மூதாதையர் பற்றி, அங்கே ஏதாவது தகவல் இருக்கிறதா என்று தேடும் வசதிகூட இருக்கிறது. ஒரு நாள் முழுக்க செலவிட்டாலும், அந்த மியூசியத்தைப் பார்த்து முடிக்க முடியாது.” என்றார் மாமா.

“ஏன் உங்களுக்கு அது பிடித்திருந்தது?”

“ஆரம்பத்தில், விசா கேட்டு வந்தவர்களிடம், பல அமெரிக்க அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஊழல் செய்தது, பாலியல் அத்துமீறல் செய்தது உட்பட எதையும் ஒளிவு மறைவில்லாமல் அதிலே பதிவு செய்திருக்கிறார்கள். அதுதான் காரணம்” என்று மாமா சிரித்தார்.

பாலு சிலையை முடித்துவிட்டான். எல்லாரும் பார்த்தோம்.

“உன்னை மாதிரியும் இல்லை. சுதந்திர தேவி மாதிரியும் இல்லை.” என்று கிண்டல் செய்தது வாலு. “இல்லையில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. பொதுவாக சிலை செய்யும்போது, பெரிய பீடத்தில் வைப்பதாயிருந்தால், அசல் அளவை விட மிகைப்படுத்தி செய்தால்தான், கீழிருந்து பார்க்கும்போது சரியான அளவில் இருப்பதாகத் தோன்றும். அல்லது கைக்கு அடக்கமாக சின்னதாக செய்யும்போது, உடல் உறுப்புகளின் அளவு விகிதங்கள் சரியாக இருக்கிற மாதிரி கவனிக்க வேண்டும். பாலு தொடர்ந்து பயிற்சி செய்தால், நல்ல சிற்பியாக வரலாம். பெரியவனானதும் ஒரு பிரம்மாண்டமான சிலையே கூட செய்யலாம்” என்றார் மாமா.

வாலுபீடியா 1: சுதந்திர தேவி சிலையின் உயரம் 151 அடி. பீடம் 154 அடி. முகத்தில் மூக்கு மட்டும் நான்கடி நீளம். வாய் மூன்றடி அகலம். ஆள்காட்டி விரல் மட்டும் எட்டடி நீளம். கையின் நீளம் 42 அடி. அதில் உயர்த்திப் பிடித்திருக்கும் ஜோதியை சுற்றிலும், ஆட்கள் நிற்கும் அளவுக்கு ஒரு பால்கனியே இருக்கிறது. கிரீடத்தில் இருக்கும் ஜன்னல்கள் வரை செல்ல, உள்ளுக்குள்ளேயே லிஃப்ட் இருக்கிறது. சிலையில் மொத்தம் 300 பாகங்கள். பிரித்து 214 பெட்டிகளில் பிரான்சிலிருந்து, அமெரிக்காவுக்கு அனுப்பி இங்கே மறுபடி இணைத்தார்கள்.

வாலுபீடியா 2: ஈஃபல் கோபுரத்தைக் கட்டிய ஈஃபல் நிறைய ரயில் நிலாஇயக்கங்களையும் தேவாலயங்களையும் கட்டியிருக்கிறார். ஏரோடைனமிக்ஸில் காற்றின் வேகம், தாக்கம் பற்றிய அவரது ஆராய்ச்சிகள் விமானங்களை உருவாக்குவதற்கு பயன்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us