PUBLISHED ON : ஆக 05, 2019

விண்வெளி ஆய்வுகளால் பூமிக்கு என்ன பயன், மக்களுக்குக் கிடைக்கப்போவது என்ன என்பது பற்றிய கேள்விகள் நமக்கு எப்போதும் உண்டு. விண்வெளி ஆராய்ச்சிகளால், பூமியில் வாழும் மக்கள் பல வகையில் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம், சந்திரயான் 2 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வான்வெளி ஆராய்ச்சிகள் பற்றி பல சுவாரசிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தோம். மேலும், இந்த சந்திரயான் ௨ என்ன செய்யப்போகிறது என்பது பற்றிப் பலரும் கேட்கின்றனர். இது குறித்து இஸ்ரோவின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி நெல்லை. சு. முத்துவிடம் பேசினோம்.
சந்திரயான் 2 ஆய்வு தரப்போகும் பயன் என்ன?
நமது அண்டை உலகமான சந்திரன் ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கின்றனர். முன்பு, செவ்வாய்க்கோள் அளவிலான பெரியதோர் பொருள் ஒன்று பூமியின் மீது வந்து மோதியதாகக் கருதப்படுகிறது. அதனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து உடைந்து சிதறிய துண்டுகள் திரண்டு, சந்திரனாக மாறின என்று வானவியலாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய அறிவியல் உண்மைகளைத் தேடும் உன்னத முயற்சியின் தொடக்கம், சந்திரயான் ௨ இன் திட்டம். அடுத்ததாக, நிலாவில் குடியேறும் திட்டங்களின் முன்னேற்பாடு இது.
நீண்ட காலமாகவே நிலாவில் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். இன்றைக்கு சந்திரயான் -1, அந்த சந்தேகங்களைத் தீர்த்திருக்கிறது. அமெரிக்காவின் 'நிலாக்
கண்காணிப்புச் சுற்றுக்கலமும், சந்திரயானின் மினி- சார் எனும் சிறு செயற்கைத் துளை 'ரேடார்' கருவியும் நிலாவில் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தன. அதைக் குடிநீராகப் பயன்படுத்தவும், மின்னாற்பகுத்து ஏவூர்திக்கான ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கவும் மேலும் சில ஆய்வுகள் தேவைப்படும்.
மேலும், நிலாப்பரப்பில் சூரிய வெளிச்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. அதன் வழியே சூரிய மின்சாரம் தயாரிக்கலாம். சூரியகாற்றில் இருந்து கிடைக்கும் ஹீலியம் -3 எனும் விசேஷ ஐசோடோப்புகளின் உதவியால் அணுக்கரு வினைகளால் உந்திப் பறக்கும் ராக்கெட்டுகள் தயாரிக்கலாம். சந்திரனின் நிறையீர்ப்பு விசை என்பது, பூமியின் புவியீர்ப்பு விசையில் 6-இல் ஒரு பங்குதான். உங்கள் எடை பூமியில் 60 கிலோகிராம் என்றால், சந்திரனில் வெறும் 10 கிலோ கிராம்தான். எனவே, சந்திரனில் இருந்து பக்கத்துக் கோள்களுக்குச் செல்வது சுலபம்.
சந்திரயான் 2 விண்கலம், இத்தகைய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குப் பாதை திறந்துவிடும். நிலாவில் முகாம்கள் அமைத்து, மனித இனத்தை அண்டை வீடாகிய செவ்வாயில் குடியேற்றுவது தான் விஞ்ஞானிகளின் அடுத்த இலக்கு.
விண்ணில் செய்யப்போகும் விஷயங்கள் என்ன?
சந்திரயான் 2 விண்கலம் மூலம், நிலாவின் வளிமண்டலச்சூழலை ஆராய்வதும், தண்ணீர் தேடலும், கனிம வளங்களை ஆராய்வதும் தான் முக்கியம்.
'சந்திரயான்- 1, எக்ஸ் கதிர் அலைமாலையளவி' உதவியால், நிலாவில் மக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், கால்சியம், இரும்பு, டைட்டானியம் போன்ற உலோக வளங்களை அளந்து அறியலாம். சந்திரயான் -2, திட்டத்திலும் நிலாவின் கனிமங்களை ஆராய்வதற்குப் 'பெரும்பரப்பு மெல் எக்ஸ்-கதிர் அலைமாலையளவி' இடம்பெறுகிறது. மேலும், நிலாவின் திணைப்படத்தை முழுமையாகவும் வரைந்து வைக்க வேண்டும்.
தென் துருவத்தைத் தேர்வுசெய்ய என்ன காரணம்?
இன்றுவரை விண்வெளி நாடுகள் சென்று இறங்காத நிலாவின் தென் துருவத்தில், சுமுகமாகத் தரை இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம். இதற்கென தென் துருவம் அருகே, 'மன்ஸினஸ் சி' மற்றும் ஸிம்பலியஸ் என்' ஆகிய நிலாப்பள்ளங்களுக்கு இடையே செப்டம்பர் 7ஆம் தேதி தரை இறங்கத் திட்டமிட்டுள்ளனர். சந்திரயான் -1 விண்கலத்தில் இடம்பெற்ற 'சிறு செயற்கைத் துளை ரேடார்' என்ற கருவி, சந்திரனின் தென்துருவக் குழிவுகளில் தண்ணீர் பனிக்கட்டிகளாக உறைந்திருப்பதைக் கண்டுபிடித்தது. ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட இத்தகைய குழிவுகளில் பனிக்கட்டிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பனித்தகடுகளில் ஏறத்தாழ 60 கோடி மெட்ரிக் டன்கள் அளவுக்குத் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது.
